சனி, 25 செப்டம்பர், 2010

‘‘தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான்!’’ அடித்துச் சொல்லும் ப.சிதம்பரம்                      சென்னையை அடுத்து கோவை தற்போது முக்கியமான அரசியல் களமாக மாறி வருகிறது. இரு கழகங்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் தனது பலத்தைக் காட்ட கோவையில் கடந்த 28-ம் தேதி சனிக்கிழமை பொதுக்கூட்டத்தை கூட்டியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு விழாவும் காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா பொதுக்கூட்டமும், கோவை ஜெயில் மைதானத்தில் நடந்தது.

                             நேருவின் அமைச்சரவையில் பங்குபெற்றவர், காமராஜர் ஆட்சியில் பங்கு-பெற்றிருந்தவர்,பசுமை புரட்சியை முதலில் ஏற்படுத்தியவர், நேருவின் நெருங்கிய நண்பர், என்று பல பெருமைகளுக்கு உரியவர் சி.எஸ்.

                         அப்படிப்பட்டவருக்கு நடந்த விழாவைக் கூட காங்கிரஸ் கட்சிக்-காரர்கள் புறக்கணித்திருப்பது தான் உண்மையான காங்கிரஸ்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                         கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கோவையில் சி.எஸ். க்கு விழா எடுப்பதோடு பொதுக்-கூட்டமும் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்தவுடன்,அதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக மேடை ஏறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

                       ஆனால் இந்த விழாவிலும், பொதுக்-கூட்டத்திலும் கலந்துகொள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன் போன்றவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து கூட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்னர், கோவை மாணவர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் யுவராஜ் என்பவர் கோவை வருகை தரும் தங்கபாலுவிற்கு கறுப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அவரும் மற்றும் ஐந்து காங்கிரஸ் தொண்டர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

                         இதனால் இளங்கோவன் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக கூட்டத்தை புறக்கணித்தனர். அதே போல் கோவை தங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட வாசன் ஆதரவாளர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தங்கபாலு ஆதரவாளர்களும், மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்களும் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசின் நிதியில்தான் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட தங்கபாலு மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க.&காங்கிரஸ் உறவு சிறப்பாக உள்ளதாகவும், இதே நிலை தொடரவேண்டும் என்றுதான் காங்கிரஸ் தலைமையும் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 
 
                     சி.எஸ். எந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியை வளர்க்க பாடுபட்டார் என்பதை குறிப்பிட்டுவிட்டு, மத்திய அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். அதோடு, மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் எந்த மாநில அரசுகளும் திட்டங்களை நிறைவேற்றமுடியாது. அதனால் அனைத்து பெருமைகளும் மத்திய அரசையே சேரும் என்று பேசினார். மேலும் ‘1967 &ல் இழந்த ஆட்சியை மீண்டும் பெற வேண்டும். மீண்டும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். அதற்கு தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும்’ என்று சுருக்கமாக பேசிவிட்டு விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.

பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
 
                  ‘‘எந்தக் கட்சியில் பூசல்கள், கோஷ்டிகள் இல்லை? காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்தே கோஷ்டிப் பூசல்கள் இருந்து தான் வருகிறது. காமராஜர் முதல்வரான போது, சி.சுப்பிரமணியம் இருந்தால் தான் அமைச்சரவைக்கு அழகு என்று கூறி ராஜாஜி அணியில் இருந்த சி.எஸ். க்கு அமைச்சர் பதவியை கொடுத்து அழகு பார்த்தார். அன்று காமராஜர் கோஷ்டிகளைப் பற்றி கவலைப்படாமல், அனைவரையும் அரவணைத்துச் சென்றார். ஆனால் அந்த நிலை இன்று இல்லை. நானும் காங்கிரசில் இந்த கோஷ்டி வளர வேண்டும்... அந்த கோஷ்டி தேய வேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததில்லை.

                    இந்தியாவை காங்கிரஸ் ஆளும்போது தமிழகத்தை ஆள முடியாதா? இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது, ஆனால் தமிழகத்தில் முடியவில்லையே என்ற ஆதங்கம் அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள் மனதிலும் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். 1969ல் இளைஞர் காங்கிரசில் சேர்ந்ததிலிருந்தே எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது. 40 ஆண்டுகளாக இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

                   தமிழக மக்களுக்கு தற்போது தனியொரு கட்சி மீது நம்பிக்கை இல்லை. கூட்டணியைத் தான் நம்புகிறார்கள். மத்தியில் உள்ளது போல் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சியைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், அதுவும் நம்மோடு தான்’’ என்று பேசி முடித்தார் சிதம்பரம்.

கூட்டத்தில் தலைவர்கள் பேசியது குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் சிலர்  கூறியது 
 
                        ‘தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என உண்மையான காங்கிரஸ் தொண்டன் ஒவ்வொருவரும் விரும்பும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மட்டும் இன்றும் தி.மு.க.வின் வாலை பிடித்துக்கொண்டே திரிகிறார்கள். தேர்தலில் வெற்றிபெற்றவுடன் எந்த தொண்டனையும் தி.மு.க.வினர் மதிப்பதில்லை. ஆட்சியில் பங்கு கேட்டாலும் வாயைத் திறப்பதில்லை. எத்தனை காலம் தான் இவர்கள் பின்னாலேயே செல்வது என்று தெரியவில்லை’ என்றனர்.

இளங்கோவன் ஆதரவாளர்கள் சிலர்  கூறியது 
 
                       ‘‘இளங்கோவன் தற்போது தமிழக அரசின் குறைகளையும், செயல்பாடுகளையும் சுட்டிகாட்டி வருகிறார். இது தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் எங்களுக்கு எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுப்பதில்லை. அவர்கள் எங்களை புறக்கணிக்க திட்டமிட்டதால் நாங்களே ஒதுங்கிகொண்டோம். நாங்களும் இதில் கலந்துகொண்டிருந்தால் நல்ல கூட்டம் கூடியிருக்கும்’’ என்றதோடு முடித்துகொண்டனர். மூத்த தலைவர் ஒருவருக்காக நடந்த விழாவிலும், காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்திலும் கூட காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோஷ்டி பூசலை பதிவு செய்யத் தவறவில்லை. அடையாளத்தை மறைக்க முடியுமா?

Read more...

புதன், 22 செப்டம்பர், 2010

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்:ஆசாத்

Updated : 22 Sep 2010 04:24:19 AM IST


சென்னை சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டத்தில் பேசுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கேகே.வீ. தங்கபாலு,
சென்னை:
 
                   வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், அக்கட்சியின் தமிழகப் பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத் நம்பிக்கை தெரிவித்தார்.காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியது:வரும் 
 
                      அக்டோபர் 9-ம் தேதி திருச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவராக 4-வது முறையாக பொறுப்பேற்றுள்ள சோனியா காந்திக்கு தமிழகத்தின் சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிப்பதென முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தமிழகத் தலைவர்களை நினைவுகூரும் வகையில் இந்தப் பொதுக்கூட்டம் அமையும். பாஜக எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 
 
                   திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைய உள்ளனர்.மத்திய, மாநில அரசுகள் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதனை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்காக கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அதற்காக கட்சி நிர்வாகிகள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். 
 
                 வரும் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது. அவரவர் எல்லையைத் தாண்டக் கூடாது: காங்கிரஸ் மிகப்பெரிய ஜனநாயகக் கட்சியாகும். எனவே, இங்கு பல்வேறு விதமான கருத்துகள் வருவது சகஜமானது. ஆனால், கட்சியைப் பாதிக்கும் வகையில் வெளிப்படையாக யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. லட்சுமண ரேகையை யாரும் தாண்டக் கூடாது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. அது கட்சியின் உள் விவகாரமாகும்.
 
                 நவம்பர் 19-ம் தேதி ராகுல் காந்தி வருகை: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கட்சியைப் பலப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவரது முயற்சியால் இளைஞர் காங்கிரஸ் பலம் பெற்று வருகிறது. தமிழக இளைஞர் காங்கிரஸôர் மேற்கொள்ளும் பாத யாத்திரை மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தொடங்குகிறது. அனைத்து மாவட்டங்களின் வழியாகவும் செல்லும் இந்த பாத யாத்திரை இந்திரா காந்தி பிறந்த நாளான நவம்பர் 19-ம் தேதி திருச்சியில் நிறைவு பெறும். நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இளைஞர் காங்கிரஸ் நடத்தும் இந்த பாத யாத்திரை வெற்றிகரமாக அமைய காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், அமைப்புகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் குலாம் நபி ஆசாத்.
 
                    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், எம். கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் டி. யசோதா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கார்த்தி சிதம்பரம், கே. சிரஞ்சீவி, மக்களவை உறுப்பினர்கள் கே.எஸ். அழகிரி, விஸ்வநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

யாருடன் கூட்டணி : விஜயகாந்த் பேச்சுசென்னை :

                   "கூட்டணி குறித்து எனது தொண்டர்களை கேட்காமல் நான் எதையும் செய்ய மாட்டேன்' என, சென்னையில் நடந்த முப்பெரும் விழாவில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

                    வடசென்னை மாவட்ட தே.மு.தி.க., சார்பில் முப்பெரும் விழா சென்னை திரு.வி.க.,நகரில் நடந்தது.  இதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில இளைஞரணி செயலர் சுதீஷ், வடசென்னை மாவட்ட செயலர் யுவராஜ், பகுதி செயலர் லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த பேசியது:

                   ஈ.வெ.ரா., அண்ணாதுரை பெயர்களை சொல்லி, தி.மு.க., தலைவர் கருணாநிதி மக்களை ஏமாற்றி வருகிறார். மனிதர்களுக்குள் சாதி, மதம் மற்றும் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது என்றவர் ஈ.வெ.ரா., ஆனால்,  மக்களுக்குள் மோதலை ஏற்படுத்தி குளிர் காய்பவர் கருணாநிதி.அம்பேத்கர் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி.  எனது  விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலையை வைக்கவிடாமல் தடுத்து விட்டனர்.  அவரை கேட்டால் அம்பேத்கரையும் நான் அறிவேன் என்பார். இறந்தவர்களை எல்லாம் எனக்குத் தெரியும்; பழகினேன் என்று பொய் சொல்வார்.  வீணர்கள் என்று சொல்லும் கருணாநிதி, தைரியம் இருந்தால் தே.மு.தி.க., என்று சொல்லட்டுமே?

                             எதையும் தாங்கும் இதயம் அவருக்கு இல்லை. ஆனால், எதையும் தாங்கும் இதயம் இருப்பதாக மக்களை ஏமாற்றுகிறார்.  எனது விருதகிரி படத்தை வெளிவரவிடாமல் பல்வேறு வகையில் இடையூறு செய்கின்றனர். ஆனால், அவர்களோ மக்கள் பணி என்று சொல்லி படத்தயாரிப்பில் ஈடுபட்டு, திரைப்படத் தொழிலாளர்களையும் வதைக்கின்றனர். கேட்டால் பேரனுக்கு கொடுத்த பாக்கெட் மணியில் படத்தை தயாரிப்பதாக கூறுகிறார்கள். செம்மொழி மாநாட்டால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?  அரசு கேபிள் டிவி என்னவாயிற்று. இன்று கலர் டிவி கொடுத்தவர்கள்;அதற்கான இலவச கேபிள் டிவி இணைப்பு தராமல் கட்டணம் வசூலிக்கின்றனர்.  குழந்தைகளுக்கு சத்துணவாக ஐந்து முட்டை போடுவதாக சொல்கிறார். உண்மை அதுவல்ல. தனது சொத்தை காப்பாற்றிக் கொள்ளவே முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். தொடர்ந்து முட்டை போடுகிறோம் என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.

                                  இன்னும் இவர்களுக்கு ஓராண்டில் மக்கள் ஒட்டுமொத்த மொட்டை போடுவார்கள். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 66 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், 93 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. கருணாநிதியும், அவரது மகளும் 4.5 லட்சம் பேருக்கு வேலை  கொடுத்ததாக சொல்கிறார்கள். அப்படியென்றால் கூட 61.5 லட்சம் பேருக்கு யார் வேலை கொடுப்பது. ஊனமுற்றவர்களை மாற்று திறனாளிகள் என அழைக்க வேண்டும் என்றார். இது நல்ல விஷயம்தான். ஆனால், அவர்களுக்கு மூன்று சதவீத வேலை வாய்ப்பை தருவாரா? நான் நினைத்தால் கூட்டணி அமைத்து எத்தனை கோடி வேண்டுமானும் சம்பாதித்திருப்பேன். மக்கள் சேவைக்காக எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் இழப்பேன். கூட்டணி குறித்து எனது தொண்டர்களை கேட்காமல் நான் எதையும் செய்ய மாட்டேன். நம்ம வழி ஒரே வழி. அது மக்களுக்கு சேøவை செய்யும் நேர் வழி.இது முப்பெரும் விழா அல்ல; கருணாநிதி ஆட்சிக்கு முடிவு கட்டும் விழா.  இவ்வாறு விஜயகாந்த பேசினார்

தே.மு.தி.க., பொதுக்கூட்டம் :  

                   வடசென்னை மாவட்ட தே.மு.தி.க., சார்பில், ஈ.வெ.ரா., அண்ணாதுரை பிறந்தநாள் விழா மற்றும் தே.மு.தி.க., ஆறாம் ஆண்டு துவக்க விழாவின் பொதுக்கூட்டம் திரு.வி.க., நகரில் நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில இளைஞரணி செயலர் சுதீஷ், வடசென்னை மாவட்ட செயலர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏழைகளுக்கு உதவும் விஜயகாந்த நல்வாழ்வு திட்டத்தின் துவக்க விழா தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுதினம் நடைபெறுகிறது. அதற்கான திட்டத்தை விஜயகாந்த நேற்று அறிமுகப்படுத்தினார்.முன்னதாக, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுக்கூட்டத்தில், விஜயகாந்திற்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read more...

தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார்


தூத்துக்குடி:
 
               தி.மு.க.வில் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து செயல்படும் என, அக் கட்சியின் தலைவர் ஆர். சரத்குமார் கூறினார். 
 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில் சரத்குமார் பேசியது:
 
                  தமிழகத்தில் காமராஜர்  ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு சமத்துவ மக்கள் கட்சி செயல்பட்டுக்  கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்களைப்  பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்கள் எப்படி  வாழ்கிறார்கள் என்பதை ஒரு குழுவை அனுப்பி கண்காணிக்க வேண்டும். இங்கே பேசியவர்கள் சமத்துவ கட்சியை ஜாதி கட்சியாக மாற்ற வேண்டும் என்றார்கள். 
 
                     இது அவர்களுடைய குமுறல். அவர்களது கருத்தை நான் எதிர்க்கவில்லை. பா.ம.க., புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் ஜாதி கட்சிகள்தான். அதே நிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியும் வந்துவிடக்கூடாது என்று நான் எண்ணுகிறேன். சரத்குமார் தி.மு.க.வில் இணைந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். அந்தப் பேச்சுக்கே இடமில்லை. உணர்ச்சியோடு இந்த இயக்கத்தை நடத்தி வருகிறோம். கூட்டணி குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும். சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து செயல்படும். வெற்றி காணும் என்றார் அவர்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வியாழன், 16 செப்டம்பர், 2010

யாருடன் கூட்டணி: மார்க்சிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட்


               கூட்டணி குறித்து தற்போது பேச விரும்பவில்லை என, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்   பேசியது:

               தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு கல்விக் கட்டண விகிதங்களை தீர்மானித்து அறிவித்தது. இதனை தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் தனியார் பள்ளிகள் ஏற்க மறுத்துவிட்டன. அதிக கட்டணங்கள் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை தடுக்க அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்த முகாம்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும். கூட்டணியைப் பற்றி கேட்கிறீர்கள். தற்போது கூட்டணி பற்றி பேச விரும்பவில்லை. தற்போது அரசியல் எதுவும் பேச வேண்டாம். அரசியல் பேச விரும்பவில்லை என்றார்.
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மீண்டும் முதல்வராவார் கருணாநிதி: ஸ்டாலின்


                     
                         மீண்டும் தமிழக முதல்வராவார் கருணாநிதி என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஊட்டி மோனார்க் ஹோட்டலில் இளம் பேச்சார்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமில் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அமைச்சர்கள் துரைமுருகன், பொங்களூர் பழனிச்சாமி, பொன்முடி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, நடிகை குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

                         பயிற்சி முகாமை தொடங்கி வைத்துப் பேசிய மு.க.ஸ்டாலின், இந்த பயிற்சி முகாம் திமுகவின் கொள்கைகளை எப்படி மக்களிடத்தில் கொண்டுபோய் மிக எளிதாக சேர்க்க வேண்டும் எனபதே இந்த முகாமின் குறிக்கோள். பெரியாரும் அண்ணாவும் வளர்த்தெடுத்த இந்தக் கழகத்தை எல்லோரும் இணைந்து மென்மேலும் வளர்க்க வேண்டும். திமுகவின் வரலாறுகளையும், கழகத்தினுடைய தியாகங்களையும் மக்களிடத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

                         சிவகங்கையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற இளைஞன் திமுகவின் வரலாறுகளை படித்துக்கொண்டு கட்சிக்கு அயராறு உழைத்து இறந்துபோனான். அப்படிப்பட்ட உண்மையான தொண்டர்களை பெற்றிருக்கக் கூடியதுதான் திமுக. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதுவரை தமிழக முதல்வராக கருணாநிதி 5 முறை பதவி வகித்துள்ளார். தேர்தலுக்குப் பின்னர் அவர் மீண்டும் தமிழக முதல்வராவார் என துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

34 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும்: அழகிரி

மதுரை:

                  தமிழகத்தில் தொடரும் நலத்திட்டங்களால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் திமுக அணியை வெற்றிபெறச் செய்வார்கள் என, மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்தார். மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் மக்களை செவ்வாய்க்கிழமை நேரடியாகச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். 

பின்னர் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரி அளித்த பேட்டி:  

                    கிராமங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்து மனுக்களைப் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளை கேட்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.தேர்தல் நேரத்திலிருந்தே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றி வருகிறேன். தற்போதும் கிராமங்களில் மக்களைச் சந்திந்தபோது ஏராளமான கோரிக்கைகள் வைத்துள்ளனர். பொதுவான பிரச்னை, குடிநீர் வசதி, சாலை வசதி, சமுதாயக் கூடம் அமைப்பது, பஸ் வசதி, பொதுக் குளியலறை, மயானத்துக்கான பாதை ஏற்படுத்தித் தருவது போன்ற கோரிக்கைகள் தனித்தனியாக பிரித்து விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.மதுரையில் டயர் தொழிற்சாலை: மதுரை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் டன்லப் டயர் தொழிற்சாலை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களிடம் நான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். 

                      திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசி வருவதாக கேள்வி எழுப்பியுள்ளீர்கள். தமிழகத்தில் ஏழை மக்களுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு நலத்திட்டங்களை செய்துவருகிறது.   இந்த நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். விஜயகாந்த் அதுபோன்று கூறுவதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக அணி வெற்றிபெறும் என்றார்.

Read more...

சென்னையில் 6 காங். எம்.எல்.ஏ.க்கள் வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

சென்னை:

                சென்னை மாநகரில் இருந்து குறைந்தது 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு சென்றாக வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் வலியுறுத்தினார். 


                 உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் என். ருக்மாங்கதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கார்த்தி ப. சிதம்பரம் பேசியதாவது:
 


                    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முடியவில்லையே என்ற வருத்தம் 43 ஆண்டுகளாக காங்கிரஸôரிடம் உள்ளது. வருத்தம் இருந்தால் மட்டும் போதாது. தமிழ்நாட்டின் அரசியல் நிலைமைக்கு உகந்த கட்சியாக காங்கிரஸ் செயல்பட வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் அதிக பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும்.  தங்களுக்கென தனித்தனியாக ஊடகங்களை வைத்திருந்த போதிலும்,  திராவிடக் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தவறுவதில்லை.   ஆனால், காங்கிரஸ் கட்சி அத்தகைய பொதுக்கூட்டங்கள் எதுவும் நடத்துவதில்லை. நாம் பொதுக்கூட்டம் போட்டு, நம் கட்சிக்காரர்கள் மைக் பிடித்து, மக்களைப் பார்த்து நேரடியாகப் பேசினால்தான் மக்கள் நம்மோடு இருப்பார்கள்.

               நமது பொதுக்கூட்டங்களில் மாணவர்களுக்கான கல்விக் கடன் உள்ளிட்ட மத்திய அரசின் சாதனைகளைப் பிரசாரம் செய்வதுடன், மாநில அரசின் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிப்பதையும் பிரசாரம் செய்ய வேண்டும். குறிப்பாக, இப்போது மாநிலத்தில் புதிதாக ஓடும் 600 பஸ்கள் மத்திய அரசின் நிதியுதவியில் வாங்கப்பட்டவை.  அண்மையில் சேலத்தில் |130 கோடி செலவில் திறக்கப்பட்ட மருத்துவமனைக்கு மத்திய அரசு |00 கோடி அளித்துள்ளது. இதையெல்லாம் நாம் தவறாமல் பிரசாரம் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசின் சாதனைகளைப் பிரசாரம் செய்யாததால், பெட்ரோல் விலையை உயர்த்தும்போது, எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்யும்போதுதான் மக்கள் மத்திய அரசைப் பற்றி நினைக்கிறார்கள்.

              மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தினாலும், அதற்கு விற்பனை வரி விதிப்பது மாநில அரசுதான். மாநில அரசு விற்பனை வரியைக் குறைத்தால் பெட்ரோல் விலை குறையும். ஆனால்,  இது பற்றி யாரும் பேசாமல், மத்திய அரசை மட்டுமே குறை கூறுகின்றனர். இது பற்றியெல்லாம் காங்கிரஸ் கட்சியினர்தான் பொதுக்கூட்டங்கள் நடத்தி, மக்களிடம் உண்மையை எடுத்துக் கூற வேண்டும்.  இலங்கைப் பிரச்னைக்குக்கூட காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்பது போல தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக  அதிக தியாகம் செய்த கட்சி காங்கிரஸ்தான்.

              காங்கிரஸ் கட்சியின் திட்டப்படி 1987-ல் உருவான ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மட்டும் விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்நேரம் இலங்கையில் தமிழர்களுக்கென ஒரு தனி மாநிலம் உருவாகியிருக்கும். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அதன் முதல்வராக இருந்திருப்பார். ஆனால், அதை கெடுத்தது விடுதலைப் புலிகள்தான்.  இதையெல்லாம் மக்களிடம் காங்கிரஸ் கட்சியினர்தான் கூற வேண்டும்.  தமிழகத்தில் மக்கள் மத்தியில் இப்போதும் காங்கிரஸ் கட்சிக்கென தனி செல்வாக்கு உள்ளது. நம்மை ஒதுக்கிவிட்டு இங்கு எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது.

                இந்த நேரத்தில் நாம் சிலவற்றில் உறுதியாக இருக்க வேண்டும். சென்னை மாநகரில் இப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்தும் தலா 2 எம்.எல்.ஏ.க்கள் வீதம் மொத்தம் 6 எம்.எல்.ஏ.க்களை நாம் சட்டப்பேரவைக்கு அனுப்பியாக வேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கடுமையாக  உழைக்க வேண்டும் என்றார் கார்த்தி ப. சிதம்பரம்.  கே.எஸ். அழகிரி எம்.பி.,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி. யசோதா, என். சுந்தரம், ராம. சுப்புராம், கே. செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்.பி.  பி. வள்ளல்பெருமாள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்  கே.சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more...

திங்கள், 13 செப்டம்பர், 2010

தேமுதிகவின் லட்சியத்தை வரவேற்கிறோம்: பா.ஜ.,

 
                     தி.மு.க.,வை வீழ்த்துவது தான் லட்சியம் என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதை பா.ஜ., வரவேற்கிறது என, மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவிலில்  
பா.ஜ மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்  பேசிய
து :

                 தி.மு.க., ஆட்சி நீடித்தால் தமிழர்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் ஆபத்தாக போய் விடும். தி.மு.க.,வை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும், என்று பா.ஜ., வலியுறுத்தி வந்தது. தற்போது தி.மு.க., வை வீழ்த்துவது தான் லட்சியம் என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதை பா.ஜ., வரவேற்கிறது.

                        இலவசம் கொடுத்தும், போதைக்கு அடிமை ஆக்கியும் மக்களை கொள்ளையடித்து வருகின்றனர். வரும் செப்டம்பர் 20 ல் கருணாநிதி குமரி மாவட்டம் வரும்போது, மத்திய அரசின் துணை விளையாட்டு மையம், ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் செயல்படுத்தப்படும், என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்த இடத்தை மாற்ற, கலெக்டர் வற்புறுத்தி வருகிறார். அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால், கலெக்டர் அறைக்குள்ளேயே பா.ஜ., போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

                       கோவையிலும், திருச்சியிலும் அ.தி.மு.க., விற்கு கூடிய கூட்டத்தை கண்டு, தி.மு.க., சார்பில் போட்டி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் கல்வி உதவித்தொகைக்காக பா.ஜ., சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கூட்டத்தை பார்த்து, தி.மு.க., முப்பெரும் விழா நடத்துகிறது.

                         தி.மு.க., ஆட்சியில் அதிகமாக மிரட்டல்களும், தாக்குதல்களும் நடக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும். ஒரு சப் இன்ஸ்பெக்டரை இரண்டு அமைச்சர்கள் கண்முன் வெட்டி கொலை செய்த சம்பவமும் இந்த ஆட்சியில் தான் நடைபெற்றது. காய்ச்சலால் தமிழ்நாடு ஸ்தம்பித்து போய் உள்ளது. தி.மு.க., ஆட்சி வெளியேறினால்தான் பன்றி காய்ச்சலும் வெளியேறும், என்றார்.

Read more...

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: மு.க.ஸ்டாலின்

 
                          வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரக்கோணத்தில் நடந்த திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,

                            தேர்தல் நேரத்தில் கழகத்தின் வாக்குறுதிகள் வாய்ப்பேச்சாக சொல்லப்படாமல் புத்தகமாகவே அச்சிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தருகிறோம் என்று கூறப்பட்டபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதெல்லாம் நடக்காது. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தரமுடியாது. இது ஏமாற்றும் வாக்குறுதி என கூறினார்.

                        ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தமிழக முதல்வர் கருணாநிதி விழா மேடையிலேயே கோப்புகளை கொண்டுவர சொல்லி ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என கையெழுத்திட்டார். தற்போது ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, இந்த தேர்தலில் கருணாநிதியின் தேர்தல் வாக்குறுதிதான் தமிழகம் முழுவதும் வேட்பாளர் என பாராட்டி அறிவித்தார். வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும் என கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.

                      2006ம் ஆண்டு காஞ்சீபுரத்தில் உள்ள கரசங்கால் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கலர் டி.வி. முதல் முதலாக வழங்கப்பட்டது. இந்த டிசம்பர் 20 ந் தேதிக்குள் அனைவருக்குமே கலர் டி.வி. வழங்கப்பட்டு விடும். தேர்தலில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் வாழ்வில் வளம் பெற சொல்லப்படாத வாக்குறுதிகளையும் புதிய திட்டங்களாக முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார்.

                     அவசர காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு செல்ல எண் 108 ஆம்புலன்ஸ் உதவி திட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலமாக ஏராளமானவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 21 லட்சம் வீடுகள் இதன் மூலம் கட்டி தரப்படும். இந்த திட்டத்தை செய்து முடிக்க 6 ஆண்டு காலம் ஆகும்.

                        முதல்கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டும் பணி துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் 30 ந் தேதிக்குள் பயனாளிகளுக்கு இந்த வீடுகள் தரப்படும். மீதம் உள்ள வீடுகள் வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும். தி.மு. கழகம் வரும் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறும். தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று பாக்கி உள்ள வீடுகளையும் கட்டி தருவார். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை சந்திக்க பயப்படாமல் நாங்கள் செல்வோம்.

                    ஏனென்றால் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், ஒவ்வொரு திட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பொதுமக்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றனர். ஆகவே தலைவர் கருணாநிதி மீது தமிழக மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றார்.


Read more...

திமுக மீண்டும் வெற்றிபெறக் கூடாது: விஜயகாந்த்


சென்னை:
 
                   எந்தக் காரணத்தைக் கொண்டும் இன்றைய திமுக ஆட்சி மீண்டும் வராமல் தோற்கடித்து, தமிழக மக்களை மீட்பதே தேமுதிகவின் புனிதப் பணியாகும் என்று அக் கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா இந்த மாதம் 14-ம் தேதி வருவதை ஒட்டி சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 
                     "கட்சி தொடங்கி சில மாதங்களில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 8.5 சதவீத வாக்குகளும், அடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் 11 சதவீத வாக்குகளும் தேமுதிகவுக்கு கிடைத்தன.தனித்துப் போட்டியிட்டும் மக்கள் தொடர்ந்து ஆதரிப்பதற்கு காரணம், நாம் யாருக்கும் இடையூறு செய்வதில்லை என்பதுதான். வணிக நிறுவனங்களை மிரட்டிப் பணம் வசூலிப்பதில்லை. இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக இருந்தாலும் வன்முறைகளில் ஈடுபடுவது இல்லை. உழைப்பினால் சம்பாதிக்கும் பணத்திலேயே கட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம், ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
                தமிழக அரசியலில் சில குடும்பங்கள் குபேரர்களாகவும், கோடிக்கணக்கான குடும்பங்கள் வறுமையிலும் உழன்று வருகின்றன.திமுக அரசின் புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் 52 லட்சம் ஏழைக் குடும்பங்கள் உள்ளன. இவற்றில் பரம ஏழைகளாக இருப்போர் 19 லட்சம் குடும்பத்தினர்.இந்தச் சூழ்நிலையில் வரும் தேர்தலிலாவது ஆட்சி மாறாதா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தேமுதிகவிடம் அவர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ப நாம் ஆற்ற வேண்டிய பணி மகத்தானது.வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் புதிய வரலாறு படைக்கும் வகையில் நம் உழைப்பு அமைய வேண்டும்.
 
                       எக்காரணத்தைக் கொண்டும் திமுக ஆட்சி மீண்டும் வராமல் அதைத் தோற்கடித்து, தமிழ்நாட்டு மக்களை மீட்பதே நம்முடைய புனிதப் பணியாகும். இன்றைய முதல்வர் கருணாநிதியின் கனவு பலிக்காது.மாற்றார்கள் நம் மீது அவதூறு பரப்புவார்கள். வீண் பழி சுமத்துவார்கள், நமக்குள்ளேயே பேதத்தை உருவாக்குவார்கள். ஆசை காட்டுவார்கள். அச்சமூட்டுவார்கள். அவை அனைத்தையும் துச்சமென முறியடித்து தேர்தலில் தேமுதிகவை வெற்றிபெறச் செய்வது நம் கடமையாகும்' என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

30-40 தொகுதிகளுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம்: விஜயகாந்த்

 ஸ்ரீவில்லிபுத்தூர்:

                    வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 30, 40 தொகுதிகளுக்காக எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார். தே.மு.தி.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம், சிவகாசி பஸ் நிலையம் அருகே உள்ள திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது:

 
                       வரும் தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது பற்றி கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் குழப்பம் அடையத் தேவையில்லை. நிச்சயமாக 30, 40 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். மேலும், தே.மு.தி.க. அமைக்கும் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கும்.  தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நான் ஏன் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும்? மாநிலத்தில் வறுமையை ஒழிப்பதிலும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு தருவதிலும் இரு கட்சிகளுமே தோல்வியடைந்து விட்டன.

             வரும் தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்று தி.மு.க. தப்புக் கணக்கு போடுகிறது. அது நிச்சயம் வரும் தேர்தலில் நிறைவேறாது. தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் விவசாயிகளை ஏமாற்றி, அவர்களது வாக்குகளைக் கவருவதற்காகவே இலவச பம்ப்செட் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. விவசாயத்துக்குத் தேவையான மின்சாரத்தை ஒழுங்காக வழங்க முடியாத கருணாநிதி, பம்ப்செட் வழங்கப் போவதாக அறிவித்திருப்பது குறுக்கு வழியில் விவசாயிகளின் வாக்குகளைப் பெறவே என்பது எங்கள் குற்றச்சாட்டாகும்.மின்சார உற்பத்தியை அதிகரிக்க இந்த ஆட்சியில் இதுவரை நிரந்தரத் திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை.

                    சேது சமுத்திரத் திட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது, முதல்வர் கருணாநிதி மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதால்தான் இப்போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றார் விஜயகாந்த்.

                   கூட்டத்தில், மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் மாஃபா க. பாண்டியராஜன், துணைச் செயலாளர் ஆஸ்டின், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், மகளிர் அணிச் செயலாளர் ரெஜினா பாப்பா உள்ளிட்டோர் உரையாற்றினர்.


கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

About This Blogஇந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP