தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார்

தூத்துக்குடி:
தி.மு.க.வில் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து செயல்படும் என, அக் கட்சியின் தலைவர் ஆர். சரத்குமார் கூறினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில் சரத்குமார் பேசியது:
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு சமத்துவ மக்கள் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை ஒரு குழுவை அனுப்பி கண்காணிக்க வேண்டும். இங்கே பேசியவர்கள் சமத்துவ கட்சியை ஜாதி கட்சியாக மாற்ற வேண்டும் என்றார்கள்.
இது அவர்களுடைய குமுறல். அவர்களது கருத்தை நான் எதிர்க்கவில்லை. பா.ம.க., புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் ஜாதி கட்சிகள்தான். அதே நிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியும் வந்துவிடக்கூடாது என்று நான் எண்ணுகிறேன். சரத்குமார் தி.மு.க.வில் இணைந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். அந்தப் பேச்சுக்கே இடமில்லை. உணர்ச்சியோடு இந்த இயக்கத்தை நடத்தி வருகிறோம். கூட்டணி குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும். சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து செயல்படும். வெற்றி காணும் என்றார் அவர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக