புதன், 3 நவம்பர், 2010

அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள்! ஜெயலலிதா எடுத்த ‘ஏ,பி,சி.’ சர்வே




                  ஜெயலலிதாவின் அரசியல் பணியே தனிதான். காரணம், எவ்வளவு ஆக்ரோஷமான அரசியல் காய்நகர்த்தல்கள் வெளியில் நடந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலையே படாமல், அரசியல் ரீதியாக அவர் செய்யும் ‘சைலன்ட் மூவ்’கள்தான். வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரு மாநில தேர்தல் தோற்றத்தைவிட, டெல்லியில் புதிய கூட்டணி உருவாகுமோ என்ற பரபரப்பையும் இந்தியா முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறது.

                     அதுவும் தேர்தல் நெருங்க நெருங்க ஜெயலலிதாவின் செயல்பாடுகள் அத்தனையும் டெல்லியில் கவனிக்கப்படுகிறதோ இல்லையோ, தி.மு.க.வால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. காரணம், அ.தி.மு.க.வின் ரகசிய நடவடிக்கைகள் தி.மு.க.வுக்கு போகாத வண்ணம் ஜெயலலிதா வைத்திருக்கிறார் ‘செக்’. அதுதான் இந்தத் தேர்தல் கால திட்டத்தின் முதல்படி என்கிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர்கள்.
அந்த அதிரடி ‘செக்’ எது தெரியுமா? 
                     அ.தி.மு.க.வில் அசைக்க முடியாத மாவட்டச் செயலாளராக, அதுவும் 12 வருடங்கள் தொடர்ந்து வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த சேகர்பாபுவை அதிரடியாக, அப்பதவியிலிருந்து நீக்கியிருப்பதுதான். அது மட்டுமல்ல, ‘தி.மு.க.வுக்கு ரகசிய தகவல்களை பரிமாறும், துரோகிகளை மன்னிக்கவே மாட்டேன்’ என்று ஓப்பனாக பேசி, மற்ற அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் பீதிக்குள்ளாக்கி இருக்கிறார். சேகர்பாபு பதவி பறிக்கப்பட்ட நாள் அக்.25. மறுநாளே போயஸ் கார்டனில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அணிகளின் மாநில நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் பா.வளர்மதி வரவே கூடாது என்று போயஸ் கார்டனில் இருந்து உத்தரவு போனதாம். மறுநாளே, வளர்மதியிடம் இருந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பதவியும் காலி.

                    ஏன்? என்று விசாரித்தால் எல்லாம் சேகர்பாபு மற்றும் வளர்மதியின் தி.மு.க. தொடர்புகள் என்கிறார்கள். இதை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா கடுமையாகவே சொல்லி, அனைவரையும் எச்சரித்து இருக்கிறார்.

‘‘உங்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதே நேரத்தில் யாராவது துரோகம் செய்தால் சகித்துக் கொள்ளவே மாட்டேன். கட்சியின் பொறுப்பாளர்களை அடிக்கடி மாற்றுகிறேன் என்று நீங்கள் கருதலாம். இப்படி மாற்றுவதற்கு எனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

யார் இந்த சேகர்பாபு? 
                   வாழ்க்கையில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்தார் என்று எனக்கு தெரியும். கட்சியில் உழைத்த சேகர்பாபுவுக்கு பதவி கொடுத்தேன். இன்று ஒரு என்ஜீனியரிங் கல்லூரியை வாங்கும் அளவுக்கு வசதி வந்துவிட்டது. அதுவும் மதுசூதனனின் அக்கா மகன் ஜெயப்பிரகாஷூடன் கூட்டு சேர்ந்து. வாங்கட்டும். வசதியை பெருக்கிக் கொள்ளட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

                    ஆனால், இங்கே கட்சியில் பதவி வகித்துக்கொண்டு தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார் சேகர்பாபு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தயாநிதி மாறன் வெற்றி பெற்றதற்கு காரணம், இந்த சேகர்பாபுதான். அந்த தொகுதியின் பொறுப்பாளராக இருந்து, சிமென்ட் அதிபர் சீனிவாசனிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு, புரோக்கர் வேலை செய்திருக்கிறார். அப்போதே பதவியிலிருந்து தூக்கியிருப்பேன். சரி, திருந்திவிடுவார் என்று கருதி, அவரை அழைத்து எச்சரித்து அனுப்பினேன்.

                     ஆனால் இன்னும் திருந்தவில்லையே. இங்கிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க. சென்றது எப்படி? செல்வகணபதி செல்ல யார் காரணம்? முத்துசாமியை போக வைத்தது யார்? சேகர்பாபுதான். இங்கே இருந்து, தி.மு.க.வுக்கு தகவல்களை கொடுப்பது மட்டுமில்லை... தன்னை எதிர்க்கிறான் என்பதாலேயே, நம் கட்சிக்காரரை தரக்குறைவாக பேசி அடிக்க சேகர்பாபு யார்? இவர் என்ன சூப்பர் பவர் மாவட்டச் செயலாளரா? இப்போது தெரிகிறதா, ஏன் அவரை பதவியை விட்டு தூக்கினேன் என்று!

                     அதற்காக, தேர்தல் வரும் நேரத்தில் மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிடுவேன் என்று யாரும் பயப்பட வேண்டாம். அதே நேரத்தில், பதவியை பிடிக்க மற்றவர் மீது புகார் அனுப்புவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள். எனக்கு யார் யார் என்ன செய்கிறார்கள் என்று தெரியும். அதற்குள் உங்கள் நடவடிக்கையை திருத்திக் கொள்ளுங்கள். தவறு செய்வதாக நான் கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை நிச்சயம்.

                    தேர்தல் வருகிறது. கூட்டணிக்காக நான் பல பணிகளை செய்து வருகிறேன். காங்கிரஸ் நம்மிடம் வரலாம். வராவிட்டாலும், மாற்று அணி தயாராக இருக்கிறது. நம் கட்சிதான் ஆட்சியில் அமரப் போகிறது. காரணம், பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிக அளவில் என்னிடம் பேசி வருகின்றனர். ‘மக்கள் மனநிலை உறுதியாக மாறும்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். அதிகாரிகள் பேசுவதுதான், நாம் ஆட்சியில் அமரப் போவதற்கு முதல் அறிகுறி.

                        வரும் ஆட்சியில் உங்களில் பலர் மந்திரியாகலாம். அதற்கு நீங்கள் கடுமையாகவும், விசுவாச-மாகவும் உழைக்க வேண்டும். கருணாநிதி தன் குடும்பத்தின் மீது காட்டும் பாசம் தெரிந்தும், அங்கிருக்கும் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் கட்சிக்கு எப்படி விசுவாசமாக இருக்கிறார்கள். ஆனால், எனக்கு குடும்பமே இல்லை. கட்சிக்காகவே உழைத்து வருகிறேன். எனக்கு நீங்கள் விசுவாசமாக உழைக்கக் கூடாதா?’’& என்றெல்லாம் உணர்ச்சிப்பூர்வமாக பேசி முடித்திருக்கிறார் ஜெயலலிதா.

                  கூட்டம் தொடங்குவதற்கு முன்பு வெற்றுத் தாளில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். அதில் ஏதோ தீர்மானம் இயற்றி, கூட்டணிக்கு முயற்சிக்கலாம் அல்லது தி.மு.க.வின் ஊழல் குறித்து எழுதி கவர்னர் மாளிகைக்கு அனுப்பலாம் என்று சொல்லப்படுகிறது.

                       கூட்டத்தின்முடிவில், மாவட்டச் செயலாளர்-களிடம் ஒரு படிவம் தரப்பட்டது. அதில் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என்று மூன்று பகுதிகள் இருந்தன. அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் தொகுதிகளை ‘ஏ’ பகுதியிலும், சில பல முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெறலாம் என்று கருதும் தொகுதிகளை ‘பி’ பகுதியிலும், வெற்றி வாய்ப்பு குறைவு... கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து விடலாம் என்று நினைக்கும் தொகுதிகளை ‘சி’ பகுதியிலும் குறிப்பிடச் சொன்னார் ஜெயலலிதா. அவரது அறிவுரைப்படி இந்த விவரங்களை தங்கள் மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். அதன்படி வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்று கொடுக்கப்-பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மொத்தம் 150&ஐ தாண்டியிருப்பதாக அ.தி.மு.க. தலைமைக் கழக வட்டாரம் சொல்கிறது.

                 ‘‘அந்த விவரங்களின் அடிப்-படையில் தன் மனதில் உள்ள கூட்டணிக் கணக்குகளையும் ஒப்பிட்டு, முதற்கட்டமாக சுமார் 120 தொகுதி-களுக்கு தலா மூன்று பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தனது நேரடி கண்காணிப்பின் கீழ் தயாரிக்கும் வேலைகளில் அம்மா விரைவில் இறங்கப் போகிறார்’’என்றும் கார்டன் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன.

1 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ 4 நவம்பர், 2010 அன்று PM 3:49  

அம்மாவின் ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பினிஷிங்

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP