தேர்தலில் மக்களை திரட்டுவோம்: ம.தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்

சென்னை :
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., அரசை வீழ்த்த, மக்கள் சக்தியை திரட்டும் பணியில் ம.தி.மு.க., ஈடுபடும்' என, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னை தாயகத்தில் நேற்று நடந்தது. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமை வகித்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
காஞ்சிபுரத்தில் திறந்தவெளி மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சித் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். கட்சியின் நான்காவது அமைப்புத் தேர்தல்களை வரும் நவம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஆற்று மணல், கிரானைட் கற்கள் போன்ற தமிழகத்தின் இயற்கை வளங்கள் அளவின்றிச் சுரண்டப்படுகின்றன. தமிழகத்தின் இயற்கைச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுள்ளது.
அரிசி, காய்கறி, பருப்பு வகைகளின் கடுமையான விலை உயர்வு, மக்களைத் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. மத்திய அரசில் பதவி வகித்து வரும் தி.மு.க., பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தி.மு.க., அரசின் நிர்வாகச் சீர்கேடுகளாலும், ஊழலாலும் மின்சார உற்பத்தி குறைந்து, மின்தட்டுப்பாடு ஏற்பட்டது. மின்வெட்டால் மக்கள் அல்லல்படுகின்றனர். தொழில்கள் முடங்கி உள்ளன. இந்நிலையில், மின் கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தியுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளாததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடிக்கு நீர் இன்றி விவசாயிகள் வாடுகின்றனர். தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் கொடுமை அன்றாட நிகழ்வாக ஆகிவிட்டது. தி.மு.க., அரசை வரும் சட்டசபை தேர்தலில் வீழ்த்திட, மக்கள் சக்தியை திரட்டும் களப்பணியில் முனைப்பாக கட்சி ஈடுபடும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக