செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

‘‘78 தொகுதிகள் வேண்டும்!’’ - கார்த்தி சிதம்பரம்




               நாடெங்கும் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களில் மணி மகுடமாக அமைந்தது நாகை மாவட்டம் வேதாரண்யம் தியாகி வைரப்பனின் வெண்கல சிலை திறப்பு விழா.

யார் அந்த வைரப்பன்?

             உப்பு சத்யாகிரக போராட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளியான வைரப்பனும் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துகொண்டார். சுதந்திரப் போராட்ட வீரர்களை, ஆங்கிலேயர்கள் மிருகத்தனமாக துன்புறுத்தியதை கண்டு கலங்கிய வைரப்பன், ‘ஆங்கிலேயர்களுக்கு முடிதிருத்துவதில்லை’ என்று சபதம் செய்து அதன்படியே வாழ்ந்து வந்தார்.

                    ஒரு நாள் சாதாரண உடையில் வந்த ஒருவருக்கு முகச்சவரம் செய்து கொண்டிருந்தார். பாதி சவரம் செய்து கொண்டிருக்கும்போதுதான் வந்திருப்பது ஆங்கிலேய போலீஸ் என தெரியவந்தது. உடனே, பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனால் கோபமடைந்த ஆங்கிலேய போலீஸ் மீதி சவரம் செய்து முடிக்க வேண்டும் என்று மிரட்டியும் அதற்கு வைரப்பன் அடிபணியவில்லை.


வைரப்பன் வெள்ளைக்கார கோர்ட்டில் நிறுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘போலீஸ்காரருக்கு மீதி சவரவேலையை செய்து விடு’ என்று உத்தரவிட்டார். அதற்கு வைரப்பன், ‘இந்த தொழிலையே விட்டாலும் விடுவேனே தவிர, நம்மால அது முடியாதுங்க சாமி’ என்று கூறி சவரப்பெட்டியை நீதிபதியின் மேஜை மீது வைத்துவிட்டார். இதனால் கடுப்பான நீதிபதி வைரப்பனுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதன்படி 6 மாத சிறை தண்டனை அனுபவித்தார் வைரப்பன்.

இப்பேர்ப்பட்ட வைரப்பன், சுதந்திர தின பொன் விழா ஆண்டான 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை மத்திய, மாநில அமைச்சர்கள் வேதாரண்யத்தில் வைரப்பன் வீட்டு வாசல் வழியாக ஊர்வலமாக சென்றபோதுதான் இறந்தார். 
 
இத்தனை சிறப்பு வாய்ந்த வைரப்பனின் சிலையைத் திறந்து வைத்து பேசிய கார்த்தி சிதம்பரம், 
 
                  ‘‘வேதாரண்யத்துக்கு அகல ரயில் பாதை அமைத்து ரயில் விடவேண்டும். உப்புக்கான வரியை குறைக்க வேண்டும். நாகை துறைமுகத்தை விரிவுபடுத்த வேண்டும் என நமது முன்னாள் எம்.பி.யான பி.வி.ராஜேந்திரன் மூன்று கோரிக்கைகளை வைத்தார். ரயில்வே விஷயத்தை மம்தா மேடத்திடம் முடித்துவிடலாம். உப்பு வரி பிரச்னையும் பேசிவிடலாம். ஆனால் துறைமுகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக கப்பல் ஏற முடியுமான்னு தெரியலை. ஏன்னா கும்பகோணம் எப்போதும் கோணல்தான். (அதாவது வாசனையும் அவரது கப்பல் துறையையும் மறைமுகமாக குறிப்பிட்டார்).

                       தமிழ்நாட்டு அரசியலுக்கு ஏற்ப காங்கிரஸ் கட்சியை மாற்றணும். தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸில் 13 லட்சம் இளைஞர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இது இரண்டு முக்கிய திராவிட கட்சிகளிலும் இல்லை. அந்த அளவிற்கு வளர்ந்து வரும் காங்கிரஸை முறையாக வழி நடத்த வேண்டும். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு எம்.பி. தொகுதிக்கு இரண்டு சட்டமன்ற தொகுதிகளை காங்கிரஸுக்கு கேட்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் முழுவதும் கட்சியை வளர்க்க முடியும்’’ என்று முடித்தார்.


0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP