திங்கள், 9 ஆகஸ்ட், 2010

கலைஞரை அ.தி.மு.க.வில் சேர்ப்பேன்! எஸ்.எஸ்.சந்திரன் ‘ஒரிஜினல்’ பேட்டி

 



           எஸ்.எஸ்.சந்திரன் சாதாரணமாக பேசினாலே சர்ச்சையைக் கிளப்பும். ஜெயலலிதா வகித்த கொள்கை பரப்புச் செயலாளர் பதவிக்கு அடுத்த துணைச் செயலாளர் பதவி கிடைத்தால் சும்மா இருப்பாரா? அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி பெற்ற சில நாட்களில் அவர் மீது முதல் அவதூறு வழக்கு ஆண்டிபட்டியில்!

             இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம். ‘ஆமாம் மாப்ள என்மேல அவதூறு வழக்கு போட்டிருக்காங்க...’ என்று செல்போனில் யாரிடமோ விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவர் சிறிது நேரத்தில் நமது கேள்விகளை எதிர்கொண்டார்.

ஆண்டிபட்டி அனுபவத்தை சொல்லுங்களேன்...

            அ.தி.மு.க.வின் தாய்வீடான ஆண்டிபட்டியில் அம்மாவைப்பற்றி கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் அழகிரி. பொய் தகவல்கள், வாக்குறுதிகள், அத்துடன் இலவச ஹார்லிக்ஸ் பாட்டிலும் கொடுத்-திருக்கிறார். அதில் பாதி தவிடு. அழகிரி பேசியதை சொல்ல நா கூசுகிறது. அதில் ஒன்றை மட்டும் சொல்கிறேன். ‘செல்வி என்று சொல்றாங்க... அவர் மேஜரா? மைனரா’ என்று அழகிரி பேசியிருக்கிறார். இதுபற்றி மக்களுக்கு விளக்க அ.தி.மு.க. சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

             அதற்காக சென்னையில் இருந்து நான், வளர்மதி, ராமராஜன் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தோம்-. எங்களை வழி மறிச்ச போலீஸ், ‘கூட்டத்துல நீங்க என்ன பேசுவீங்க. அதை எழுதிக் கொடுங்கன்னு’ கேட்டாங்க. நான் போலீஸ்காரங்கள திருப்பி கேட்டேன், ‘பிரசவ வலியால் துடிக்கிற பெண்ணிடம் உனக்கு என்ன குழந்தை பிறக்கும்னு சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்கு போ என்று சொல்வது எவ்வளவு மடத்தனமோ... அதுபோல் உங்கள் கேள்வி இருக்கிறது’ என்று கண்டித்தேன். மாலை ஐந்து மணிக்கு பொதுக் கூட்டம் ஆரம்பிச்சி எட்டு மணிக்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனை. இரவு 8 மணிக்கு மேல கரன்ட் பயன்படுத்தி மைக்கில் பேச எனக்குத் தடை. சரி ஜெனரேட்டர் பயன்படுத்தி பேசினால், ஒரு போலீஸ் அதிகாரி வந்து ‘ஆப்’ செய்கிறார். கருணாநிதி ஆட்சியில் கரன்ட்தான் கட் என்றால் ஜெனரேட்டரும் கட்டா?
 
பொதுக் கூட்டத்தில் கலைஞர், அழகிரி குறித்து அவதூறு பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே?

 
             உண்மையாகப் பார்த்தால் அவதூறு வழக்கை அழகிரி மீதுதான் பதிந்திருக்க வேண்டும். எத்தனை வழக்குகள் என்றாலும் நான் சந்திப்பேன். இப்போதுள்ள இதே காவல் துறைதான், அ.தி.மு.க. ஆட்சியில் நேர்மையாக இருந்தது. இப்போது அழகிரியின் உத்தரவுக்கு அடிபணிந்து செயல்படுகிறது. மற்றபடி அவதூறு வழக்கெல்லாம் எனக்குத் தங்கப் பதக்கம் மாதிரி.
 
கலைஞரோடு நெருங்கிப் பழகிய நீங்கள் அவர் மீது வைக்கும் அரசியல் ரீதியான விமர்சனங்கள் சரி...குடும்ப ரீதியான விமர்சனங்கள் சரியா?

             அம்மாவை தனிப்பட்ட முறையில் இவர் விமர்சனம் செய்து, இவரது நாளிதழில் எழுத-வில்லையா? அம்மா ஆப் டிரவுசர் போட்டிட்டு இருக்காங்க. அப்படின்னு இப்படின்னு முதல் பக்கத்துல அவர் பத்திரிகையில எழுதுவாரு. திரைப்படத்துல பச்சையா வசனம் எழுதுவாரு.

              கருணாநிதியைப் பற்றி நாங்க இல்லாததை சொல்லவில்லை. புரட்சித் தலைவரையே அலி என்று சொன்னவர். எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி, வைகோ ஒரு கொலையாளி என்பதெல்லாம் தனிமனித தாக்குதல் இல்லையா? வாஜ்பாயை பண்டாரம், பரதேசின்னு சொல்லலையா? இவரளவுக்கு தனிநபர் விமர்-சனம் இந்தியாவில் வேறு எவரும் பண்ணது கிடையாது. ஆனால் சாதாரண தொண்டன் எஸ்.எஸ்.சந்திரன் பேசினால் என் மீது வழக்கு. எங்களைக் காப்பாற்ற புரட்சி தலைவி அம்மா இருக்கிறார்.

          தன் பிறந்த நாள் அன்று கருணாநிதி குளிச்சிட்டு ராத்திரி இரண்டரை மணிக்கு ரெடியாக இருந்தாராம். இவர் மகள் கனிமொழி வாழ்த்து சொன்னாராம். அதற்கடுத்து 2.45 மணிக்கு குஷ்பு வாழ்த்து சொன்னாராம். அது அவருக்கு பெருமையா இருக்கு. நாங்க அதை சுட்டிக்காட்டினால் வருத்தமா இருக்கு! என்னத்த சொல்ல...
 
வாய்தா கேட்டு இழுத்தடித்து வரும் ஜெயலலிதாவை கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவித்து இருக்கிறாரே துணை முதல்வர் ஸ்டாலின்?

              வழக்குகளை நீதிமன்றம் தள்ளி வைச்சா, அதற்கு ஒரு போராட்டம் என்றால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. வழக்கு வாய்தா என்று நீண்டுகொண்டே சென்றால், அதற்கு நீதிமன்றத்தை எதிர்த்து வாதாடுங்க.. போராடுங்க. உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா? இது புரியாம அரசியல் காமெடி பண்ணுகிறார் ஸ்டாலின். மல்லிகைப் பூவை இரும்பு கடையில் கேட்கிறார் ஸ்டாலின். இதுபோன்ற துணை முதல்வர் தேவையா? இவர் தமிழ்நாட்டுக்கு துணை முதல்வரானது சாபக்கேடு.
 
அ.தி-.மு.க.வில் இருந்து வெளியேறும் தலைவர்கள் எல்லாம் இப்போதுதான் சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன் என்கிறார்களே?

            பத்தாண்டுகளாக நான் அடிமையாக இருந்தேன்னு சொல்றாரு முத்துசாமி. பிடிக்கவில்லையென்றால் கட்சியைவிட்டு போய்விட வேண்டியதுதானே? எம்.ஜி.ஆர்., அம்மா ஆட்சியில் பத்தாண்டுகள் அமைச்சராக சுகங்களை அனுபவித்து, தொண்டர்களின் ரத்தத்தை உறிஞ் சியவருக்கு இப்ப சுதந்திரம் கிடைச்சுடுச்சாமா?

               மயிலாப்பூர்ல சுயேச்சையா நின்ன-வரு எஸ்.வி.சேகரு. டெபாசிட் போச்சு. சின்னம் கொடுத்து, ஜெயிக்க வைச்சது அம்மா. இன்னைக்கு அ.தி.மு.க.வே, தி.மு.க. பக்கம் வந்துட்டதா சொல்றாரு. இன்னும் இவர் எந்த கட்சியில இருக்கி-றாருன்னு அவரால சொல்ல முடியல. தான் இருக்கும் கட்சி எந்தக் கட்சின்னு சொல்ல முடியாத ஒரே ஆள், இந்தியாவிலேயே இவர் ஒருத்தர்தான்.

             ராதாரவியை எம்.எல்.ஏ. ஆக்கினது அம்மா. இப்போ, பென்ஷன் வருதே... அதை வேண்டாம்னு எழுதிக் கொடுக்க வேண்டியதுதானே? அவர் ஆபத்தான நிலையில இருதய ஆபரேஷனுக்காக ஆஸ்பத்திரியல அட்மிட் ஆனப்ப, அம்மாவுக்குதான் கடிதம் எழுதினாரு. அவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்தவங்க அம்மா.

 டீ குடிக்க வழியில்லாமல் இருந்தார் தீப்பொறி. அந்த பொறி-கடலை பேச்சாளரை எல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு வந்து பணவசதியோடு வைத்த ஒரே கட்சி அ.திமு.க.

              சைக்கிளோடு வந்து அ.தி.மு.க.வுல சேர்றான். அ.தி.மு.க.வை விட்டு வெளியே போகும்போது பி.எம்.டபிள்யு. கார்ல போறான். கேட்டா ஒன்றும் செய்யவில்லைனு சொல்றான். ஆனா மக்களுக்கு எல்லாம் தெரியும்.

 தி.மு.க.வில் ஒவ்வொரு அமைச்சரும் ஒரு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரை தி.மு.க.வுக்கு இழுக்கின்றனர். உங்களுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்தால் நீங்கள் அ.தி.மு.க.வுக்கு யாரை அழைத்து வருவீர்கள்?

              தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்று எவ்வளவு பேர் வந்தாலும் அவர்களை அ.தி.மு.க.வுக்கு அழைத்து வருவேன். அ.தி.மு.க. தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்று கருணாநிதி சொன்னால் அவரைக் கூட நான் அழைத்து செல்வேன். ஆனால் அவர் அண்ணா இருந்த காலத்திலேயே தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்ததில்லை. அண்ணா காலத்திலேயே இரண்டு முறை ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார் கருணாநிதி. உண்டா இல்லையா என்று கேளுங்கள். ‘தமிழக அரசியல்’ பத்திரிகை மூலம் நான் அவருக்கு சவால் விடுகிறேன்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP