திங்கள், 30 ஆகஸ்ட், 2010

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்: பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்

கோவை:

               தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.  

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் விதமாக கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்  பேசியது:

               கோவை அரசியல் கட்சிகளை ஈர்க்கும் மாநகரமாக உள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தங்கள் சக்தியை காட்டும் விதமாக இந்நகரில் கூட்டத்தை நடத்தியுள்ளது. புதிய தலைமுறையை விஜயகாந்த் உருவாக்கி வருகிறார். ஏழை எளியவர்களுக்கு தானும் உதவி செய்து, கட்சியில் உள்ள இளைஞர்களையும் ஏழைகளுக்கு உதவ வழிகாட்டி வருகிறார். தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக தனித் தன்மையோடு தேமுதிக வளர்பிறையாக வளர்ந்து வருகிறது.  

              திமுகவுக்கு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. அக்கட்சி தேர்தலில் தனித்து நிற்க தயாராக இல்லை. அதிமுகவும் அதே நிலையில் தான் உள்ளது. மூன்றாவது தலைமுறை தலைவராக விஜயகாந்த், வரும் 20 ஆண்டுகளுக்கு தமிழக வரலாற்றை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குவார். எனவே தேமுதிகவினருக்கு கடûமையும், பொறுப்பும் உள்ளது. தமிழகத்தின் பிரச்னைகளை தீர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். கவர்ச்சி திட்டங்கள் முன்னேற்றத்தை கொடுக்ககாது. வளர்ச்சித் திட்டங்கள் போட்டால் தான் தமிழகம் முன்னேறும். தமிழகத்தில் வறுமை குறையவில்லை. 

                நாட்டிலேயே அஸ்ஸôம் மாநிலத்திற்கு அடுத்ததாக ஏழைகள் அதிகளவில் தமிழகத்தில் உள்ளனர். ஒரு காலத்தில் கேளரத்தில் உள்ளவர்கள் தான் கூலி வேலைக்கு வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் போனார்கள். இப்போது, தமிழகத்திலிருந்து பல இளைஞர்கள் பிற மாநிலங்களில் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். வெளிநாடுகளுக்கு கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் போவதும் தமிழர்கள் தான்.  தமிழ்நாட்டில், படித்த இளைஞர்களானாலும், படிக்காத இளைஞர்களானாலும் அவர்களுக்கு கைத்தொழில் பயிற்றுவித்து, சொந்தக்காலில் நிற்க வைப்பதன் மூலமாக வறுமையை ஒழிக்க முடியும் என விஜயகாந்த் உறுதிபட தெரிவித்துள்ளார்.

                     2011 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. தேமுதிவினர் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றார்.  நலத்திட்ட உதவியாக தையல் இயந்திரங்கள், சேலைகள், சிலவர் குடங்கள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. கோவை மாநகர் தேமுதிக மாவட்ட செயலர் அர.தமிழ்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.



Read more...

சனி, 28 ஆகஸ்ட், 2010

அதிமுக கூட்டியதை விட அதிக கூட்டத்தை கூட்டவேண்டும்:நேரு


                   திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமயில் வரும் 8ம் தேதி நடைபெறுகிறது. 


                   ’’வருகிற 8-ந்தேதி முதலமைச்சர் கருணாநிதி திருச்சியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டும், அண்ணன் அன்பில் சிலையை திறந்து வைத்தும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கலைஞர் அறிவாலயம் அருகில் மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் அன்பில் சிலையை தலைவர் திறந்து வைக்கிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் மன்னார்புரம் ராணுவ மைதான திடலுக்கு தலைவர் சரியாக மாலை 5 மணிக்கு வந்து விடுவார்.அவர் வரும் வழி எல்லாம் மனித தலைகளாக காட்சி அளிக்கவேண்டும்.

                        திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை 60 வார்டுகளில் இருந்தும் வார்டுக்கு 1000 பேரை அழைத்து வரவேண்டும். புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்காக 1000 பஸ், 1000 வேன்கள் தயாராக இருக்கும். அதன் மூலம் அவர்களையும் அழைத்து வரவேண்டும். திருச்சியில் ஜெயலலிதா பேசிய கூட்டத்தில் தான் அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக அ.தி.மு,.கவினர் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். நமது பலம் என்ன என்பதை நிரூபித்துக்காட்டவேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

Read more...

விஜயகாந்த்தின் வாக்கு வங்கி குறைகிறது: திருமாவளவன்



               திருச்சி கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயற்குழு மாநாடு, திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடைபெற்றது.

                  இம்மாநாட்டிற்கு தலைமை ஏற்று பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அக்டோபர் 10ஆம் தேதி தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லாத அளவுக்கு, இளைஞர்களை திரட்டி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் நிரூபிக்கும் வண்ணம், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும்.

                   தமிழகத்தில் அதிமுக, திமுகவை அடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வங்கிகளை பெற்றுள்ள கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இதை ஏற்றுக்கொள்ள ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் மறுக்கின்றனர்.

                     1999ஆம் ஆண்டு முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வங்கியில் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால் நடிகர் விஜயகாந்த் கட்சி திமுக, அதிமுகவுக்கு பிறகு மாற்று சக்தியாக ஊடகங்கள் தூக்கிப் பிடித்து வருகின்றன.

                          சமீபத்தில் சோலை என்கிற எழுத்தாளர் கட்டுரை எழுதியிருந்தார். 
வர் முதிர்ந்த அரசியல்  அதேபோல தமிழகத்தில் செல்வாக்கு உள்ள அரசியல் தலைவர் பட்டியலில் நான்காம் இடத்தை நமக்கு தந்திருக்கிறார்கள். இப்படி மற்ற ஊடகங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மாற்று சக்தியாக விடுதலைச் சிறுத்தைகளை ஏற்று கொள்ளாத நிலையிலும், தவிர்க்க முடியாமல் சிலர் பதிவு செய்கிறார்கள் என்றார்.
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

பெண்கள் மனது வைத்தால் பாமக ஆட்சிக்கு வரும்: ராமதாஸ்

ஓமலூர்:

              பெண்கள் மனது வைத்தால் பாமக ஆட்சிக்கு வரும் என்று ஓமலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.  பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலின் போது கடைப்பிடிக்கப்பட்ட புதிய பிரசார உத்திகளை அடிப்படையாகக் கொண்டு, பாமக தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மைக்ரோ பிளானிங் முகாமினை நடத்தி வருகிறது.

             இதன்படி ஓமலூர் சட்ட மன்றத் தொகுதியில் ஆக. 23-ம் தேதி முதல் நடைபெற்று வரும் மைக்ரோ பிளானிங் முகாமில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பங்கேற்றுள்ளனர். மைக்ரோ பிளானிங் முகாமின் முக்கிய நிகழ்ச்சியாக பாமகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அணியினருக்கான அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.  ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தீவட்டிப்பட்டியில் அரசியல் பயிலரங்க பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். 

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசியது:  

               தமிழகத்தில் உள்ள நாற்பது சதவீத இளைஞர்களில் பெரும்பாலானோர் 15 வயதிலேயே மது குடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். பின்னர் அப்பழக்கத்திற்கு அடிமையாகி விடும் இளைஞர்களால் கிராம பகுதிகளில் உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு  ரூ.2 ஆயிரத்து 400 முதல்  ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார சீரழிவில் சிக்கித் தவிக்கின்றன. இதுமட்டுமன்றி அளவுக்கு அதிகமான குடிப் பழக்கத்தினால் 25 வயதிலேயே ஏராளமான இளைஞர்கள் போதிய உடல் நலமின்றி உயிரிழக்க நேரிடுகிறது. இது போன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பாமக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது.

             இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாயிலாக அரசியல் பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது. மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினால் விவசாயப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்கப்படுவதை பாமக எதிர்க்கவில்லை. ஆனால் நன்கு விளைச்சல் தரும் விவசாய நிலங்களை விட்டுவிட்டு, தரிசு நிலங்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் வறட்சி பாதித்த மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை தொடங்க வேண்டும். இதன் மூலம் விளை நிலங்கள் காப்பாற்றப்படும் என்பதோடு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றார் முன்னாள் அமைச்சர் அன்புமணி.  

அரசியல் பயிலரங்கினை தொடங்கி வைத்து பாமக நிறுவனனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:  

               தமிழகத்தில் உள்ள இரண்டரைக் கோடி வன்னியர்களும் பாமகவிற்கு ஓட்டு போட்டால் பாமக ஆட்சியைப் பிடிக்கும். உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதிக்கும், பீகாரில் லல்லு பிரசாத் யாதவிற்கும் அவரவர் சார்ந்த சமுதாயத்தினர் தங்களுடைய ஒட்டுமொத்த ஆதரவினை தருகிறார்கள். இதைப் போன்ற ஆதரவினை வன்னிய சமுதாயத்தினர் வழங்கினால் தமிழகத்தில் பாமக ஆட்சியைப் பிடிக்கும்.  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்கினால் அதற்கேற்ப அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய முறையில் இட ஒதுக்கீடு கிடைக்கும். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க முதலமைச்சர் கருணாநிதி பயப்படுகிறார். 

                  ஆனால் பாண்டிச்சேரி மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்குவதற்கு முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பாமகவைத் தவிர உயரிய கொள்கைகள் வேறெந்த கட்சியில் இருந்தாலும் அதில் இணைய தயார் என்று அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை யாரும் அதற்கான கொள்கைகள் தங்களிடம் இருப்பதாக தெரிவிக்கவில்லை.  தமிழகத்தில் வேறெந்த அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில் பாமகவில் தான் அதிக அளவில் இளைஞர்கள் உள்ளனர். மாநில அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஆறு லட்சம் இளைஞர்களுக்கு பாமக சார்பில் அரசியல் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு பயிற்சி பெறும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களுடைய கிராமங்களில் பாமக கொள்கை மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

                      ஒவ்வொரு இளைஞரும் தலா 100 ஓட்டுகளை பாமகவிற்கு பெற்றுத்தரும் வகையில் செயலாற்ற வேண்டும். கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி பெண்கள் தான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளனர். பெண்களுக்கு பலனளிக்கும் வகையிலான பல்வேறு சமூக பணிகளை பாமக செய்து வருகிறது. சமூகத்தில் பெரும்பான்மை ஓட்டு வங்கியான பெண்கள் மனது வைத்தால் பாமக ஆட்சிக்கு வரும். அதற்கு இளம்பெண்கள் அணியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.   முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர்.வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தமிழரசு, வை.காவேரி, பெ.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Read more...

திமுகவை எதிர்க்க தமிழக மக்கள் தயார்: வைகோ

நாமக்கல்:

           இலங்கையில் தமிழர் படுகொலை, மின்தடை, விலைவாசி உயர்வு, ஒரே குடும்பத்தின் ஆதிக்கம் ஆகிய காரணங்களால் திமுக-வை எதிர்க்க தமிழக மக்கள் தயாராகவிட்டதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.

           மதிமுக சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொடி பயணம் நடைபெற்று வருகிறது. 

3-வது நாளான வியாழக்கிழமை நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்றி வைத்து மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியது:

                தமிழகத்தில் இயற்கை வளம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஆளும் திமுக அரசே காரணம். மணல் கொள்ளையால் நதி வளம் குறைந்து வருகிறது. கிரானைட் கற்களுக்காக மலைக் குன்றுகள் சுரண்டப்பட்டு வருகின்றன. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற யானை மலையை பெயர்த்து எடுக்கவும் டெண்டர் விடப்பட்டது.÷ மக்கள் எதிர்ப்பு காரணமாகவும், மதிமுக போராடும் என அறிவித்ததைத் தொடர்ந்து அரசாணை ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தை 6 அதிகார மையங்கள் ஆட்சி செய்து வருகின்றன. 

              முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என அனைத்து நதிகளையும் அண்டை மாநிலங்கள் அபகரிக்க ஆங்காங்கே அணை கட்ட துவங்கியுள்ளன. இவற்றை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடுத்த நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்கிறது தமிழக அரசு. ஆனால், ஆந்திர மாநிலத்தில் நதி வளம் காக்க போராட்டம் நடத்தும் முன்னாள் முதல்வருக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் தற்போது ஆளும் முதல்வர் ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், தமிழக அரசோ மாநிலத்தின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க இயலாத நிலையில் உள்ளது.

          முதல்வர் கருணாநிதி முனைப்புடன் செயல்பட்டிருந்தால் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கையில் போர் நடைபெறாமல் செய்திருக்க முடியும். லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால், ஆட்சி பறிபோகும் என்ற காரணத்தினாலேயே மத்திய அரசின் போர் ஒத்துழைப்புக்கு திமுக அரசும் ஆதரவாக இருந்துவிட்டது. ஆனால், தமிழக மக்கள் இதனை மறக்கவில்லை. 

                         அதிமுக கூட்டம் நடத்தும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கூடுவதை அறிந்து அதிமுக கூட்டம் நடத்திய இடங்களிலேயே திமுக பொதுக் கூட்டத்தையும் தமிழக முதல்வர் நடத்தி வருகிறார். இது தோல்வி பயத்தையே காட்டுகிறது. அதிமுக-வுக்கு பின்னால் செல்வதே திமுக பின்தங்கியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 47 பெண்கள் கழுத்தறுக்கப்பட்டும், தலை துண்டிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

                      சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எஸ்எம்எஸ் அனுப்பிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடைபெறவில்லை.  இத்தகைய நடவடிக்கைகளைப் பார்த்து தமிழக மக்களே திமுக-வை எதிர்க்க தயாராகிவிட்டனர் என்றார்.

Read more...

திமுக - காங்கிரஸ் கூட்டணிதி பலமாக உள்ளது :ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடி

              திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது என்று அதிரடியாக அறிவித்தார்.

             திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.  டி.எஸ்.விஜயகுமாரின் மகளின் திருமணத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

            அப்போது அவரிடம் கூட்டணியைப்பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,   ‘’திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது.

                  எங்களுக்குள் கூட்டணி பற்றி கருத்து தெரிவிப்பது என்றால் , நாங்கள் குலாம் நபி ஆசாத்திடம் தெரிவிப்போம். அவர், அதை தலைமையிடம் தெரிவிப்பார்.  இதுவே எங்கள் கட்சியின் நிலைப்பாடு’’என்று தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்கள் எவை எவை என்பது மக்களிடம் சரியாகப் போய்ச்சேரவில்லை. அதனால் ஒன்றாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை காங்கிரஸில் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு விளக்கப்போகிறார்கள்.

                  மத்திய அரசு செயல்படுத்தும் 100நாள் வேலை திட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு நாள் கூலியாக 100 வழங்குகிறது.  ஆனால் தமிழகத்தில் பல ஊராட்சி மன்றத்தலைவர்கள் 60 ரூபாய் 80ரூபாய் தந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனை  முதல்வர் கருணாநிதி அரசு தடுக்க வேண்டும்.  உண்மையான கூலியை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Read more...

எந்த கூட்டணியிலும் இல்லை: ராமதாஸ்

          
 
     நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் தான் அதுபற்றி அறிவிப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

            பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சேலம் வந்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேள்வி:  ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறீர்கள். பொறுப்பாளர்களும் நியமித்துள்ளீர்கள். இவர்கள் தான் தேர்தலில் நிற்பார்களா?

பதில்:
  அப்படி இல்லை. அப்படி யாரையும் அறிவிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் தான் அறிவிப்போம். பணியாற்றுவதற்காக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி:  பா.ம.கவில் உள்ளவர்கள் மதுகுடித்தால் நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்:
  இன்று கூட மாநில இளைஞர் அணி கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட டாக்டர் அன்புமணிராமதாஸ், நிர்வாகிகளிடம் மது குடிக்ககூடாது. அது தெரிந்தால் பதவியை எடுத்து விடுவோம் என கூறி உள்ளார்.

கேள்வி: எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுத்துவிட்டீர்களா?

பதில்: 
கூட்டணி தேர்தல் நேரத்தில் தான் அறிவிப்போம். நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை . நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை.


கேள்வி:  சேலத்தில் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்கிறார்கள். ஆனால் அரசியல் தலையீடு உள்ளதா என பார்க்க சி.பி.ஐ.விசாரணை வேண்டும் என்கிறார்களே?

பதில்:
சி.பி.ஐ. விசாரித்தால் உண்மை தெரியும்.

கேள்வி:  பா.ம.க. வாக்கு வங்கி எப்படி உள்ளது?

பதில்:
கூடி இருக்கிறது. இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் சேர்ந்து வருகிறார்கள் என்றார்.

Read more...

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ். நேரில் வாழ்த்து: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு



               சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பற்றி எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,  தேமுதிக தலைவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.


                  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது 58வது பிறந்த நாளை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் கொண்டாடினார். மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருடன் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டினார்.


                 இதையடுத்து அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


                  முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சென்று விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தார். 

பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது, 

                    விஜயகாந்த் நல்ல தலைவர். அவரை வாழ்த்துவதற்காக நேரில் வந்தேன். அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லாட்சி தருவார் என்றார்.

விஜயகாந்த் சிரித்துக்கொண்டே, 

                 ‘’இதுதான் பத்திரிகைகளூக்கு முக்கியச்செய்தியாக இருக்கப்போகிறது’’என்று கூறினார்.

ஈ.வி.கே.எஸ். சிரித்துக்கொண்டே,  

              ‘’இது யாருக்கெல்லாம் கோபத்தை உண்டாக்கப்போகுதோ’’என்று கூறினார்.

           திமுக,அதிமுக அல்லாத கூட்டணிக்கு தலைமையேற்கத்தயார் என்று விஜயகாந்த் கூறியிருக்கின்ற நேரத்தில்,  திமுக அரசைப்பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து விமர்சித்து வரும் நேரத்தில் இருவரும் நேரில் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

                 மத்திய சென்னை, தென்சென்னை, வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏழைகளுக்கு வேட்டி  சேலை, தையல் எந்திரம், 3 சக்கர வாகனம் வழங்கினார்கள். முக்கிய இந்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளில் தே.மு.தி.க. தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். விஜயகாந்த் இன்று எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.


Read more...

புதன், 25 ஆகஸ்ட், 2010

விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி: தேமுதிக அறிவிப்பு

கடலூர்:

                   விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று தேமுதிக மாநில இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் கூறினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி கடலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், செயல் வீரர்கள் கூட்டமும் செவ்வாய்க்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் தேமுதிக மாநில இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் பேசியது:

                 வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில், அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு மாற்றாக விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி அமையும். அந்தக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். விஜயகாந்தை ஆட்சியில் அமர்த்துவோம். குறிப்பிட்ட ஜாதி கட்சிகளுக்கு மட்டும்தான் வாக்குகள் கிடைக்கும் என்று பேசப்பட்ட கடலூர் மாவட்டத்தில், விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே இந்த மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தேமுதிக கூட்டணி வெற்றி பெறும்.

               தேமுதிகவினர் மட்டுமே தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து விஜயகாந்த் பிறந்தநாளுக்கு டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர். மற்ற கட்சியினர் பொதுமக்களிடம் பணம் வசூலித்து பேனர்களை வைத்து வருகிறார்கள் என்றார் சுதீஷ். 200 ஏழைப் பெண்களுக்கு சேலைகள், மாணவர்களுக்கு 1000 நோட்டுப் புத்தகங்கள், இருவருக்கு 3 சக்கர வண்டிகள் ஆகியவற்றை சுதீஷ் வழங்கினார். விழாவுக்கு தேமுதிக வடக்கு மாவட்டச் செயலர் பி.சிவக்கொழுந்து தலைமை வகித்தார். மாநில விவசாயத் தொழிலாளர் பிரிவு செயலர் வி.சி.சண்மும் வரவேற்றார். தெற்கு மாவட்டச் செயலர் உமாநாத், கடலூர் நகரச் செயலர் ஏ.ஜி.தட்சணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும்: தா.பாண்டியன் பேட்டி

வேலூர்:


                இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழ்மாநில கட்டிட நிதி, கட்சி வளர்ப்பு நிதியளிப்பு பொதுக்கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் நடைபெற்றது. 
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசியது:-


               இலங்கையில் பலலட்சம் ஈழத்தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்  கொன்றதை எந்த ஊடகமும் படம் பிடித்து வெளிச்சம் போட்டு காட்டவில்லை. 4 1/2 லட்சம் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சுட்டு கொல்லப் பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன. 40ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.  2-வது உலகப் போரை விட இது கொடூரமானது. ஆயுதம் வழங்கப்படும் இந்திய ராணுவ படையின் துணையோடும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


                   இந்தியாவில் 100 கோடி பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 6 கோடி பேர் உள்ளனர். இலங்கையில் இரண்டரை கால் கோடி பேர் உள்ளனர். எதற்கும் இலங்கை பயப்படவில்லை. நம்முடை பலவீனத்தை யோசிக்க வேண்டும். வீரத்தை தன் மானத்தை பண்புகளை நாம் இழந்து வருகிறோம். மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. வருங்காலம் அங்கே புதையுண்டு போகிறது. தமிழ்நாட்டை கூறு போட்டு கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. கொலை செய்தாலும் தப்பித்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களின் போலி மதுபாட்டில்கள் அரசு அனுமதி பெற்ற பார்களில் விற்கப்படுகின்றன.


                 நாடும், மக்களும் வளம் பெற வேண்டும். 6 கோடி பேரில் ஒரு கோடி பேருக்கு சொந்த வீடில்லை. குடியிருக்க வீடு வேண்டும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சென்ட் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். தரிசு நில உச்சவரம்பு சட்டத்தில் கீழ் எடுக்கப்பட்ட நிலத்தை இன்னும் கையகப்படுத்த முடிய வில்லை. அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


முன்னதாக அளித்த பேட்டியில் அவர் கூறியது:-
 

                     மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் பணவீக்கம் இல்லை என்ற பொய்யான தகவலை பரப்பி வருகிறது. பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு விலையை தீர்மானித்துதுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதால் அடுத்த மாதம் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலின் போது அமைந்த அ.தி.மு.க.வுடான கூட்டணி நீடிக்கிறது. அதில் மேலும் சில புதிய கட்சிகள் சேர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை மீட்க சக்தி உள்ள வலிமையான கூட்டணியை உருவாக்குவதே எங்கள் கட்சியின் நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Read more...

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது; கூட்டணி குறித்து தொடரும் யூகங்கள்

சென்னை:

                  தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2011) மே மாதம் முடிய உள்ளது. புதிய ஆட்சியை தேர்வு செய்ய இன்னும் சுமார் 8 மாத காலம் அவகாசம் இருக்கிறது.

                 சட்டசபை தேர்தல் முன் கூட்டியே நடத்தப்படலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. ஆனால் முன் கூட்டியே தேர்தல் வராது என்று முதல்- அமைச்சர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்ததைத் தொடர்ந்து அந்த யூகத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. என்றாலும் தற்போது தேர் தல் ஜூரம் மெல்ல, மெல்ல வரத் தொடங்கியுள்ளது.

                 தமிழ்நாட்டில் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த தயார் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அது போல தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் என்று தமிழக காவல் துறை கூறி உள்ளது. அனைத்தும் தயார் என் பதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

                   தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகள்தான் பிரதான கட்சிகளாகும். காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கும் கணிசமான வாக்குகள் உள்ளன. பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள், தேசிய லீக், முஸ்லிம்லீக், புதிய தமிழகம் போன்ற கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிககளில் செல்வாக்கு உள்ளது.

                      இந்த 10 கட்சிகள் தவிர பல்வேறு சாதி கட்சிகளும், மத ரீதியிலான கட்சிகளும் உள்ளன. இந்த கட்சிகள் கூட்டணி வைப்பதைப் பொறுத்தே வாக்குகள் சிதறுவதும், சேருவதும் முடிவுக்கு வரும். இதனால் கூட்டணி சேர்க்கை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

                     ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளன. இந்த கூட்டணி 2011 தேர்தலிலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருப்பதாக இரு கட்சிகளின் மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.

                      ஆனால் இந்த தடவை தி.மு.க.விடம் இருந்து கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற சில காங்கிரஸ் தலைவர்கள் இப்போதே காய்களை நகர்த்த தொடங்கி உள்ளனர். இளங்கோவனின் பேச்சுக்களும் இடையிடையே புயலை கிளப்பியது போல உள்ளது. என்றாலும் இவையெல்லாம் தற்காலிகமாக மின்னல்களாக கருதப்படுகின்றன. கூட்டணியை முடிவு செய்ய போவது மேலிட தலைவர்கள்தான் என்பதால் தி.மு.க.- காங்கிரசில் உள்ள மூத்த, முக்கிய தலைவர்கள் பரபரப்பு பேச்சுக்களை கண்டு பதற்றப்படாமல் உள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பேசிக் கொள்ளலாம் என்று உள்ளனர்.

                     அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. மட்டுமே உறுதியான, நம்பகத்தன்மை உள்ள நண்பனாக இருந்து வருகிறது. இடது சாரி கட்சிகளும் அந்த அணியில் உள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. போன்றவை இடம் பெறும் என்று யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியானது.

                       ஆனால் அ.தி.மு.க. திசை நோக்கி காங்கிரஸ் கட்சி நகர்ந்து செல்வதற்கான அறிகுறி எதுவும் சிறுதுளி அளவுக்கு கூட இதுவரை ஏற்படவில்லை. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று ஒரு விழாவில் பேசுகையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளார்.தற்போது சாதி கட்சிகளை அ.தி.மு.க. அரவணைக்கத் தொடங்கி உள்ளது. அதன் முதல் கட்டமாக புதிய தமிழகம் கட்சி அ.தி.மு.க. பக்கம் சாய்ந்துள்ளது. இஸ்லாமிய, கிறிஸ்தவ கட்சி களுக்கும் அ.தி.மு.க. வலை விரித்துள்ளது.தேர்தல் நெருங்கும் சமயத்தில் சில முக்கிய கட்சிகள் தங்கள் அணிக்குள் வந்து விடுவார்கள் என்று அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டன் வரை அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு ஜெயலலிதா நடத்தும் பொதுக்கூட்டங்கள் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த தாக்கம் தேர்தல் கால பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

                      2011 தேர்தலில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த், நினைக்கிறார். எனவே தே.மு.தி.க. தலைமையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஆனால் அவரை உதிரி கட்சிகளில் ஒன்றாக மாற்றி தங்கள் அணியில் உட்கார வைக்க திராவிட பெரிய கட்சிகள் நினைக்கின்றன. தே.மு.தி.க. தொண்டர்களில் 90 சதவீதம் பேர் 2011 தேர்தலில் யாருடனாவது கூட்டணி வைத்தால்தான் அரசியல் நடத்த முடியும் என்று நினைக்கிறார்கள். எனவே கூட்டணிக்கு வலியுறுத்தி வருகிறார்கள். கூட்டணியில் கவுரவமான இடம் கிடைக்கும் பட்சத்தில் விஜயகாந்த் தன் முடிவை மாற்றிக்கொள்வார் என்று கூறப்படுகிறது. சுமார் 100 தொகுதிகளில் முடிவை நிர்ணயிக்கும் ஆற்றல் தே.மு. தி.க.வுக்கு இருப்பதாக கூறப்படுவதால் தே.மு. தி.க.வை பல கட்சிகளும் சற்று மிரட்சியுடனே பார்க்கின்றன.

                     பாட்டாளி மக்கள் கட்சி தற்போதைக்கு எந்த கூட்டணியிலும் இல்லை. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். எனவே பா.ம.க. எந்த அணியில் இடம் பெறும் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது. வட மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு இருக்கும் செல்வாக்கு எந்த விதத்திலும் குறையவில்லை. சமீபத்தில் நடந்த பென்னாகரம் தேர்தல் முடிவு இதை உறுதிப்படுத்தியது. பென்னாகரம் தேர்தல் பிரசார பார்மூலாவை மற்ற தொகுதிகளிலும் கடை பிடிக்க பா.ம.க. தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டனர். வடமாவட்டங்களில் உள்ள சுமார் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் பா.ம.க. தலைவர்கள் திட்டமிட்டுகளப் பணியில் ஈடுபட உள்ளனர். பா.ம.க. வின் இந்த அதிரடி நடவடிக்கைகளை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் உன் னிப்பாக கவனித்து வருகின்றன. பா.ம.க. தன்னை வலுப்படுத்தி கொண்ட பிறகு கூட்டணி பேச்சை கம்பீரமாக நடத்தும் என்று கூறப்படுகிறது. தே.மு. தி.க.வுடன் கை கோர்க்க கூட பா.ம.க. தயாராக இருப்பதாக சமீபத்தில் வெளியான தகவல்கள் பலரது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
  
             எனவே காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய 3 கட்சிகளும் கூட்டணியில் இடம் பெறுவதைப் பொறுத்தே தமிழக தேர்தல் நிலவரம் மாறும்.

                அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் கோவையில் பொதுக் கூட்டம் நடத்திய பிறகு தேர்தல் பணி கள் விறுவிறுப்பாகி விட்டன. இந்த நிலையில் நேற்று கட்சிக்காரர்கள் திருமணத்தை நடத்தி பேசிய ஜெயலலிதா தேர்தல் கவுண்ட்டவுன் தொடங்கி விட்டாக கூறி உள்ளார்.இதனால் மற்ற கட்சிகளும் தேர்தல் சுறுசுறுப்பை எட்டி உள்ளன. கூட்டணிகள் மாறுமா? யார்- யாருடன் சேருவார்கள்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் இதற்கு விடை கிடைத்துவிடும்.

Read more...

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

அடுத்த முதல்வர் யார்? : தி.மு.க.வுக்கு சோனியா திடீர் நிபந்தனை!





                       சமீப சில நாட்களாக, கொஞ்சம் நிம்மதியும் கொஞ்சம் குழப்பமுமாகக் காட்சியளிக்கிறார்கள் தி.மு.க.வின் முக்கியத் தலைகள். நிம்மதிக்குக் காரணம்... ‘தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி தொடரும்’ என்று சோனியாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள். குழப்பத்திற்கு காரணம்..? அதே சோனியாவின் வாயிலிருந்து வந்த சில வார்த்தைகள்தான்!

அதற்குள் போகும் முன்பாக ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்...

                     கடந்த ஆண்டு மத்தியில், துணை முதல்வர் பதவியில் ஸ்டாலின் அமர்த்தப்பட்ட சில மாதங்களிலேயே, ‘முதல்வர் பதவியிலும் விரைவில் அமர வைக்கப்படுவார் ஸ்டாலின்’ என்ற எதிர்பார்ப்பு, சக அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மத்தியில் நிலவியது.

                       இதை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த காலக்கட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகள் சிலவற்றில் பேசிய கலைஞர், ‘நான் விட்டுச் செல்லும் பணியை எனக்குப் பின்னால் தம்பி ஸ்டாலின் தொடர்வார்’ என்றும், ‘விரைவில் நான் அரசியலை தவிர்த்த பொதுவாழ்க்கையில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போகிறேன்’ என்றெல்லாம் தொடர்ந்து பேசி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினார்.

 
                  கிட்டத்தட்ட இதே காலத்தில்தான் டெல்லி அரசியல் சுவைக்காத அழகிரி, மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பும் விருப்பத்தை கலைஞரிடம் கொஞ்சம் வலுவாகவே முன் வைத்தார். ஓய்வு பெறும் எண்ணத்தை சற்று தள்ளி வைக்கும் நிலைக்கு கலைஞரைத் தள்ளியது அழகிரியின் இந்த நிலைப்பாடு. அழகிரியின் விருப்பமும் முதல்வர் பதவியில் கலைஞர் நீடிக்க வேண்டும் என்பதுதான்.
 
                    நான்கு சுவற்றுக்குள் நடந்த இந்த ‘விருப்பங்களை’ பொதுக்கூட்ட மேடைகளில் போட்டுடைக்க ஆரம்பித்தார் அழகிரி. ‘ஆறாவது முறையும் கலைஞர்தான் முதல்வராவார்’ என்று போகும் இடமெல்லாம் பேசிப் பதியவைத்தார் அழகிரி. இந்த ஆண்டு மார்ச் மாதம் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அன்று இரவே அழகிரி உதிர்த்த வார்த்தைகள்தான் சுவாரஸ்யமானது.

                       ‘‘என் மகனின் திருமணம் வரும் நவம்பரில் ‘முதல்வர் கலைஞர்’ தலைமையில்தான் நடைபெறும்’’ என்று உறுதிபடச் சொன்னார் அழகிரி. அதாவது திருமணத்திற்கு சுமார் எட்டுமாதங்கள் இருக்கும்போதே, அப்போதும் முதல்வர், கலைஞர்தான் என்று சொல்லி திருமண அழைப்பிதழையும் அதன்படி எழுதச் சொன்னார் அழகிரி. ஒரு தந்தையாக இவரது இயல்பான ஆசைதான் இது. என்றாலும், ‘முதல்வர் பதவியிலிருந்து கலைஞர் இப்போது இறங்கமாட்டார் அல்லது இறங்கவிடமாட்டேன்’ என்ற அவரது எண்ண ஓட்டத்தை ஸ்டாலின் ஆதரவாளர்கள் கவனிக்காமலில்லை.

                       அதே மார்ச் மாதத்தில் வந்த தனது பிறந்த நாளன்று கலைஞரிடம் ஆசிபெறச் சென்ற ஸ்டாலின், இந்தப் பின்னணிகளை புரிந்துகொண்டு வெளிப்படையாகவே கலைஞரிடம் கொஞ்சம் கசப்பு காட்டியதாக தகவல் உண்டு. ஆனாலும் எதையும் போராடிப் பெறும் குணமில்லாத ஸ்டாலின், அதன் பின்பும் அமைதிகாத்தார். இந்தச் சூழலை பயன்படுத்திக்கொண்ட கலைஞர், ‘‘ஓய்வு பெறுவதாக நான் எப்போது சொன்னேன்?’’ என்று கேட்கும் அளவுக்கு தன் நிலையை மாற்றிக்கொண்டு கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தார்.

               இந்த நிலையில்தான் தி.மு.க.வின் சார்பில் அடுத்த முதல்வர் யார் என்ற விவாதம் மீண்டும் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. 
 
எப்படி..-? 
 
                கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தி.மு.க.வின் தூக்கத்தை ரொம்பவே கெடுத்து வருகிறார் இ.வி.கே.எஸ்.இளங்கோவன். நாளுக்கு நாள் தி.மு.க. மீதான அவரது தாக்குதல் அதிகமாகி, வாகை.முத்தழகன் விவகாரத்தில் உச்சத்தைத் தொட்டு, தனது உணர்வுகளை பொதுமேடையில் வெளியிட்டார் இளங்கோவன். இந்த நேரத்தில்தான் ரியாக்ஷன் காட்டியது தி.மு.க. ராஜீவ், ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்துப் பேசிய வாகை. முத்தழகனை தி.மு.க.விலிருந்து நீக்குவதாக அறிவித்த கலைஞர், அதே கையோடு டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு அனுப்பி சோனியாவைச் சந்திக்க வைத்தார்.

                    தி.மு.க & காங்கிரஸ் உறவை சீர்குலைக்கும் வகையில் இளங்கோவனின் பேச்சுக்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய பாலுவிடம், ‘கூட்டணி பற்றி சந்தேகம் வேண்டாம். வரும் தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை... கலைஞர்தான் முதல்வர் வேட்பாளர். வேறு யாரையும் காங்கிரஸ் ஏற்காது’ என்று சொல்லியிருக்கிறார் சோனியா. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கலைஞரை நேசிக்கும் லட்சோபலட்சம் உடன் பிறப்புகளுக்கு இதில் சந்தோஷம்தான். என்றாலும், இந்த நேரத்தில் இப்படி ஓர் அழுத்தத்தை காங்கிரஸ் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்ற குழப்பம் தி.மு.க. மேல் மட்டத்தில் பலரிடமும¢ காணப்படுகிறது.

                   ‘‘தலைவர் கலைஞர்தான் அடுத்த முதல்வர் என்பது தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டன் வரை எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துக்கூடிய விஷயம்தான். ஆனால்... கடந்த சில வாரங்களாக, தன் கட்சி முக்கியஸ்தர்களை விட்டே, ‘சரிபாதி இடங்கள் வேண்டும். ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு தொகுதிகள் வேண்டும். குறைந்தது எழுபது இடங்கள் வேண்டும்...’ என்றெல்லாம் பேச வைத்துவிட்டு, கலைஞர்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லுவதுதான் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

                ஒருவேளை, பின்னாளில் கலைஞர் ஓய்வு பெறும் சூழல் வந்தால், குட்டை குழம்பும்... அதில் மீன் பிடிக்கலாம் என்று காங்கிரஸ் தனது வழக்கமான சித்துவிளையாட்டை மனதில் வைத்து ஏதேனும் திட்டமிடுகிறதா என்பது புரியவில்லை’’ என்கிறார் ஒரு மூத்த அமைச்சர், குழப்பம் விலகாமலேயே.

                 ‘அடுத்த முதல்வரும் கலைஞர்தான்’ என்று உற்சாகத்துடன் சொல்லிவந்த அழகிரியையே கூட சோனியாவின் இந்த நிபந்தனை சற்று யோசிக்க வைத்திருக்கிறது என்கின்றன மதுரை பக்கம் இருந்து வரும் தகவல்கள்.

                   ‘சோனியாவின் திட்டம் எதுவாக இருந்தாலும், வரும் தேர்தலில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் தொடங்கியே தி.மு.க. தனது ராஜதந்திரத்தை திருப்பிக் காட்டும்’ என்பதே அறிவாலய வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் லேட்டஸ்ட் தகவல்!
 

Read more...

‘‘78 தொகுதிகள் வேண்டும்!’’ - கார்த்தி சிதம்பரம்




               நாடெங்கும் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களில் மணி மகுடமாக அமைந்தது நாகை மாவட்டம் வேதாரண்யம் தியாகி வைரப்பனின் வெண்கல சிலை திறப்பு விழா.

யார் அந்த வைரப்பன்?

             உப்பு சத்யாகிரக போராட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளியான வைரப்பனும் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துகொண்டார். சுதந்திரப் போராட்ட வீரர்களை, ஆங்கிலேயர்கள் மிருகத்தனமாக துன்புறுத்தியதை கண்டு கலங்கிய வைரப்பன், ‘ஆங்கிலேயர்களுக்கு முடிதிருத்துவதில்லை’ என்று சபதம் செய்து அதன்படியே வாழ்ந்து வந்தார்.

                    ஒரு நாள் சாதாரண உடையில் வந்த ஒருவருக்கு முகச்சவரம் செய்து கொண்டிருந்தார். பாதி சவரம் செய்து கொண்டிருக்கும்போதுதான் வந்திருப்பது ஆங்கிலேய போலீஸ் என தெரியவந்தது. உடனே, பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனால் கோபமடைந்த ஆங்கிலேய போலீஸ் மீதி சவரம் செய்து முடிக்க வேண்டும் என்று மிரட்டியும் அதற்கு வைரப்பன் அடிபணியவில்லை.


வைரப்பன் வெள்ளைக்கார கோர்ட்டில் நிறுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘போலீஸ்காரருக்கு மீதி சவரவேலையை செய்து விடு’ என்று உத்தரவிட்டார். அதற்கு வைரப்பன், ‘இந்த தொழிலையே விட்டாலும் விடுவேனே தவிர, நம்மால அது முடியாதுங்க சாமி’ என்று கூறி சவரப்பெட்டியை நீதிபதியின் மேஜை மீது வைத்துவிட்டார். இதனால் கடுப்பான நீதிபதி வைரப்பனுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதன்படி 6 மாத சிறை தண்டனை அனுபவித்தார் வைரப்பன்.

இப்பேர்ப்பட்ட வைரப்பன், சுதந்திர தின பொன் விழா ஆண்டான 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை மத்திய, மாநில அமைச்சர்கள் வேதாரண்யத்தில் வைரப்பன் வீட்டு வாசல் வழியாக ஊர்வலமாக சென்றபோதுதான் இறந்தார். 
 
இத்தனை சிறப்பு வாய்ந்த வைரப்பனின் சிலையைத் திறந்து வைத்து பேசிய கார்த்தி சிதம்பரம், 
 
                  ‘‘வேதாரண்யத்துக்கு அகல ரயில் பாதை அமைத்து ரயில் விடவேண்டும். உப்புக்கான வரியை குறைக்க வேண்டும். நாகை துறைமுகத்தை விரிவுபடுத்த வேண்டும் என நமது முன்னாள் எம்.பி.யான பி.வி.ராஜேந்திரன் மூன்று கோரிக்கைகளை வைத்தார். ரயில்வே விஷயத்தை மம்தா மேடத்திடம் முடித்துவிடலாம். உப்பு வரி பிரச்னையும் பேசிவிடலாம். ஆனால் துறைமுகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக கப்பல் ஏற முடியுமான்னு தெரியலை. ஏன்னா கும்பகோணம் எப்போதும் கோணல்தான். (அதாவது வாசனையும் அவரது கப்பல் துறையையும் மறைமுகமாக குறிப்பிட்டார்).

                       தமிழ்நாட்டு அரசியலுக்கு ஏற்ப காங்கிரஸ் கட்சியை மாற்றணும். தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸில் 13 லட்சம் இளைஞர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இது இரண்டு முக்கிய திராவிட கட்சிகளிலும் இல்லை. அந்த அளவிற்கு வளர்ந்து வரும் காங்கிரஸை முறையாக வழி நடத்த வேண்டும். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு எம்.பி. தொகுதிக்கு இரண்டு சட்டமன்ற தொகுதிகளை காங்கிரஸுக்கு கேட்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் முழுவதும் கட்சியை வளர்க்க முடியும்’’ என்று முடித்தார்.


Read more...

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராகிறது பாமக

ஓமலூர்:

              தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியாத நிலையிலும், எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று முடிவாகாத நிலையிலும் பாட்டாளி மக்கள் கட்சி, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

மைக்ரோ பிளானிங்: 

               2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக "மைக்ரோ பிளானிங்' என்ற புதிய திட்டத்தை ஏற்படுத்தி தனது பிரசார முறையை மாற்றிக் கொண்டு களத்தில் இறங்கியது.

                 இந்தத் திட்டப்படி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தலைமையில், சட்டப்பேரவை பாமக உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் குக்கிராமங்களுக்குச் சென்று மக்களோடு மக்களாக திண்ணையில் அமர்ந்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தனர். அப்போது, பாமக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று கூறி வாக்கு சேகரித்தனர்.

இப்போதும் அதே பாணி: 

                    இந்தத் தேர்தலில் பாமக வெற்றி பெற முடியாவிட்டாலும் இரண்டாவது இடத்தைப் பிடித்ததோடு தமிழக அரசியல் களத்தில் தன்னுடைய இருப்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டது. 

               இதற்கிடையே வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் தயாராகாத நிலையில் தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியை இப்போது தொடங்கியுள்ளது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பென்னாகரம் பார்முலா குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 

                இதன்படி, கட்சியை வளர்க்க வேண்டும் என்றால், 2011 பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்று ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால், பென்னாகரம் பார்முலாதான் கை கொடுக்கும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் பேசியுள்ளனர். இதையடுத்து கட்சியின் அனைத்து மேல்நிலைத் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களும் ஒரு பேரவைத் தொகுதியில் 4 நாள்கள் வீதம் முகாமிட்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, கிளைகளை ஒருங்கிணைத்தல், கட்சிக் கொடியேற்று விழாக்கள் நடத்துதல் உள்ளிட்ட வழக்கமான பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

சாதனைகளை விளக்கத் தயார்!  

                  அத்துடன் ஒவ்வொரு கிளையிலும் இளைஞர்களை குறிவைத்து இளைஞர், இளம்பெண்கள் அணியைத் தொடங்க உள்ளனர். கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்களும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும், குக்கிராமங்களிலும் பொதுமக்களைச் சந்தித்து டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் சாதனைகள், கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்க உள்ளனர். "மைக்ரோ பிளானிங்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் பாமக எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் இருந்தே தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்போது கட்சியில் இணையும் இளைஞர்களுக்கு ராமதாஸ் தலைமையில் தனியாக அரசியல் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அசைக்க முடியாத நம்பிக்கை: 

                    சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்தத் திட்டம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ. தமிழரசு, கட்சியின் புதிய திட்டம் மூலம் ஓமலூர் தொகுதியை மீண்டும் பாமக கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்களவைத் தொகுதி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை, "மைக்ரோ பிளானிங்' சரி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more...

தேமுதிக இல்லாமல் ஆட்சி இல்லை: நடிகர் விஜயகாந்த்



இலவச திருமண மண்டபத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
மதுராந்தகம்:

           தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

             மதுராந்தகம் அருகே மாமண்டூரில் ஸ்ரீஆண்டாள் அழகர் அறக்கட்டளையின் சார்பில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை ஞாயிற்றுக்கிழமை நடிகர் விஜயகாந்த் திறந்து வைத்து, பொதுமக்களுக்காக அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து 6 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணத்தை நடத்தி வைத்தார். 

திருமண ஜோடிகளுக்கான சீர் வரிசைப் பொருள்களும், ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி அவர் பேசியது:

            ஏழை, எளிய மக்களுக்காக திருமண மண்டபம் இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவும், காங்கிரசும் சேர்ந்துக் கொண்டுதான் இலங்கைத் தமிழர்களை அழித்தன. இலங்கைத் தமிழர்களுக்காக முதலில் குரல் கொடுத்தது தேமுதிகதான். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட டாஸ்மாக் கடைகளை திமுக அரசு குறை கூறியது. தற்போதைய திமுக அரசு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு அளித்துள்ளது.

               திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால், 65 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். தேமுதிக அந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் கூட்டணி என்று பலர் கூறி வருகிறார்கள். இதிலிருந்து, தேமுதிக இல்லாமல் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரிகிறது. யாருடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும். திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் ஊழல் கட்சிகள். தேமுதிக தலைமையிலான கூட்டணி அமைத்தால், கூட்டணி அமைக்க தயார் என்றார் விஜயகாந்த்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 21 ஆகஸ்ட், 2010

நல்ல திட்டங்களை செயல்படுத்த பா.ம.க., ஆட்சிக்கு வரவேண்டும்: ராமதாஸ்



மாமல்லபுரம்: 

                பா.ம.க.,விடம் நல்ல திட்டங்கள் உள்ளன. இதை செயல்படுத்த பா.ம.க., ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என திருக்கழுக்குன்றத்தில் நடந்த திருப்போரூர் தொகுதி பா.ம.க., களப்பணியாளர் பயிற்சி முகாமில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

முகாமில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது

            மக்களுக்கு இலவசங்களை கொடுக்காமல், அவர்களுக்கு வாங்கும் சக்தியை உருவாக்க வேண்டும். அனைவரும் பிளஸ் 2 வரை கட்டாயம் கல்வி கற்க வேண்டும். அதற்குமேல் படிப்பவர்களுக்கும் அரசு இலவசக் கல்வி அளிக்க வேண்டும். அவர்களுக்கு அரசே வேலை வழங்க வேண்டும். படிக்க வைக்காத பெற்றோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். பல நல்ல திட்டங்கள் பா.ம.க.,விடம் உள்ளன. இதை செயல்படுத்த பா.ம.க., ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். இப்போது கூட்டணி வேண்டாம் என்கிறீர்கள். 

                        இது எனக்கு தெம்பை தருகிறது. கோடிக் கணக்கான ரூபாய்களை கொட்டி நம்மை மற்றவர்கள் இதுவரை ஏமாற்றினர். இனி நமக்கு பலகீனம் ஏற்படாது. நாம் வெற்றிபெறத்தான் எம்.எல்.ஏ.,க்கள் ஊர் ஊராக சுற்றி வருகின்றனர். கட்சியிலும், இளைஞர்களுக்குதான் இனி வாய்ப்பு. ஒவ்வொரு ஊர் கிளையிலும் 30 வயதிற்குள் உள்ள வாலிபர்தான் கிளைச் செயலர். வயதானவர்கள் கிளைத் தலைவராக மட்டுமே இருக்க வேண்டும். அதேபோல், பொருளாளர் பதவியில் இளம்பெண்கள் மட்டுமே இருக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம், பா.ம.க., கோட்டையாக மாற வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ., ஆறுமுகம் போட்டியிடுகிறார். இவ்வாறு ராமதாஸ் பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி இன்று மாலையே கூட முறியும்: இளங்கோவன்






சென்னை:

              காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி இன்று மாலை வரை நிரந்தரமாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

                    சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரை வைக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் நட்பகம் சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மெய்யப்பன் தலைமையில், வசந்தகுமார் எம்.எம்,ஏ., போராட்டத்தை துவக்கி வைத்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியது

                  சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் நட்பகம் சார்பில், பல வகைகளில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரத்த தானம் செய்து பார்த்தார்கள். ரத்தக் கையெழுத்து இயக்கம் நடத்தினர். ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி தமிழக அரசிடம் கொடுத்தனர். 

                   இவ்வளவு செய்தும் இவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.இங்கே உள்ளவர்கள் ஊழல் செய்வதில் கில்லாடிகள். நாங்கள் கொள்ளையடிக்கவில்லை. ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. மருத்துவமனைக்கு ராஜிவ் காந்தி பெயர் வைக்க வேண்டுமென்று தான் கேட்கிறோம். நான், காந்திய வழியில் அரசியலில் களமிறங்கியுள்ளேன். எங்கள் காங்கிரசில் நேதாஜி வழி என்றும் ஒரு வழி உள்ளது. இப்போது உள்ள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் கண்ணசைத்தால், அனைவரும் நேதாஜி வழியில் களமிறங்கவும் தயார்.

                         நான் மனதில் பட்ட கருத்தை பேசுகிறேன். அதை தவறாக கருதி டில்லிக்கு கோள்மூட்டி விடுகின்றனர். நான் பதவிக்கு ஆசைப்பட்டவன் இல்லை. சோனியா, ராகுல் கரத்தை வலுப்படுத்துவதே என் நோக்கம். கட்சிக்கு கடுமையாக உழைப்பேன். மனதில் பட்டதை நான் தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருப்பேன். என்னைத் தடுக்க முடியாது. சென்னையில் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. ஆண்டுகள் பலவாகியும் இன்னும் கட்டப்படவில்லை. அரசிடம் பணம் இல்லையா அல்லது கொடுக்க மனமில்லையா? அரசிடம் பணம் இல்லை என்றால் நாங்களே பணம் வசூலித்து கட்டிக் கொள்கிறோம்.

                             வலி என்கின்றனர். வலி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. நல்ல காரியத்தை செய்தால் வலி எப்படி ஏற்படும். கூட்டணி தொடரும் என்றால் எப்படி தொடரும். இந்தக் கூட்டணி இன்று மாலை வரை நிரந்தரமாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது. அம்மையார், யாருடன் கூட்டணி வைக்கச் சொன்னாலும் நாங்கள் கூட்டணி அமைப்போம். நான், அம்மையார் என்று சொன்னது சோனியாவை என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்தால் சரியாக இருக்கும் என்று நாங்கள் மேலிடத்திற்கு சொல்லி வருகிறோம். வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

Read more...

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் நிலை உருவாகும்: கார்த்தி சிதம்பரம்


ராஜீவ்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மந்தைவெளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் அகில இந்திய காங்கிரஸ்
 
             ராகுல் காந்தியின் கைக்குப் பொறுப்புகள் வந்தவுடன் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் சூழ்நிலை உருவாகும் என்றார் அ.இ.கா.க. உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம். மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு விளம்பரம் தேடிக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
 
சென்னை மந்தைவெளியில் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இதில் கார்த்தி சிதம்பரம் பேசியது:
 
                  சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல.தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் பெரிய அளவில் விளம்பரம் செய்கின்றனர். 6 ஆண்டுகள் கழித்து நிறைவேறும் திட்டத்துக்கு இப்போதே விழா நடத்தி விளம்பரம் தேடுகின்றனர். அந்தத் திட்டம் பின்பு நிறைவேறுமா இல்லையா என்பதைக் கூற முடியாது. 
 
                      ஆனால் அந்த திட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் திராவிடக் கட்சிகள் என்று மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்த பிறகுதான் பல இளைஞர்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. என் தந்தைக்கு 39 வயது இருக்கும்போது அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது.  இப்போதும் காங்கிரஸ் கட்சிதான் மத்தியில் ஆட்சி செய்கிறது. ஆனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை. நமது கட்சியில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்ட தயங்கக்கூடாது. அப்போதுதான் கட்சி வளரும்.மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி. இதை காங்கிரஸ்தான் சாதித்தது என்று மக்களிடம் நாம் பேசவில்லை.
 
               இலங்கைப் பிரச்னை குறித்து காங்கிரஸ் கட்சி மெüனமாக உள்ளது. ராஜீவ் காந்தி என்ன செய்தார், காங்கிரஸ் கட்சிதான் என்ன செய்தது என்று குறை கூறுகின்றனர். இலங்கையிóல் தமிழர்கள் பாதிக்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் கூறுகின்றனர். இந்தியாவில் உள்ளது போன்று தனித்தனி மாநிலமாக இலங்கையிலும் செயல்பட வேண்டுóம் என்று ராஜீவ் காந்தி விரும்பினார். இதுதான் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா உடன்பாடு. ஆனால் தமிழர்களுக்காக போராடுவதாக கூறிக் கொண்ட விடுதலைப் புலிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை இதை ஏற்றுக் கொண்டிருந்தால், மக்கள் செல்வாக்கு பிரபாகரனுக்கு இருந்திருந்தால் அவர் தமிழர் பகுதிக்கு முதலமைச்சராகி இருப்பார்.
 
            ஆனால் இதை விடுத்து, தனி நாடு கோரிக்கை ஏற்புடையது அல்ல. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன. அவை தனி நாடு கோரிக்கை விடுத்தால் நாம் யாராவது ஏற்றுக் கொள்வோமா? ஆனால் புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு ராஜீவ் காந்தி ஆதரவு அளிக்காததால் அவரை 1991-ல் படுகொலை செய்தனர். இதை நாம் எப்படி மன்னிக்க முடியும்? திராவிடக் கட்சிகளில் தலைவர்கள் யாருக்காவது இது போன்ற கதி ஏற்பட்டிருந்தால் யாராவது மன்னிப்பார்களா?1967-களில் காங்கிரஸ் கட்சிமீது பல்வேறு அவதூறுகளைக் கூறித்தானே திராவிடக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. நான் இப்போது தேர்தல் கூட்டணி குறித்துப் பேசவில்லை. 
 
             ஆனால் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் எந்தக் கட்சியும் வெற்றிபெற முடியாது, ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது. போராடும் குணம் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டும். சர்ச்சைகளை கண்டு அஞ்சக்கூடாது. பக்கத்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் போராடும் குணம் இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் இல்லை? சர்ச்சை வேண்டாம் என்றால் காங்கிரஸ் கட்சி விடுதலைப் போராட்டத்தல் ஈடுபட்டிருக்க முடியுமா? அதிக சர்ச்சைகளையும், போராடும் குணத்தையும் கொண்ட கட்சிதான் காங்கிரஸ்.விமர்சனம் இல்லாமல் முன்னேற முடியாது. தமிழகத்தில் மக்கள் பிரச்னை குறித்து மேடைகளில் பேசத் தயங்கக்கூடாது. அப்படிப் பேசினால்தான் நாம் வளர முடியும். இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருப்பது காங்கிரஸ் கட்சி.
 
                  தீவிரவாதம் குறித்து திராவிடக் கட்சிகள் எங்காவது பேசுவது உண்டா? தமிழகத்துக்கு தேசியக் கட்சி அவசியம் தேவை. தமிழர்களாக இருப்பதில் தவறில்லை. முதலில் இந்தியராக இருக்க வேண்டும். கூட்டணியே வேண்டாம் என்று 1989-ல் ராஜீவ் காந்தி தனித்து நின்று சாதனை புரிந்தார். ஆனால் அப்போது நாம் ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும் நமது பெயர் நிலைத்திருந்தது. இப்போது மீண்டும் அதே நிலை, ராகுல் காந்தி கைக்கு அனைத்து பொறுப்பும் வந்தவுடன் வரும் என்பது நிச்சயம் என்றார் கார்த்தி ப. சிதம்பரம்.சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன், அ.இ.கா.க. உறுப்பினர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
 
தனியார் பள்ளிகள் பாதிப்பு
 
                  தனியார் பள்ளிகளுக்கான மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிóல் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலித்தால் பள்ளிகளை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நியாயமான கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பல பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இப்பிரச்னையில் தெளிவான நல்லதொரு முடிவு எடுக்கப்பட வேண்டும். முதல்வர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண வேண்டும் என்றார் கார்த்தி ப.சிதம்பரம்.

Read more...

தி.மு.க., அரசு 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது : அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

புவனகிரி :

                 கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க., அரசு 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். புவனகிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார்.

விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு இலவச "டிவி' வழங்கிப் பேசியது:

                          புவனகிரி பேரூராட்சிக்குட்ட கீழ்புவனகிரி மற்றும் ஆதிவராகநத்தம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தொகை ஒரு கோடியே 92 லட்சம் தள்ளுபடி செய்யப்பட் டுள்ளது.

                     கடந்த சட்டசபைத் தேர்தலில் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதிகளில் எதிர்கட்சிகளுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் எதிர்கட்சி என்று கூட பார்க்காமல் இந்த அரசு மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறது. ஆனால் இங்குள்ள எம்.எல்.ஏ.,க்கள் அரசு விழாக்களில் பெயர் போடவில்லை என்று குறை கூறுகிறார்கள். அப்படியே பத்திரிகையில் பெயர் போட்டாலும் வர மறுக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க., அரசு 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.

                                            இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

கடலூர் மாவட்ட செய்திகள்

 
 

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP