சனி, 14 ஆகஸ்ட், 2010

திருவாரூர் தொகுதியில் கலைஞர் போட்டி? - யூகம் கிளப்பிய கலைஞரின் தஞ்சை விசிட்




                ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரும் தனது தாயார் அஞ்சுகத்தம்மாள் சமாதியில் அஞ்சலி... அதன்பிறகு தஞ்சையில் ஒரு பொதுக்கூட்டம்... அதில் உடன்பிறப்புக்கள் உற்சாகப்படும்படி அறிவிப்பு... இப்படித்தான் ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்துள்ளார் கலைஞர். அதன்படிதான் இந்த முறையும்!

                  வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரியை தொடங்கி வைக்கலாம் என்று உடல் நலம் கருதி ஸ்டாலின் கேட்டுக்கொள்ள, மறுத்த முதல்வர், நேரில் வந்துதான் திறப்பேன் என்று அடம்பிடித்து ரயில் மூலம் திருவாரூர் வந்து திறந்து வைத்தார்.

விழாவில், பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., சிவபுண்ணியம், மன்னார்குடிக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை, கலைஞர் காபபீட்டுத் திட்டம், 108 வாகன பயன், திருத்துறைப்பூண்டி கலைக் கல்லூரி என அரசு செய்த சாதனைகளை ஒரு தூக்கு தூக்கிப்பிடித்து, ‘‘எல்லாம் தந்த முதல்வர் ஒரு சட்டக் கல்லூரியை நிறுவ வேண்டும்’’ என¢ற கோரிக்கையை முன் வைக்க மறக்கவில்லை.

இதையடுத்து, பேசிய சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், 
 
                  ‘‘சிவபுண்ணியம் கோரிக்கை வைப்பதில் கெட்டிக்காரராக இருந்தாலும், அரசின் திட்டங்களை மனதார பாராட்டுகிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது. திருவாரூரை தனி மாவட்டமாக அறிவித்து பல திட்டங்களைத் தந்த அந்த நல்ல உள்ளத¢தை திருவாரூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும்’’ என்று யாரும் எதிர்பாராத ரகசியத்தை போட்டுடைத்தார்.

                       முதல்வர் தன் பேச்சில் இதுபற்றி குறிப்பிடுவார் என பலரும் எதிர்பார்க்க... ‘‘இது அரசு விழா என்பதால் நான் அரசியல் பேச முடியாது. தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன்’’ என்று முடித்துக் கொண்டார்.

                     தனித் தொகுதியாக இருந்த திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இப்போது பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்... ‘இந்தமுறை நான்தான் போட்டியிடப் போகிறேன். யாரும் என்னை எதிர்த்து நிற்கக்கூடாது, எனக்குத்தான் சீட் கிடைக்கும்’ என்று பால்வள அமைச்சரை ஓரம் கட்டியே செயல்பட்டு வந்தார் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன். அதைக் காட்டும் வகையில் முதல்வர் வருகையை ஒட்டி அமைக்கப்பட்ட விளம்பரங்களிலும் அவரது பெயரே பிரதானமாக இருந்தது. அமைச்சர் மதிவாணனைக்கூட வைக்கவிடவில்லை.

                   ‘இதற்காக மிரட்டல்கள் கூட விட்டது மா.செ. தரப்பு’ என முணுமுணுத்துக்கொண்டிருந்தது அமைச்சர் தரப்பு. இதையெல்லாம் அறிந்து கொண்ட முதல்வர், ‘என்னய்யா இது..’ என்று வேதனைப்பட்டுக் கொண்டாராம்.

                   இந்த நிலைமையில்தான்... கலைஞரே, நானே திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று தனது எண்ணத்தை எம்.ஆர்.கே. விடம் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் முன்மொழியச் சொல்லி இருக்கிறார் என்று உடன்பிறப்புக்கள் சிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை பொதுக் கூட்டத்துக்குத் தயாரானார் கலைஞர்.

                   மத்திய இணையமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பழனிமாணிக்கம், தனது சொந்த வைட்டமின் வை இறக்கினார். பல்வேறு ஊர்களில் இருந்து வாகனங்களில் வந்துகொண்டே இருந்தனர் தி.மு.க.வினர். மகளிர் சுய உதவிக் குழுவினர் இலவசமாக அரசு பஸ்களில் வந்திறங்கினர். அன்று தஞ்சாவூர் நகர பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கவில்லை. சாலைகள் நடுவே ராட்சத எல்.சி.டி. தொலைக்காட்சிகளை வைத்ததால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகி நகரப் பேருந்துகள் 2 கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தப்பட்டன.

                  திருவாரூரிலிருந்து தஞ்சை வந்த முதல்வர் வழக்கம் போல ஆட்சி சென்டிமென்ட் கருதி, பெரியகோயில் வழியாக செல்வதைத் தவிர்த்தார். தமிழ் பல்கலைக்கழகத்தில் செம்மொழி உயர் ஆய்வு மையத்தை பார்வையிட்டு, பின்னர் தி.மு.க. மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்பு இரவு 8 மணிக்கு பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தார். அமைச்சர்கள் புடை சூழ மேடையேறினார் கலைஞர். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன் மேடையின் எதிரே அமர்ந்ததைப் பார்த்துவிட்டு, ஸ்டாலினிடம் கலைஞர் ஏதோ சொல்ல... மேடையில் முன் வரிசையில் அவருக்கு நாற்காலி போடப்பட்டது.

                       நேரம்கருதி அமைச்சர்களை பேச அழைக்கும்போது 2 நிமிடம்தான் என்று சொன்ன ஸ்டாலின், மேடையில் இருந்த எல்.கணேசனைப் பார்த்து உங்களுக்கும் 2 நிமிடம்தான் என்று 2 விரல்களை காட்டிய தளபதியிடம், பதிலுக்கு எல்.கணேசனும் 2 விரலைக் காட்டி தலை அசைத்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘
 
                   ‘ஜெயலலிதாவின் அறிக்கையைப் படித்த பிறகு அண்ணன் வெற்றிகொண்டானைப் போலத்தான் பேச வேண்டும். இங்கே வீற்றிருக்கின்ற நல்ல உள்ளத்தைப் பார்த்தா திருட்டு ரயில் ஏறி வந்தார் என்று சொல்கிறாய்? நீ என்ன மைசூர் மகாராஜா பேத்தியா? உன் லட்சணம் தெரியாதா? உடைந்த தகர டப்பாவுடனும், கிழிந்த பாவாடையுடனும்தான் வந்தாய¢. போதும் இதோடு உன¢ வாய் ஜாலத்தை நிறுத்திக்கொள்’’ என போய்க்கொண்டே இருக்க தஞ்சைக்கே குமட்டியது.

கடைசியாக பொதுக்கூட்ட உரையாற்றிய முதல்வர், 
 
                ‘‘தஞ்சைக்கு நான் புதியவன் அல்ல’’ என்றபடி, திருட்டு ரயிலேறி வந்தவர் என்ற ஜெ.வின் புகாருக்கு விளக்கம் கொடுத்துவிட்டு, ‘‘ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோயிலின் 1000&வது ஆண்டு விழாவை அரசே ஏற்று நடத்தும். இதன்மூலம் தஞ்சை மாவட்டத்திற்கு நலத் திட்டங்கள் கிடைக்கும்’’என்று முடித்துக் கொண்டார்.

கலைஞர் விசிட் பற்றி ஏரியாவின் மூத்த புள்ளிகளிடம் பேசியபோது... 
 
                     ‘‘கலைஞரின் அரசியல் வாழ்க்கையில் திருவாரூர் தொகுதியில் நின்று வெல்லவேண்டும் என்பது அவருக்கு இருக்கும் பெரிய ஆவல். இதை அவரே ஆசைப்பட்டு சொல்லியிருக்கிறார். ஆனால் இதுவரை தனித் தொகுதியாக இருந்ததால் அது நடக்கவில்லை. இப்போது திருவாரூர் பொதுத் தொகுதியாகிவிட்டது. தன் பொது வாழ்க்கை ஆரம்பித்த திருவாரூரிலேயே இறுதிகட்ட பொதுவாழ்வையும் நடத்த ஆசைப்படுகிறார் முதல்வர். இதற்காக, வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் கலைஞர் போட்டியிட வேண்டும் என்பதை எல்லோரும் சேர்ந்து வலியுறுத்த இருக்கிறோம்’’ என்றார்கள்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP