புதன், 25 ஆகஸ்ட், 2010

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது; கூட்டணி குறித்து தொடரும் யூகங்கள்

சென்னை:

                  தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2011) மே மாதம் முடிய உள்ளது. புதிய ஆட்சியை தேர்வு செய்ய இன்னும் சுமார் 8 மாத காலம் அவகாசம் இருக்கிறது.

                 சட்டசபை தேர்தல் முன் கூட்டியே நடத்தப்படலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. ஆனால் முன் கூட்டியே தேர்தல் வராது என்று முதல்- அமைச்சர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்ததைத் தொடர்ந்து அந்த யூகத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. என்றாலும் தற்போது தேர் தல் ஜூரம் மெல்ல, மெல்ல வரத் தொடங்கியுள்ளது.

                 தமிழ்நாட்டில் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த தயார் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அது போல தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் என்று தமிழக காவல் துறை கூறி உள்ளது. அனைத்தும் தயார் என் பதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

                   தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகள்தான் பிரதான கட்சிகளாகும். காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கும் கணிசமான வாக்குகள் உள்ளன. பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள், தேசிய லீக், முஸ்லிம்லீக், புதிய தமிழகம் போன்ற கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிககளில் செல்வாக்கு உள்ளது.

                      இந்த 10 கட்சிகள் தவிர பல்வேறு சாதி கட்சிகளும், மத ரீதியிலான கட்சிகளும் உள்ளன. இந்த கட்சிகள் கூட்டணி வைப்பதைப் பொறுத்தே வாக்குகள் சிதறுவதும், சேருவதும் முடிவுக்கு வரும். இதனால் கூட்டணி சேர்க்கை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

                     ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளன. இந்த கூட்டணி 2011 தேர்தலிலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருப்பதாக இரு கட்சிகளின் மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.

                      ஆனால் இந்த தடவை தி.மு.க.விடம் இருந்து கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற சில காங்கிரஸ் தலைவர்கள் இப்போதே காய்களை நகர்த்த தொடங்கி உள்ளனர். இளங்கோவனின் பேச்சுக்களும் இடையிடையே புயலை கிளப்பியது போல உள்ளது. என்றாலும் இவையெல்லாம் தற்காலிகமாக மின்னல்களாக கருதப்படுகின்றன. கூட்டணியை முடிவு செய்ய போவது மேலிட தலைவர்கள்தான் என்பதால் தி.மு.க.- காங்கிரசில் உள்ள மூத்த, முக்கிய தலைவர்கள் பரபரப்பு பேச்சுக்களை கண்டு பதற்றப்படாமல் உள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பேசிக் கொள்ளலாம் என்று உள்ளனர்.

                     அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. மட்டுமே உறுதியான, நம்பகத்தன்மை உள்ள நண்பனாக இருந்து வருகிறது. இடது சாரி கட்சிகளும் அந்த அணியில் உள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. போன்றவை இடம் பெறும் என்று யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியானது.

                       ஆனால் அ.தி.மு.க. திசை நோக்கி காங்கிரஸ் கட்சி நகர்ந்து செல்வதற்கான அறிகுறி எதுவும் சிறுதுளி அளவுக்கு கூட இதுவரை ஏற்படவில்லை. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று ஒரு விழாவில் பேசுகையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளார்.தற்போது சாதி கட்சிகளை அ.தி.மு.க. அரவணைக்கத் தொடங்கி உள்ளது. அதன் முதல் கட்டமாக புதிய தமிழகம் கட்சி அ.தி.மு.க. பக்கம் சாய்ந்துள்ளது. இஸ்லாமிய, கிறிஸ்தவ கட்சி களுக்கும் அ.தி.மு.க. வலை விரித்துள்ளது.தேர்தல் நெருங்கும் சமயத்தில் சில முக்கிய கட்சிகள் தங்கள் அணிக்குள் வந்து விடுவார்கள் என்று அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டன் வரை அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு ஜெயலலிதா நடத்தும் பொதுக்கூட்டங்கள் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த தாக்கம் தேர்தல் கால பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

                      2011 தேர்தலில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த், நினைக்கிறார். எனவே தே.மு.தி.க. தலைமையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஆனால் அவரை உதிரி கட்சிகளில் ஒன்றாக மாற்றி தங்கள் அணியில் உட்கார வைக்க திராவிட பெரிய கட்சிகள் நினைக்கின்றன. தே.மு.தி.க. தொண்டர்களில் 90 சதவீதம் பேர் 2011 தேர்தலில் யாருடனாவது கூட்டணி வைத்தால்தான் அரசியல் நடத்த முடியும் என்று நினைக்கிறார்கள். எனவே கூட்டணிக்கு வலியுறுத்தி வருகிறார்கள். கூட்டணியில் கவுரவமான இடம் கிடைக்கும் பட்சத்தில் விஜயகாந்த் தன் முடிவை மாற்றிக்கொள்வார் என்று கூறப்படுகிறது. சுமார் 100 தொகுதிகளில் முடிவை நிர்ணயிக்கும் ஆற்றல் தே.மு. தி.க.வுக்கு இருப்பதாக கூறப்படுவதால் தே.மு. தி.க.வை பல கட்சிகளும் சற்று மிரட்சியுடனே பார்க்கின்றன.

                     பாட்டாளி மக்கள் கட்சி தற்போதைக்கு எந்த கூட்டணியிலும் இல்லை. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். எனவே பா.ம.க. எந்த அணியில் இடம் பெறும் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது. வட மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு இருக்கும் செல்வாக்கு எந்த விதத்திலும் குறையவில்லை. சமீபத்தில் நடந்த பென்னாகரம் தேர்தல் முடிவு இதை உறுதிப்படுத்தியது. பென்னாகரம் தேர்தல் பிரசார பார்மூலாவை மற்ற தொகுதிகளிலும் கடை பிடிக்க பா.ம.க. தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டனர். வடமாவட்டங்களில் உள்ள சுமார் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் பா.ம.க. தலைவர்கள் திட்டமிட்டுகளப் பணியில் ஈடுபட உள்ளனர். பா.ம.க. வின் இந்த அதிரடி நடவடிக்கைகளை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் உன் னிப்பாக கவனித்து வருகின்றன. பா.ம.க. தன்னை வலுப்படுத்தி கொண்ட பிறகு கூட்டணி பேச்சை கம்பீரமாக நடத்தும் என்று கூறப்படுகிறது. தே.மு. தி.க.வுடன் கை கோர்க்க கூட பா.ம.க. தயாராக இருப்பதாக சமீபத்தில் வெளியான தகவல்கள் பலரது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
  
             எனவே காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய 3 கட்சிகளும் கூட்டணியில் இடம் பெறுவதைப் பொறுத்தே தமிழக தேர்தல் நிலவரம் மாறும்.

                அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் கோவையில் பொதுக் கூட்டம் நடத்திய பிறகு தேர்தல் பணி கள் விறுவிறுப்பாகி விட்டன. இந்த நிலையில் நேற்று கட்சிக்காரர்கள் திருமணத்தை நடத்தி பேசிய ஜெயலலிதா தேர்தல் கவுண்ட்டவுன் தொடங்கி விட்டாக கூறி உள்ளார்.இதனால் மற்ற கட்சிகளும் தேர்தல் சுறுசுறுப்பை எட்டி உள்ளன. கூட்டணிகள் மாறுமா? யார்- யாருடன் சேருவார்கள்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் இதற்கு விடை கிடைத்துவிடும்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP