காங்கிரசார் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்: கூட்டணியை விமர்சித்தால் நடவடிக்கை- தங்கபாலு எச்சரிக்கை

கோவை:
தங்கபாலு கோவையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை, தமிழக தலைமை மற்றும் தி.மு.க. தலைமை இடையே எந்த விதபிரச்சினையும் இல்லை. காங்கிரஸ்- தி.மு.க. உறவில் யாரும் குறுக்கே வரமுடியாது.
அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற நிலையில் கூட்டணி பற்றி இதுவரை விமர்சித்து பேச வில்லை.
தி.மு.க.வை பற்றி தனிப்பட்ட முறையில் காங்கிரசார் யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. காங்கிரஸ் நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். கட்சியில் பேசவேண்டிய விஷயங்களை உள்கட்சி யிலும், வெளியில் பேச வேண்டியதை மேடையிலும் பேச வேண்டும். இதை மீறி கூட்டணி பற்றி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
தேர்தலுக்கு இன்னும் ஒருவருடம் இருக்கிறது. எனவே இப்போது தேர்தல் கூட்டணி பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை. கட்சியை பலப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கட்சியின் கருத்துக்களை தெரிவிக்க எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மற்ற வர்கள் கூறும் கருத்து அதிகாரப்பூர்வமானது அல்ல.
தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி காங்கிரஸ் கவலைப்பட வேண்டியது இல்லை. மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். புதிதாக 14 லட்சம் இளைஞர்கள் காங்கிரசில் சேர்ந்து இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திடிசம்பர் மாதம் சென்னை வருகிறார். அப்போது பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெண்களுக்கு 33சதவீத இடங்கள் வழங்கப்படும்.தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 சதவீத இடம் கொடுக்கப்படும். இளைஞர்களுக்கும் உரிய வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக