செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

தேர்தலுக்கு ஆயத்தம் பற்றி பா.ம.க. ஆலோசனை: இன்று தலைமை நிர்வாகக் குழு கூட்டம்


 
சென்னை:
 
           பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக.10) நடக்கிறது.
 
           கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, கட்சித் தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க கட்சியை தயார்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
 
          மிழக மக்களைப் பெரிதும் பாதித்து வரும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இரு தினங்களுக்கு முன்பு பேசிய ராமதாஸ், 
 
          இப்போது திமுக, அதிமுக என எந்தக் கூட்டணியிலும் பா.ம.க. இல்லை என்று கூறியிருந்தார். அத்துடன் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உருவாக வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருந்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ராமதாஸ் இதுபோன்ற நல்ல யோசனைகளை எப்போதாவது தெரிவிப்பார் என இளங்கோவன் கூறினார்.
 
          இதற்கிடையில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது போலீஸôர் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வன்னியருக்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தில், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசினார் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த முறை மத்திய அமைச்சர் ஆ. ராசா பற்றி காடுவெட்டி குரு பேசியதன் தொடர்ச்சியாகத்தான் திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து குரு கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டார். அவ்வாறு சிறை வைக்கப்பட்டதில் தவறில்லை என்று நீதிமன்றம் கூறியது.
 
            இருந்தாலும் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் பா.ம.க. சேரக்கூடும் என்ற கருத்து பரவியது. அப்போது காடுவெட்டி குரு மீதான கைது நடவடிக்கை கைவிடப்பட்டது. இப்போது மறுபடியும் காடுவெட்டி குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, பா.ம.க.வுக்கு மிரட்டல் விடுக்கும் செயல்பாடா என்ற கருத்து கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. எனவே இந்தச் சூழ்நிலையில் எந்த வகையான அணுகுமுறையைக் கையாள்வது என்பது பற்றியும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
                     பென்னாகரம் இடைத்தேர்தலின் போது வீடு வீடாகச் சென்று வன்னிய சமூகத்தவரின் ஆதரவைப் பெற்றதைப் போல, கணிசமான தொகுதிகளைத் தேர்வு செய்து தங்கள் ஆதரவை வலுப்படுத்திக் கொண்டு, தேர்தல் நேரத்தில் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசலாம் என்ற கருத்து கட்சிக்குள் இருப்பதாகத் தெரிகிறது. அந்த வகையில் செயல் திட்டங்களை உருவாக்குவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP