வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

திமுகவை எதிர்க்க தமிழக மக்கள் தயார்: வைகோ

நாமக்கல்:

           இலங்கையில் தமிழர் படுகொலை, மின்தடை, விலைவாசி உயர்வு, ஒரே குடும்பத்தின் ஆதிக்கம் ஆகிய காரணங்களால் திமுக-வை எதிர்க்க தமிழக மக்கள் தயாராகவிட்டதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.

           மதிமுக சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொடி பயணம் நடைபெற்று வருகிறது. 

3-வது நாளான வியாழக்கிழமை நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்றி வைத்து மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியது:

                தமிழகத்தில் இயற்கை வளம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஆளும் திமுக அரசே காரணம். மணல் கொள்ளையால் நதி வளம் குறைந்து வருகிறது. கிரானைட் கற்களுக்காக மலைக் குன்றுகள் சுரண்டப்பட்டு வருகின்றன. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற யானை மலையை பெயர்த்து எடுக்கவும் டெண்டர் விடப்பட்டது.÷ மக்கள் எதிர்ப்பு காரணமாகவும், மதிமுக போராடும் என அறிவித்ததைத் தொடர்ந்து அரசாணை ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தை 6 அதிகார மையங்கள் ஆட்சி செய்து வருகின்றன. 

              முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என அனைத்து நதிகளையும் அண்டை மாநிலங்கள் அபகரிக்க ஆங்காங்கே அணை கட்ட துவங்கியுள்ளன. இவற்றை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடுத்த நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்கிறது தமிழக அரசு. ஆனால், ஆந்திர மாநிலத்தில் நதி வளம் காக்க போராட்டம் நடத்தும் முன்னாள் முதல்வருக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் தற்போது ஆளும் முதல்வர் ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், தமிழக அரசோ மாநிலத்தின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க இயலாத நிலையில் உள்ளது.

          முதல்வர் கருணாநிதி முனைப்புடன் செயல்பட்டிருந்தால் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கையில் போர் நடைபெறாமல் செய்திருக்க முடியும். லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால், ஆட்சி பறிபோகும் என்ற காரணத்தினாலேயே மத்திய அரசின் போர் ஒத்துழைப்புக்கு திமுக அரசும் ஆதரவாக இருந்துவிட்டது. ஆனால், தமிழக மக்கள் இதனை மறக்கவில்லை. 

                         அதிமுக கூட்டம் நடத்தும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கூடுவதை அறிந்து அதிமுக கூட்டம் நடத்திய இடங்களிலேயே திமுக பொதுக் கூட்டத்தையும் தமிழக முதல்வர் நடத்தி வருகிறார். இது தோல்வி பயத்தையே காட்டுகிறது. அதிமுக-வுக்கு பின்னால் செல்வதே திமுக பின்தங்கியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 47 பெண்கள் கழுத்தறுக்கப்பட்டும், தலை துண்டிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

                      சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எஸ்எம்எஸ் அனுப்பிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடைபெறவில்லை.  இத்தகைய நடவடிக்கைகளைப் பார்த்து தமிழக மக்களே திமுக-வை எதிர்க்க தயாராகிவிட்டனர் என்றார்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP