திங்கள், 16 ஆகஸ்ட், 2010

குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா அறைகூவல்



திருச்சியில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக் கட்சி பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு வெள்ளி செங்கோல் வழங்குகிறார் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் 
திருச்சி:
             குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள் என்று திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தில் அறைகூவல் விடுத்தார் திமுக பொதுச் செயலர் ஜெயலலிதா.

திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:


                 ஒரு குடும்பம் நம் அனைவரையும் முட்டாள்களாக்கப் பார்க்கிறது. ஒரு குடும்பம் தமிழ்நாட்டையே சுரண்டிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக நாடுகள் அனைத்துக்கும் சென்று ஆராய்ச்சி செய்து பாருங்கள். எந்த நாட்டிலாவது தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர் என உண்டா?ஒரே குடும்பத்தினர் ஜனநாயகத்தின் பெயரால் இத்தனைப் பதவிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். 25 தொலைக்காட்சி சேனல்கள். பல பத்திரிகை நிறுவனங்கள். பல கேபிள் நிறுவனங்கள். 50 எப்.எம். ரேடியோ நிலையங்கள். பல கல்லூரிகளை நடத்தி வருகிறார்கள். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும், எஸ்டேட்டுகளும் இவர்கள் வசம் உள்ளன.இதைத் தட்டிக் கேட்போர் நசுக்கப்படுகிறார்கள். கட்டளைக்கு அடிபணியாதவர்கள் மீது வருமான வரிச் சோதனை. வாக்குச் சாவடிகளை திமுக ரெüடிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததைப் பார்த்தீர்கள். போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டதையும் பார்த்தீர்கள். தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் இந்த அரசு மாற்றப்பட வேண்டும். மாற்றும் சக்தி வாக்காளர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது.  

ஆயிரம் ரூபாய்க்கு வாக்குகளை விற்றுவிடாதீர்கள்:  

               தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை திமுக அரசு ஏற்று நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிறது. நாம் இப்போது தேர்தல் ஆண்டில் இருக்கிறோம். தமிழ்நாடு இன்னும் 9 மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. அடுத்த அரசைத் தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு எல்லாம் கிடைக்கப் போகிறது.ஜனநாயக நாட்டின் குடிமக்களின் சக்தி வாய்ந்த ஆயுதம் வாக்களிப்பு என்பதை தயவுசெய்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் தேசத்தின் விதியை நீங்கள் மாற்றலாம். உங்கள் மாநிலத்தின் விதியை நீங்கள் நிர்ணயிக்கலாம். உங்களின் சொந்த விதியையும் மாற்றியமைக்கலாம். உங்களின் வாக்கு மூலம், மோசமான அரசை ஆட்சியிலிருந்து வெளியேற்றலாம்.புத்திசாலித்தனமாக வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசை அமர்த்தலாம். சாதுர்யமாக வாக்களியுங்கள். உங்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய வலுவான, ஊழலற்ற, திறமையான நிர்வாகத்தை அளிக்கக்கூடிய பொறுப்புள்ள அரசை ஆட்சிப்பீடத்தில் அமர்த்துங்கள். வெறும் ஆயிரம் ரூபாய்க்கு வாக்குகளை விற்றுவிடாதீர்கள். குடும்ப ஆட்சியை ஒழித்து, நல்ல அரசை அமைக்க இன்றே, இப்போதே அனைவரும் உறுதிமொழி ஏற்போம் என்றார் ஜெயலலிதா. 

"என் வாழ்நாளில் இதுவரை காணாத கூட்டம்"

                இதுவரை இத்தகைய கூட்டத்தை என் வாழ்நாளில் நான் கண்டதே இல்லை என்றார் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா.திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்துக்கு விமான நிலையத்திலிருந்து காரில் வந்த அவர், வழிநெடுக மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார். 

தனது பேச்சின் தொடக்கத்தில் இதைக் குறிப்பிட்ட ஜெயலலிதா மேலும் பேசியது:  

                  நான் 28 ஆண்டு காலமாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன். தமிழ்நாட்டில் நான் போகாத ஊரில்லை, பேசாத கூட்டமில்லை. எத்தனை பிரம்மாண்டமான கூட்டம் இது. இதுவரை என் வாழ்நாளில் இதுபோன்ற கூட்டத்தை நான் கண்டதில்லை. ஏறத்தாழ நான்கரை கிலோமீட்டர் தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டே மேடைக்கு வந்தேன்.திருச்சியுடன் நெருங்கிய தொடர்பு எனக்கு உண்டு. எனது குடும்பத்தினரின் பூர்வீகம் ஸ்ரீரங்கம். திருச்சிக்கு வருவது எனது சொந்த ஊருக்கு வருகிற உணர்ச்சியைக் கொடுக்கிறது. எனது சொந்த ஊரில் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான கூட்டத்தின் முன் உரையாற்றுவது அளவில்லா மகிழ்ச்சியைத் தருகிறது' என்றார்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP