பொதுக்கூட்டங்களை வெற்றிகரமாக நடத்த வேண்டும் : கருணாநிதி

சென்னை :
""இந்த மாதம் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை தி.மு.க., இளைஞர் அணி சார்பில் நடத்தும் பொதுக்கூட்டங்களையும், தெருமுனை பிரசாரங்களையும் பேச்சாளர்களும், நிர்வாகிகளும் வெற்றிகரமாக நடத்த வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க.,பேச்சாளர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
பேச்சாளர்கள் தங்கள் சிரமங்களை இங்கே எடுத்துச் சொன்ன போது, அதை குறிப்பிட்டு ஒரு சிலர் கைதட்டியதை நான் காணத் தவறவில்லை. நிர்வாகிகளை குறை சொல்லிப் பேசினால் பேச்சாளர்களுக்கு மகிழ்ச்சி. சில பேச்சாளர்களைக் குறிப்பிட்டு குறை கூறிப் பேசினால் நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சி. இந்த நிலை தொடரக்கூடாது. பேச்சாளர்கள் ஒரு ஜாதி, நிர்வாகிகள் ஒரு ஜாதி என்று தி.மு.க.,வில் இல்லை. அவர்கள் யாராக இருந்தாலும் ஒரே ஜாதி தான்.
எல்லாரும் தி.மு.க., என்ற இந்த ஜாதி தான்.நிர்வாகத்திலே கோளாறு என்று சொல்லும் போது பேச்சாளர்களுக்கு அது வரவேற்கக் கூடிய ஒரு செய்தியாக இருக்கிறது. அதைப்போல பேச்சாளர்கள் என்னென்ன குறை செய்தனர், குறை உடையவர்களாக இருக்கின்றனர் என்று சொல்லும் போது, நிர்வாகிகளுக்கு அதிலே ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.பேச்சாளர்களை அழைத்து ஒழுங்காக கூட்டம் நடத்தி பேச வைக்காமல், வழிச் செலவு கொடுக்காமல் திருப்பி அனுப்பி வைக்கிற சில நிர்வாகிகளை நான் அறிவேன். அதேபோல், பேச்சாளர் வரவில்லை என்று மனக்குறைபட்ட நிர்வாகிகளையும் நான் அறிவேன். எனவே, நிர்வாகிகள், பேச்சாளர்கள் என்று இரு கூறாக, இரண்டு ஜாதியாக பிரியாமல் நிர்வாகியானாலும், பேச்சாளரானாலும் இரண்டு பேரும் ஒன்று தான் என்ற உணர்வோடு நீங்கள் இருந்தால் தான், இன்னும் வலிமையாக தி.மு.க.,வை முன் நடத்திச் செல்ல முடியும்.
என் பெயரால் உள்ள அறக்கட்டளை மூலம் இந்த மாதம் வரை 2,049 பேருக்கு, ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., சார்பாக இதுபோல உதவிகள் வழங்கப்பட்டுள்ள கணக்கையும் பொதுக்குழுவில் சொல்லத் தயார். செப்டம்பரில் நடக்கும் முப்பெரும் விழா ஒரு வாரத்திற்கு நடத்தப்படுகிறது. அதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். இந்த மாதம் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை தி.மு.க., இளைஞர் அணியின் சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டங்களையும் ஒழுங்காக நடத்த வேண்டும். தெருமுனை பிரசாரம் என இழிவாகக் கருதக்கூடாது.
தெருமுனை பிரசாரம், பொதுக்கூட்டம், மாநாடு என்று எதுவாக இருந்தாலும் எல்லாமே நம் கட்சிக் கொள்கை வளர்க்கும் பிரசாரம் தான் என்ற நிலையிலே கலந்து கொண்டு வெற்றிகரமாக அவற்றை நடத்த வேண்டும். நீலகிரியில் பேச்சாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக