ஆக.25ல் தி.மு.க.,வில் ஐக்கியமாகிறார் திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி

திருப்பூர் :
""ஆதரவாளர்களின் விருப்பப்படி, சென்னையில் முதல்வர் முன்னிலையில் வரும் 25ம் தேதி தி.மு.க.,வில் இணைவதென முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தெரிவித்தார்.
திருப்பூரில் அவர் நேற்று கூறியதாவது:
மா.கம்யூ.,வில் தற்போதுள்ள மாநில நிர்வாகிகள், கட்சிக் கோட்பாடுக்கு மதிப்பளித்து நிர்வாகம் செய்வதில்லை. ஒருவர் மீது குற்றச்சாட்டு எழும்போது, கட்சிக் கோட்பாடுக்கு உட்பட்டு விசாரித்து நடவடிக்கை எடுப்பதில்லை. குற்றம் சாட்டப்படும் நபர்களை பொருத்தே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழக அரசுக்கு பாராட்டு விழா எடுப்பதற்கு, மா.கம்யூ., தடை விதித்தது. திட்டமிட்டபடி விழா கண்டிப்பாக நடத்தப்படும் என கூறியதால், கட்சியில் இருந்து என்னையும், ஆதரவாளர்களையும் நீக்கினர். தொகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதற்காக, ஆதரவாளர்களுடன் எதிர்காலம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆதரவாளர்களின் ஏகோபித்த கருத்துப்படி, தி.மு.க.,வில் இணைந்து அரசியல் பயணத்தை தொடர்வதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இணைப்பு விழா, வரும் 25 ம் தேதி சென்னை அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடக்கிறது. திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து 250 பஸ்களில், 20 ஆயிரம் பேருடன் சென்று தி.மு.க.,வில் இணைகிறோம்.இவ்வாறு கோவிந்தசாமி கூறினார்.
பதவி தப்புமா:
மா.கம்யூ., சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., பதவி குறித்து கோவிந்தசாமியிடம் கேட்டபோது, ""மா.கம்யூ., கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதால், பதவிக்கு பாதிப்பு வராது. தி.மு.க.,வில் இணைவதற்காக ராஜினாமா செய்ய தேவையில்லை. இருப்பினும், சட்ட வல்லுனர்களிடமும் இதுகுறித்து ஆலோசனை பெறப்படும்,'' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக