பா.ம.க. தலைமையில் சமூக நீதிக் கூட்டணி: ராமதாஸ்

தேனி:
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
தேனியில் திங்கள்கிழமை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:
இந்தியாவில் வேளாண்மை உற்பத்தி மற்றும் பரப்பளவு குறைந்து வருகிறது. 1990-ம் ஆண்டு நாட்டின் விவசாய உற்பத்தி 30 சதவீதமாக இருந்தது. தற்போது 18 சதவீதமாகக் குறைந்துள்ளது. 5 ஆண்டுகளில் உணவுக்காக வெளிநாடுகளை எதிர்பார்க்கும் நிலையில் இந்தியா உள்ளது. கிராமப்புறங்களில் விவசாய நிலங்களை வெளி மாநிலத்தவர் வாங்கி வீட்டு மனைகளாக மாற்றி வருகின்றனர்.
இதை முறைப்படுத்த உரிய சட்டம் கொண்டு வர வேண்டும். ஏழைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை முதல்வர் அறிவிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள், பிரதமர் ஆகியோர் பேசித் தீர்க்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
பா.ம.க. தலைமையில் 1991 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் சமூக நீதிக் கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் பா.ம.க. தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளது. பா.ம.க. தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களைக் கைப்பற்றும். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்யூனிஸ்ட் தனியாக கூட்டணி அமைத்ததும் இல்லை. தி.மு.க. அரசுக்கு மதிப்பீடு கொடுக்க நான் தயாராக இல்லை. தேர்தலில் மக்கள்தான் மதிóப்பீடு வழங்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பா.ம.க. முழு ஆதரவு அளிக்கிறது என்றார் ராமதாஸ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக