வியாழன், 16 செப்டம்பர், 2010

சென்னையில் 6 காங். எம்.எல்.ஏ.க்கள் வேண்டும்: கார்த்தி சிதம்பரம்





சென்னை:

                சென்னை மாநகரில் இருந்து குறைந்தது 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு சென்றாக வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் வலியுறுத்தினார். 


                 உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் என். ருக்மாங்கதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கார்த்தி ப. சிதம்பரம் பேசியதாவது:
 


                    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முடியவில்லையே என்ற வருத்தம் 43 ஆண்டுகளாக காங்கிரஸôரிடம் உள்ளது. வருத்தம் இருந்தால் மட்டும் போதாது. தமிழ்நாட்டின் அரசியல் நிலைமைக்கு உகந்த கட்சியாக காங்கிரஸ் செயல்பட வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் அதிக பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும்.  தங்களுக்கென தனித்தனியாக ஊடகங்களை வைத்திருந்த போதிலும்,  திராவிடக் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தவறுவதில்லை.   ஆனால், காங்கிரஸ் கட்சி அத்தகைய பொதுக்கூட்டங்கள் எதுவும் நடத்துவதில்லை. நாம் பொதுக்கூட்டம் போட்டு, நம் கட்சிக்காரர்கள் மைக் பிடித்து, மக்களைப் பார்த்து நேரடியாகப் பேசினால்தான் மக்கள் நம்மோடு இருப்பார்கள்.

               நமது பொதுக்கூட்டங்களில் மாணவர்களுக்கான கல்விக் கடன் உள்ளிட்ட மத்திய அரசின் சாதனைகளைப் பிரசாரம் செய்வதுடன், மாநில அரசின் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிப்பதையும் பிரசாரம் செய்ய வேண்டும். குறிப்பாக, இப்போது மாநிலத்தில் புதிதாக ஓடும் 600 பஸ்கள் மத்திய அரசின் நிதியுதவியில் வாங்கப்பட்டவை.  அண்மையில் சேலத்தில் |130 கோடி செலவில் திறக்கப்பட்ட மருத்துவமனைக்கு மத்திய அரசு |00 கோடி அளித்துள்ளது. இதையெல்லாம் நாம் தவறாமல் பிரசாரம் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசின் சாதனைகளைப் பிரசாரம் செய்யாததால், பெட்ரோல் விலையை உயர்த்தும்போது, எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்யும்போதுதான் மக்கள் மத்திய அரசைப் பற்றி நினைக்கிறார்கள்.

              மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தினாலும், அதற்கு விற்பனை வரி விதிப்பது மாநில அரசுதான். மாநில அரசு விற்பனை வரியைக் குறைத்தால் பெட்ரோல் விலை குறையும். ஆனால்,  இது பற்றி யாரும் பேசாமல், மத்திய அரசை மட்டுமே குறை கூறுகின்றனர். இது பற்றியெல்லாம் காங்கிரஸ் கட்சியினர்தான் பொதுக்கூட்டங்கள் நடத்தி, மக்களிடம் உண்மையை எடுத்துக் கூற வேண்டும்.  இலங்கைப் பிரச்னைக்குக்கூட காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்பது போல தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக  அதிக தியாகம் செய்த கட்சி காங்கிரஸ்தான்.

              காங்கிரஸ் கட்சியின் திட்டப்படி 1987-ல் உருவான ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மட்டும் விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்நேரம் இலங்கையில் தமிழர்களுக்கென ஒரு தனி மாநிலம் உருவாகியிருக்கும். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அதன் முதல்வராக இருந்திருப்பார். ஆனால், அதை கெடுத்தது விடுதலைப் புலிகள்தான்.  இதையெல்லாம் மக்களிடம் காங்கிரஸ் கட்சியினர்தான் கூற வேண்டும்.  தமிழகத்தில் மக்கள் மத்தியில் இப்போதும் காங்கிரஸ் கட்சிக்கென தனி செல்வாக்கு உள்ளது. நம்மை ஒதுக்கிவிட்டு இங்கு எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது.

                இந்த நேரத்தில் நாம் சிலவற்றில் உறுதியாக இருக்க வேண்டும். சென்னை மாநகரில் இப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்தும் தலா 2 எம்.எல்.ஏ.க்கள் வீதம் மொத்தம் 6 எம்.எல்.ஏ.க்களை நாம் சட்டப்பேரவைக்கு அனுப்பியாக வேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கடுமையாக  உழைக்க வேண்டும் என்றார் கார்த்தி ப. சிதம்பரம்.  கே.எஸ். அழகிரி எம்.பி.,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி. யசோதா, என். சுந்தரம், ராம. சுப்புராம், கே. செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்.பி.  பி. வள்ளல்பெருமாள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்  கே.சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2 கருத்துகள்:

பெயரில்லா,  17 செப்டம்பர், 2010 அன்று AM 8:49  

எல்லாத் தொகுதிகளையுமே குட்டி சிடம்பரத்திற்கும்,இளங்கோவனுக்கும் கொடுத்து விடலாம். அது தான் நல்லது.ஒரு தொகுதியில் கூட டிபாசிட்டாவது கிடைக்குமா என்பதை அவர்கள் பொறுத்திருந்து பார்க்கட்டும்.திராவிட இயக்கங்கள் பொதி சுமக்கும் கழுதைகள் என்று நினைப்போருக்கு நல்ல பாடம் கற்பிக்கலாம். காமராசருடன் காங்கிரசிற்குத் தமிழ்நாட்டில் கல்ல்றை கட்டியாகி விட்டது.அவராலேயே முடியாத்தை இந்தப் பணப்பேய்களா மீட்கப் போகின்றன்?

vinthaimanithan 17 செப்டம்பர், 2010 அன்று PM 7:05  

அப்படியே உணவு தானியங்கள் வீணாவது பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மன்மோகன்சிங் திருவாய் மலர்ந்தருளிய சாதனையையும், அணு ஒப்பந்த நட்ட ஈடு மசோதா நிறைவேற்றிய சாதனையையும் பிரச்சாரம் பண்ணலாமே? நல்லா 'விழும்'பா!

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP