வியாழன், 21 ஏப்ரல், 2011

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011: வாக்களித்தவர்கள் விபரம் ( தொகுதிவாரியாக)

Read more...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011: 49 ஒ வாக்களித்தவர்கள் விபரம் ( தொகுதிவாரியாக)

Read more...

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

2011 தமிழகதமிழக சட்டமன்றத் தேர்தலில் 76% வாக்குப் பதிவு

          தமிழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 76 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகத் தெரிகிறது.

                அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்த வாக்குப் பதிவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் பெரிதாக நடைபெறவில்லை. இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனர். தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஆனால், வாக்காளர்கள் 8 மணிக்கு முன்னதாகவே வாக்குச் சாவடிகளில் வரிசைகளில் நிற்கத் தொடங்கினர். இளைஞர்களும், முதன் முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்திருந்தனர்.

               சென்னை கோபாலபுரத்தில் சாரதா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் முதல்வர் கருணாநிதியும், ஸ்டெல்லா மேரி கல்லூரி வாக்குச் சாவடியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வாக்களித்தனர்.

சில இடங்களில் பிரச்னை: 

            வாக்குப் பதிவு தொடங்கியதும் சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டது.சென்னையில் அண்ணா நகர், கே.கே.நகர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு உள்பட்ட சில வாக்குச் சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப் பதிவு தடைபட்டது.

                இதேபோன்று, பிற மாவட்டங்களில் சில தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டன. சிறிது நேரத்தில் அவை சரிசெய்யப்பட்டன. இயந்திரங்களில் கோளாறுகள் ஒருபுறம் இருக்க, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற புகார்கள் அதிகளவில் ஒலித்தன. ஆனால், இது கடந்த தேர்தலை விட மிகக் குறைவு என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.சில இடங்களில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் வைத்திருந்தனர். 

                வாக்களிப்பதற்கு இதுவே போதும் என நினைத்த காரணத்தால் வாக்காளர் பட்டியலில் அவர்கள் தங்களது பெயர்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்கவில்லை. அட்டையைக் கொண்டு வாக்களிக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெயர் இல்லாததால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.

விக்கிரவாண்டியில்...: 

             விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. விக்கிரவாண்டி தி.மு.க. ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது."

                '49 ஓ': வாக்குச் சாவடி வளாகங்களிலேயே வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டன. இதனால், அடையாள ஆவணம் இல்லை என்ற கவலை இன்றி மக்கள் வாக்களித்தனர். அதேசமயம், மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளுக்குள் வந்து செல்ல சாய்வு தளங்கள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பல வாக்குச் சாவடிகளில் செயல்படுத்தப்படவில்லை. இதனால், மாற்றுத் திறனாளிகள் பெரும் அவதிப்பட்டே வாக்குச் சாவடிகளுக்குள் சென்றனர்.

                "யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்கிற பிரிவு (49 ஓ) குறித்த விளம்பரம் சுவரொட்டிகளாக வாக்குச் சாவடிகளில் ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருந்தன. இதுகுறித்த விழிப்புணர்வு வாக்காளர்களில் சிலருக்கு ஏற்கெனவே இருந்த காரணத்தால், வாக்குச் சாவடிக்கு ஒருவர் வீதம் "49 ஓ' பிரிவைப் பயன்படுத்தினர். 

               நீலகிரி மாவட்டத்தில் 1,000-க்கும் அதிகமானோர் அந்தப் பிரிவை பயன்படுத்தி தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

சதவீதம் அதிகம்: 

                இந்தத் தேர்தலில் 76 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவானதாகத் தெரிகிறது. சில மாவட்டங்களில் இருந்து முழுமையான நிலவரம் வராத நிலையில் வாக்குப் பதிவு சதவீதத்தின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. சரியாக 5 மணிக்கு வாக்காளர்கள் வரிசையில் நிற்பது நிறுத்தப்பட்டது. 5 மணிக்குள் வந்து வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டது.

                பல தொகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் மாலை 4.30 மணி முதல் 5 மணிக்கு உள்ளாக வந்தனர். இதனால், இரவு 7 மணி வரையிலும் வாக்குப் பதிவு நீடித்தது.1967 சட்டப் பேரவைத் தேர்தலில் 76.57 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுவே, தமிழக பேரவைத் தேர்தல்களில் அதிகபட்ச வாக்குப் பதிவாகும். மற்ற மாவட்டங்களின் வாக்கு சதவீதம் உறுதியாகத் தெரியும்பட்சத்தில் புதன்கிழமை பதிவான வாக்குகள் 76 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.அப்படி அதிகரித்தால், இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதமே தமிழகத்தில் அதிகபட்ச வாக்கு சதவீதம் என்ற பெருமையைப் பெறும்.

மே 13-ல் வாக்கு எண்ணிக்கை: 

                தமிழகத்தில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 13-ம் தேதி எண்ணப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 94 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே சரியாக ஒரு மாத கால இடைவெளி இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 

விஐபி தொகுதிகள் வாக்குப் பதிவு 

முதல்வர் கருணாநிதி, திருவாரூர் - 75
ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் - 73
ஸ்டாலின், கொளத்தூர் - 66
விஜயகாந்த், ரிஷிவந்தியம் - 82 

வாக்கு சதவீதமும் வெற்றியும் 

                தமிழகத்தில் 1967-ல் சட்டப் பேரவைத் தேர்தலில் 76.57 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழக பேரவைத் தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப் பதிவாகும். 1984 பேரவைத் தேர்தலில் 73.47 சதவீதம் வாக்குகள் பதிவாகின.இந்த நிலையில், 2011 பேரவைத் தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மேலும் அதிகரிக்கக்கூடும்.
  
1967-ல் இருந்து நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களின் வாக்குப் பதிவு (சதவீதத்தில்) விவரம்:

1967--76.57 (தி.மு.க. வெற்றி)
1971--72.10 (தி.மு.க. வெற்றி)
1977--61.58 (அ.தி.மு.க. வெற்றி)
1980--65.42 (அ.தி.மு.க. வெற்றி)
1984--73.47 (அ.தி.மு.க. வெற்றி)
1989--69.69 (தி.மு.க. வெற்றி)
1991--63.84 (அ.தி.மு.க. வெற்றி)
1996--66.95 (தி.மு.க. வெற்றி)
2001--59.07 (அ.தி.மு.க. வெற்றி)
2006--70.56 (தி.மு.க. வெற்றி)

Read more...

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: பிரவீண் குமார் எச்சரிக்கை

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார். உடன் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா.
             சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் வாக்குப் பதிவை ரத்து செய்யவும், மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் எச்சரித்துள்ளார்.  வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்ட தொகுதிகளின் நிலவரங்களை கையில் வைத்துக் கொண்டே ஆணையம் இவ்வாறு கூறியுள்ளதாகக் கருத்து நிலவுகிறது. 

 யார் தகவல்கள் அளிப்பார்கள்? 

            ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுப் பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் என தனித்தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு தகவல்களை அளித்து வருகின்றனர்.  அவர்கள் தரும் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்தும், பொதுவாக வரும் புகார்களின் தன்மையைக் கொண்டும் முறைகேடுகளின் அளவு நிர்ணயிக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

 புனித ஜார்ஜ் கோட்டையில் திங்கள்கிழமை பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியது:  

             சட்டப் பேரவைத் தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கருதினால், அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்த பிறகும்கூட அதை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்தலை அறிவிக்க முடியும்.  தேர்தல் பிரசாரம் முடிவுற்ற நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.  பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ள தொகுதிகளின் விவரங்கள் ஏதும் கணக்கெடுக்கப்படவில்லை. பணப்பட்டுவாடா குறித்து சில தொகுதிகளில் அதிகளவு புகார்கள் வருகின்றன என்றார் பிரவீண் குமார்.  

எவ்வளவு பணம் பறிமுதல்? 

               தமிழகத்தில் வாகன சோதனைகள் மூலம் இதுவரை ரூ.33.11 கோடி ரொக்கமாகவும், ரூ.12.58 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களைக் காட்டியதைத் தொடர்ந்து, ரூ.5.18 கோடி பணம் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, 61 ஆயிரத்து 20 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதில், அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்தது உள்ளிட்ட புகார்கள் 55 ஆயிரத்து 254. உரிய அனுமதியில்லாமல் வாகனங்களை இயக்கியதாக 2 ஆயிரத்து 850 புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.  பணம், பரிசுப் பொருட்கள் அளித்ததாக 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த வழக்குகளின் எண்ணிக்கை 641 ஆக இருந்தது என்றார் பிரவீண் குமார்.  வாக்களிப்பதற்காக பணம், பரிசுப் பொருட்களைப் பெற்றால் கொடுத்தவருக்கும், வாங்கியவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read more...

தமிழகத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணிகளில் 234 தொகுதியில் 245 கோடீஸ்வரர்கள்

           தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகளில், 245 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்

            .அ.தி.மு.க., போட்டியிடும், 160 தொகுதிகளில், 88 பேர் கோடீஸ்வரர்கள். தே.மு.தி.க., போட்டியிடும், 41 தொகுதிகளில், 14 பேர் கோடீஸ்வரர்கள். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக, தலா, ஒரு கோடீஸ்வரர் களமிறக்கப்பட்டுள்ளார். தி.மு.க., போட்டியிடும், 119 தொகுதிகளில், 81 பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் நிறுத்தியுள்ள, 63 வேட்பாளர்களில், 40 பேர் கோடீஸ்வரர்கள். பா.ம.க., நிறுத்தியுள்ள, 30 வேட்பாளர்களில், 12 பேரும், விடுதலைச் சிறுத்தைகளின், 10 வேட்பாளர்களில் இரண்டு பேரும் கோடீஸ்வரர்கள்

             கொ.மு.க., ஏழு இடங்களில் போட்டியிடுகிறது. இதில், ஆறு பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் சார்பில் ஒருவர், 133 கோடி சொத்தும், அ.தி.மு.க., அணியில் ஒருவர், 103 கோடி ரூபாய் சொத்தும், அதிகபட்சமாக கணக்கு காட்டியுள்ளனர். மிகக் குறைந்த தொகையாக விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் செல்லபாண்டியன் 75 ஆயிரம் ரூபாய் ‌சொத்து கணக்கு காட்டியுள்ளார்.

Read more...

திங்கள், 11 ஏப்ரல், 2011

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக-காங்கிரஸ் நேரடிப் போட்டி

     மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக கே.ஜெயக்குமாரும், அதிமுக சார்பில் எஸ்.கணிதாசம்பத்தும் போட்டியிடுகின்றனர்.  இது தவிர, பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இருந்தாலும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையேதான் நேரடிப் போட்டி. 
                 இதில் அதிமுக வேட்பாளர் எஸ்.கணிதாசம்பத், ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்தவர். காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், 2 முறை நாமக்கல் தொகுதியில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸின் தற்போதைய சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு குழுவின் ஐவரில் ஒருவர்.  கடந்த முறை மதுராந்தகம் தொகுயில் இருந்த இலத்தூர் ஒன்றியம் புதியதாக உருவாக்கப்பட்ட செய்யூர் (தனி)தொகுதிக்கு மாறியுள்ளது. அதே போல் அச்சிறுபாக்கம் (தனி)தொகுதி நீக்கப்பட்டு அத் தொகுதியில் இருந்த அச்சிறுபாக்கம் ஒன்றியத்திலுள்ள 59 ஊராட்சிகளும், பேரூராட்சியும் மதுராந்தகம் தொகுதியில் சேர்க்கப்பட்டுவிட்டன.  
            இதுவே இரு வேட்பாளர்களுக்கு சாதகமாகவும்,பாதகமாகவும் இருக்கும்.  இத் தொகுதி பொதுத்தொகுதியாக இருந்து தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 750 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆதிதிராவிடர்கள் 39 சதவீதமும், வன்னியர்கள் 30 சதவீதமும் மற்றவர்கள் 31 சதவீதமும் உள்ளனர்.  இது வரை பொதுத் தொகுதியாக இருந்த போது 1952 தேர்தல்களில் இருந்து இதுவரை காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 4 முறையும்,திமுக 5 முறையும் வெற்றி பெற்று உள்ளன.  கடந்த 2006-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் காயத்ரிதேவி, தன்னை எதிர்த்த அதிமுக வேட்பாளர் கோ.அப்பாதுரையை விட 3691 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
             இத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் கஜேந்திரன், 9811 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.  கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற காயத்ரிதேவி, 2001-ல் மூடப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறக்க சட்டப் பேரவையில் பலமுறைகள் வலியுறுத்தியதன் பேரில் மீண்டும் ஆலையைத் திறக்க திமுக அரசு உத்தரவிட்டது. இந்த ஆலையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று, தற்போது ஆலையில் சோதனை அரவை நடைபெற்று வருகிறது. இதனால் கரும்பு விவசாயிகள் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு நன்றியுடன் வாக்களிப்பார்கள் என திமுக கூட்டணியினர் நம்புகின்றனர்.  
              மதுராந்தகம்-சூணாம்பேடு சாலையில் ரூ.14 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருவது உள்ளிட்ட சில பணிகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமாக அமையும். இத் தொகுதியில் விவசாயமே முக்கியத் தொழிலாகும்.இதுவரை மாவட்டத்திலுள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது விவசாயிகளிடையே பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த ஏரி தூர்வார பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. ஆகவே, விவசாயிகளின் வாக்குகள் திமுக கூட்டணியான காங்கிரசுக்கு கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான். 
              பல்வேறு அடிப்படை பிரச்னைகள் கிராமங்களில் நிறைவேற்றப்படாததும், மதுராந்தகம் நகராட்சியில் அடிப்படை வசதியான சாக்கடை நீர் கால்வாயில் செல்லாமல் சாலையில் ஓடுவது உள்ளிட்டவையும் காங்கிரஸின் வாக்குகளை பாதிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.  காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு,திமுக,பாமக,விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் கூட்டணி பலம் சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், திமுக ஆட்சியில் செய்தவை குறித்து பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்து வருகிறார் வேட்பாளர் ஜெயக்குமார்.  அதிமுக வேட்பாளர் கணிதாசம்பத் கூட்டணியில் உள்ள தேமுதிக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளுடன் களம் இறங்கி உள்ளார்.  பிரசாரத்தின் போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையைக் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார். அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பிரசாரம் செய்து தேமுதிக தொண்டர்களை உற்சாகப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
                கடந்த முறை அதிமுக வேட்பாளர் கோ.அப்பாதுரை, 3691 என்ற குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்ததால் இந்த முறை அதிமுக வேட்பாளரான எஸ்.கணிதாசம்பத்தை மிக எளிதாக வெற்றி பெற வைத்துவிடலாம் என அதிமுகவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.  மேலும், இத் தொகுதியில் 9811 வாக்குகள் பெற்ற தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக வேட்பாளர் கணிதாசம்பத் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும் அதிமுக நம்புகிறது.  இத் தொகுதியை பொறுத்தவரை கடுமையானப் போட்டி நிலவுவதால் யார் வெற்றி பெற்றாலும் சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசமே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Read more...

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க - அதிமுக நேரடிப்போட்டி 
            தொகுதி மறுசீரமைப்பின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11}வது தொகுதியாக, புதிதாக உருவாக்கப்பட்ட பல்லாவரம் தொகுதியில் வெற்றி பெற திமுகவும், அதிமுகவும் கடுமையாக உழைத்து வருகின்றன.  
 
              கடந்த தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திமுக வேட்பாளராகவும், பல்லாவரம் நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர் தன்சிங் அ.தி.மு.க வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் ஐக்கிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் உள்பட 16 பேர் போட்டியிட்டாலும், தி.மு.க - அதிமுகவுக்கு இடையேதான் நேரடிப்போட்டி.  
 
            ஆலந்தூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க.செயலாளர் என்ற முறையில் மாவட்டம் முழுக்க பணிபுரிந்தாலும்,தனது தொகுதியைச் சேர்ந்த பல்லாவரம் நகராட்சிப் பகுதி முன்னேற்றத்திலும், கட்டமைப்புப் பணிகளிலும் தனிக் கவனம் செலுத்தியதால், கடந்த 5 ஆண்டுகளில் பல்லாவரம் பிரமிக்கத்தக்க வளர்ச்சி பெற்றது.  பாலங்கள்,பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பணிகள் வேறெந்த புறநகர் பகுதித் தொகுதிகளிலும் நிறைவேற்றப்படவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். 
 
              தனது அமைச்சகப் பணிகளுக்கு அடுத்தபடியாக தா.மோ.அன்பரசன் பல்லாவரம் நகராட்சி வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்தியதால், தமிழக முதல்வர் கருணாநிதி பல்லாவரம் தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூட பேச்சு அடிபட்டது.  பல்லாவரம்,குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள நகர்நலச் சங்க பிரதிநிதிகள் மூலம் அப்பகுதியில் இருந்து வந்த குறைந்த மின்அழுத்தப் பிரச்னை,குடிநீர் பிரச்னை,போக்குவரத்து தேவை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, உடனுக்குடன் நிறைவேற்றி வைத்துள்ளார் தா.மோ.அன்பரசன்.  
 
            பல்லாவரம் தொகுதியில் பிராமணர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் கணிசமான அளவில் இருந்தாலும், தொகுதி முழுக்க ஆதி திராவிட சமுதாய மக்கள் 20 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளனர்.  பல்லாவரத்தில் நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றி இருக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் தன்சிங்கிற்குக் கணிசமான அளவில் வாக்கு கிடைக்கும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி ஆகியவை அ.தி.மு.க அணிக்கு பலம் சேர்க்கும். இரு கட்சிகளுமே கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளன.  யார் வெற்றி பெற்றாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் ஜெயிக்க முடியும் என்ற நிலைதான் பல்லாவரத்தில் உள்ளது.

Read more...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பாமகவுக்கும்-அதிமுகவுக்கும் இடையே நேரடியான போட்டி               காஞ்சிபுரத்தில் தொகுதி மறுசீரமைப்பில் சற்று உருமாறியுள்ள தொகுதி காஞ்சிபுரம். இத் தொகுதியில் பாமகவுக்கும்-அதிமுகவுக்கும் இடையே நேரடியான கடும் போட்டி நிலவுகிறது.  இத் தொகுதியில் நடைபெற்ற 12 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக 5 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 
 
             கடந்த தேர்தலில் பாமக வெற்றி பெற்றது.  இத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரமும், பாமக சார்பில் முன்னாள் செய்யாறு எம்எல்ஏ உலகரட்சகனும் போட்டியிடுகின்றனர்.  இத் தொகுதியில் 2,31,038 வாக்குகள் உள்ளன. இவர்களில் 35 சதவீதம் வன்னியர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 28 சதவீதம் முதலியார் சமூகத்தினரும், தாழ்த்தப்பட்டோர் 25 சதவீதத்தினரும் உள்ளனர். இதர ஜாதியைச் சேர்ந்தவர்கள் 12 சதவீதம் பேர் உள்ளனர்.  இத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் உலகரட்சகன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது அவருக்கு பலம். மேலும் இக் கூட்டணியில் உள்ள திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகியவை இணைந்து தீவிரம் பிரசாரம் செய்வது கூடுதல் பலம். 
 
            ராமதாஸ், மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து வந்து பிரசாரம் செய்துவிட்டு சென்றிருப்பதால் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  இருப்பினும் தொடர்ந்து இரு முறை கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கியிருப்பதால் திமுக நிர்வாகிகள் சிலர் சோர்வடைந்துள்ளனர். எதிர்கட்சிகளால் வைக்கப்படும் விலைவாசி உயர்வு, ஊழல் ஆகிய பிரசார யுக்தியால் நகர்புறத்தில் இவர்களுக்கு வாக்கு இழப்பு ஏற்படும். தான் தேர்தலில் வெற்றி பெற்றால் புதிய பாதாள சாக்கடைத் திட்டம் அமைப்பது, நெசவாளர் பிரச்னையை தீர்க்க முக்கியத்துவம் அளிப்பது, குடிதண்ணீர் பிரச்னையை தீர்ப்பது ஆகிய வாக்குறுதிகளை உலகரட்சகன் அளித்து வருகிறார். 
 
               அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வி.சோமசுந்தரம் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இச் சமூகத்தினரும் இத் தொகுதியில் அதிகம் இருப்பது இவருக்கு பலம். அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிரசாரம் செய்துவிட்டு சென்றுள்ளார். இதனால் அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் பாமக 11,284 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது. இத் தொகுதியில் ரூ.15,187 வாக்குகள் பெற்ற தேமுதிக அதிமுக கூட்டணியில் சேர்ந்திருப்பதும் இக் கூட்டணிக்கு பலம். தேமுதிக தனித்து போட்யிட்டபோது அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக வாக்குகள் விழுந்திருக்கலாம். 
 
              அந்த வாக்குகள் தற்போது கூட்டணிக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் அரசியல் நோக்கர்கள் மத்தியில் உள்ளது.  இத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்யும் அதிமுகவினர் தேமுதிகவை தவிர மற்ற கூட்டணிக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைத்து செயல்படவில்லை என்ற குறை உள்ளது. திமுக அரசால் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் கிராம மக்களிடம் முழுமையாக சென்றடைந்துள்ளதால் அங்கு திமுக கூட்டணியின் வாக்கு வங்கியை உடைப்பதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சில சுயேச்சை வேட்பாளர்கள் அதிமுகவின் வாக்கு வங்கியை சிதைத்து வருவதாகவும் அதிமுகவினர் மத்தியிலேயே பேச்சு உள்ளது. 
 
               மேலும் கைத்தறி துறை அமைச்சராக இருந்தபோது வி.சோமசுந்தரம் நெசவாளர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்ற பாமகவின் பிரசாரம் நெசவாளர்கள் மத்தியில் எடுபடுகிறது.  நகர்புறத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியிலும், இளம் வாக்காளர்கள் மத்தியிலும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவான சூழ்நிலையும், அரசின் நலத்திட்ட உதவிகள், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புகளின் ஜாதி வாக்குகள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்துவதால் கூலித் தொழிலாளர்கள் வாக்குகள் என்று கிராமப்பு புற பகுதிகள் பாமகவுக்கு சாதகமாகவும் உள்ளன.  
 
             பாமகவுக்கும்-அதிமுகவுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தாலும், கடைசி நேர சாமார்த்திய சதுரங்கத்தில் யார் முந்துகிறார்களோ அவர்களுக்கு வெற்றி கிடைக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Read more...

திருவாரூர் சட்டமன்றத் தொகுதி முதல்வரின் தொகுதியாகவும் இருக்குமா?
 
             
                தொடர்ந்து 12-வது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் திருவாரூரில் மண்ணின் மைந்தராய் களமிறங்கியுள்ளார் திமுக தலைவரும், முதல்வருமான மு. கருணாநிதி.  திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாறியுள்ளது. 
 
               தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர், திருவாரூர் தொகுதியில் இருந்த சில பகுதிகள் நாகை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கீழ்வேளூர் (தனி) தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. மன்னார்குடி தொகுதியில் இருந்த கூத்தாநல்லூர் நகராட்சி, வக்கிராநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகள் திருவாரூர் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரத்தநாடு தொகுதியில் இருந்த பொதக்குடி, அத்திக்கடை உள்ளிட்ட பகுதிகளும் திருவாரூர் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.  தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு திருவாரூர் தொகுதி பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக இத் தொகுதியில் கருணாநிதி போட்டியிடுகிறார்.
 
              இதனால், இந்தத் தொகுதி தற்போது வி.வி.ஐ.பி. அந்தஸ்தைப் பெற்றுள்ளது.  ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகைக்கு அருகிலுள்ளது திருக்குவளை கிராமம். இங்கு பிறந்தாலும், தனது பள்ளிப் பருவக் கல்விக்காக சொந்த ஊரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாரூருக்கு வந்து தங்கியவர் கருணாநிதி. அதன் பின்னர் அரசியலில் ஈடுபட்டு, முதன் முதலில் 1957-ம் ஆண்டில் குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
                இதைத் தொடர்ந்து, 1962-ல் தஞ்சாவூர், 1967, 1971-ல் சைதாப்பேட்டை, 1977, 1980-ல் அண்ணாநகர், 1989, 1991-ல் துறைமுகம், 1996,2001,2006-ல் சேப்பாக்கம் தொகுதி என போட்டியிட்ட 11 முறையும் தோல்வி காணாத பேரவை உறுப்பினராகத் திகழ்கிறார் கருணாநிதி. 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.  12-வது முறையாக தான் படித்து, வளர்ந்த திருவாரூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தலில் இப்போது போட்டியிடுகிறார்.  
 
                இவரை எதிர்த்து அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் குடவாசலை சேர்ந்த எம். ராஜேந்திரன். இவர் அதிமுகவில் மாவட்டச் செயலர், ஒன்றியக் குழுத் தலைவர், பேரூராட்சித் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் எந்தப் பதவியும் இல்லாமலும், கட்சிப் பணிகளில் பங்கேற்காமலும் இருந்து வந்தவர். இந்நிலையில், திடீரென ராஜேந்திரனுக்கு திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளது அதிமுக தலைமை.  திருவாரூர் தொகுதியில் வெள்ளாளர்கள் அதிகமாக உள்ளனர். தாழ்த்தப்பட்டவர்களும் கணிசமாக உள்ளனர். இந்தத் தொகுதியில் உள்ள கொடிக்கால்பாளையம், அடியக்கமங்கலம், கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி. கள்ளர் சமுதாயத்தினரும் இங்கு உள்ளனர்.  திமுக வாக்கு வங்கி இத் தொகுதியில் சற்று அதிகம் என்றாலும், அதிமுக, இடதுசாரிக் கட்சிகள், தேமுதிக ஆகியவற்றுக்கு உள்ள வாக்கு வங்கியை ஒப்பிடும்போது, இரு அணிகளும் சமமான வாக்கு வங்கியைப் பெற்றுள்ளன என்றுதான் கூற வேண்டும்.
 
                   கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இத் தொகுதி தனித்தொகுதியாகவே இருந்து வந்த காரணத்தால், ஜாதி வாக்குகள் வெற்றி, தோல்வியை என்றும் நிர்ணயித்ததில்லை. இதனால், வெற்றி தோல்விக்கு ஜாதி ஒரு காரணமாக இருந்ததற்கான வாய்ப்புகளும் ஏற்படவில்லை.  இந்தத் தொகுதியில் 1962-ம் ஆண்டில் தொடங்கி, 2006-ம் ஆண்டு வரையிலான 11 தேர்தல்களில் திமுக அல்லது திமுகவின் ஆதரவு பெற்ற வேட்பாளரே பெரும்பாலும் வெற்றி பெற்ற நிலைதான் இங்கு தொடர்ந்து இருந்து வந்துள்ளது.  கடந்த 2006-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உ. மதிவாணன் 76,901 வாக்குகள் பெற்று, பால்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 
 
                 அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ. தங்கமணி 49,968 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் என். மோகன்குமார் 5,198 வாக்குகளும் பெற்றனர்.  2009 மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் மக்களவை தொகுதிக்குட்பட்ட திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் 75,038, அதிமுக அணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் 55,873 வாக்குகள் பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் முத்துகுமார் 9,734 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் அதிமுக தேமுதிக வாக்குகளைவிட திமுக வேட்பாளர் கிட்டதட்ட 10 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
                 திமுகவுக்கு பெரும்பாலும் சாதகமான தொகுதியாக திருவாரூர் தொகுதி இருந்து வந்துள்ளதை கடந்த காலத் தேர்தல் வரலாறுகள் காட்டுகின்றன.  1997-ம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து பிரித்து 10 ஊராட்சி ஒன்றியங்கள், 7 வட்டங்கள், 4 நகராட்சிகளுடன் பிரிக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம். இதனாலேயே, அதிமுக ஆட்சியில் கவனிக்கப்படாத பகுதியாக திருவாரூர் இருந்தது என்பது இத் தொகுதி மக்களின் பரவலான குற்றச்சாட்டு.  மேலும், தற்போதைய திமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி, திருவாரூரில் தமிழகத்துக்கான மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூரில் புதிய பேருந்து நிலையத்துக்கான நிதி ஒதுக்கீடு, அரைவட்டப் புறவழிச் சாலைக்கு நிதி ஒதுக்கீடு ஆகியவை மக்களுக்கான பயனுள்ள திட்டங்களில் முக்கியமானவை.  
 
               அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேந்திரன் அதிமுகவினரிடையே சமீபகாலமாக நெருங்கிய தொடர்பில்லாதவர் என்பது அவருக்கு பலவீனம். இருப்பினும், அதிமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு கிளைகளும், வாக்குகளும் உள்ள பகுதி திருவாரூர் தொகுதி என்பதும், மக்களை பாதித்துள்ள விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள திமுக எதிர்ப்பு அலை ஆகியவை அவருக்கு பலமாகவும் அமைந்துள்ளன.  கடந்த நாற்பது ஆண்டுகளாக சென்னை மாநகரில் போட்டியிட்டு வந்த முதல்வர் கருணாநிதி இந்த முறை திருவாரூருக்குப் போய் போட்டியிட நேர்ந்திருப்பது சென்னையிலும், தமிழகத்தின் ஏனைய தொகுதிகளிலும் திமுகவின் பலவீனத்தைக் காட்டுவதாக இருக்கலாம். ஆனால், தனது சொந்த ஊரில் தனது கடைசித் தேர்தலில் கருணாநிதி போட்டியிடுகிறார் என்பது திருவாரூர் தொகுதியில் அவருக்கு பலம். 
 
              "இப்போதாவது நமது ஊருக்கு நம்ம ஊர் பிள்ளை வந்து போட்டியிடுகிறதே' என்பது நிச்சயமாக அவருக்குக் "கை' கொடுக்கும் சென்டிமென்ட்.  காமராஜ், பக்தவத்சலம், அண்ணா என்று பல தலைவர்கள் தங்கள் சொந்தத் தொகுதியில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். அந்த "சென்டிமென்டை' இந்த முறை திருவாரூரில் முதல்வர் கருணாநிதி முறியடிப்பார் என்று நம்பலாம்.  தொகுதி மக்கள் மத்தியில் பரவலாகக் கேட்கப்படும் கேள்வி. என்ன தெரியுமா? "இது முதல்வர் போட்டியிடும் தொகுதியாக மட்டும்தான் இருக்குமா இல்லை முதல்வரின் தொகுதியாக இருக்குமா?' என்பதுதான்

Read more...

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் பரபரப்பான மும்முனைப் போட்டி!


               
                நாகர்கோவில் தொகுதியின் தேர்தல் முடிவை தமிழகம் மட்டுமல்ல, நாடே எதிர்பார்க்கிறது. காரணம், இங்கு பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பதும், அவர் வெற்றி பெற்றால் அதுவே தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையக்கூடும் என்பதும்தான்.  இதுவரை மக்களவைத் தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் இப்போதுதான் முதன்முறையாகப் பேரவைத் தேர்தலில் களம் இறங்கி இருக்கிறார்.
 
                இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் சமுதாய வாக்காளர்களைக் கொண்ட நாகர்கோவில் தொகுதியில் எண்ணிக்கையில் இந்து நாடார்கள் முதலிடத்திலும், கிறிஸ்தவ நாடார்கள் அடுத்ததாகவும் உள்ளனர். நாகர்கோவில் நகராட்சியில் 5 வார்டுகளில் முஸ்லிம்கள் பெருமளவு உள்ளனர். 
 
 இங்கு மொத்த வாக்காளர்கள் 2,09,587. 
ஆண்கள்-1,05,410, 
பெண்கள்-1,04,177. 
 
            நாகர்கோவில் நகராட்சியின் 51 வார்டுகளையும், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கி இத் தொகுதி உள்ளது. 
 
                 கடந்த தேர்தல்வரை குளச்சலில் இடம்பெற்றிருந்த பல பகுதிகள் இப்போது நாகர்கோவிலுடன் இணைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவிலில் இடம்பெற்றிருந்த பல பகுதிகள் கன்னியாகுமரி தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் நகரப் பகுதி வாக்காளர்களை அதிகமாகக் கொண்ட தொகுதியாக நாகர்கோவில் மாறி இருக்கிறது. இங்கு பாஜக மாநிலத் தலைவரும் முன்னாள் மத்திய துணையமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்து அதிமுக வேட்பாளராக மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் நாஞ்சில் ஏ. முருகேசனும், திமுக வேட்பாளராக நாகர்கோவில் நகரச் செயலர் வழக்கறிஞர் ஆர். மகேஷும் போட்டியிடுகின்றனர்.  
 
                 மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் இரண்டு தேர்தல்களிலுமே, (1957, 1962) இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். 1989-ல் நான்குமுனைப் போட்டி ஏற்பட்டபோது இந்தத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எம். மோசஸ் சுமார் ஏழாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தனக்கு அடுத்து வந்த திமுக வேட்பாளர் தர்மராஜைத் தோற்கடித்தார். இந்தத் தொகுதியில் கணிசமாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவர்களது வாக்குகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவை என்பதையும்தான் இது சுட்டிக்காட்டுகிறது. 
 
          1967 தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட திமுக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது என்றாலும், அடுத்து வந்த 1971 தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் ஆதரவுடன் சுதந்திராக் கட்சி வேட்பாளர் மோசஸ்தான் மீண்டும் இங்கு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக அலை வீசியது என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு, 1977, 1980 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் இந்தத் தொகுதியை அதிமுகதான் கைப்பற்றியது. 1980 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும் இந்தத் தொகுதியைக் கைப்பற்ற முடியவில்லை. 
 
                   காங்கிரஸ் வாக்காளர்கள் முழுமையாகத் திமுகவை ஆதரிக்காததும், எம்.ஜி.ஆர் அலை வீசியதும்கூட அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.  அதேநேரத்தில், 1984-ல் தமிழகம் முழுவதும் இந்திரா படுகொலையால் அனுதாப அலையும், எம்.ஜி.ஆர். உடல்நலக் குறைவால் ஏற்பட்ட ஆதரவு அலை இருந்தும், நாகர்கோவில் மட்டும் வித்தியாசமாக திமுக வேட்பாளரான எஸ். ரத்தினராஜை ஆதரித்து வெற்றிபெறச் செய்தது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் அவர் வெற்றி பெற்றார் என்றாலும், யாருமே எதிர்பாராத வெற்றியாக அது அமைந்தது.  1989, 1991, 1996 என்று தொடர்ந்து நாகர்கோவில் தொகுதியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் மோசஸ்
 
                . 1996-ல் தமாகா பிரிந்தபோது அந்தக் கட்சியில் இணைந்து கொண்டவர், மீண்டும் தமாகா தாய்க் கட்சியான காங்கிரஸில் இணைந்தபோது காங்கிரஸ் திரும்பி விட்டார்.  2001 தேர்தலில் நாகர்கோவில் 1984, 1989 தேர்தல்களில் அளித்ததுபோல மீண்டும் ஓர் அதிர்ச்சியைத் தந்தது. டாக்டர் மோசஸ் தமாகா வேட்பாளராக அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்டார் என்றாலும் தமிழ்நாடு முழுவதும் வீசிய அதிமுக அலையை மீறி நாகர்கோவிலில் அவர் திமுக ஆதரவுடன் போட்டியிட்ட எம்.ஜி.ஆர். அதிமுக வேட்பாளர் என். ஆஸ்டினிடம் தோல்வி அடைந்தார். 
 
                  2006 சட்டப்பேரவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதி மீண்டும் தனது காங்கிரஸ் விசுவாசத்தைக் காட்டியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ. ராஜன் வெற்றி பெற்றார். பொன். ராதாகிருஷ்ணன் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவரை எதிர்த்துப் போட்டியிடும் நாஞ்சில் முருகேசனும், ஆர். மகேஷும் தேர்தல் களத்துக்குப் புதியவர்கள். இத் தொகுதியில் திமுக வேட்பாளராக இப்போதைய எம்எல்ஏ ராஜன் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
                    மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளரான ராஜன் புறக்கணிக்கப்பட்டு, மு.க. ஸ்டாலின் ஆதரவாளரான மகேஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  கடந்த பல தேர்தல்களில் கிறிஸ்தவ வேட்பாளரையே இத் தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இம் முறை இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில், களத்தில் உள்ள மூன்று முக்கிய வேட்பாளர்களுமே இந்துக்களாக இருப்பதுதான்.  இதைக் கருத்தில் கொண்டு மகேஷும், நாஞ்சில் முருகேசனும் கிறிஸ்தவ ஆயர்களையும், குருமார்களையும் சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர். 

                 கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் சட்டப்பேரவைப் பகுதியில் 48,965 வாக்குகள் பெற்றிருந்தார். இங்கே அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட பெல்லார்மின் 13,232 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆஸ்டின் 10,230 வாக்குகளும்தான் பெற முடிந்தது. மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஹெலன் டேவிட்சன், நாகர்கோவிலில் பெற்றது 41,476 வாக்குகள்தான். 
 
                 இந்த முறை தேமுதிக, இடதுசாரிகள் என்கிற கூட்டணி பலத்துடன் அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசனும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி பலத்துடன் திமுக வேட்பாளர் மகேஷும் களமிறங்கி இருந்தாலும், முன்னணி வேட்பாளராகக் காணப்படுவது என்னவோ பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன்தான். எதிர்பாராத திருப்பங்களையும், அதிர்ச்சிகளையும் ஏற்படுத்துவது நாகர்கோவில் தொகுதியின் தனித்துவம். கூட்டணி பலம் எதுவும் இல்லாமல் சொந்த செல்வாக்கில் பாஜக நாகர்கோவில் தொகுதியைக் கைப்பற்றுமேயானால், ஆச்சரியப்படுவதற்கில்லை! 

Read more...

வியாழன், 7 ஏப்ரல், 2011

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011: திமுக வேட்பாளர்கள் புகைப்படங்கள் பகுதி 1


பூங்கோதை ஆலடி அருணா ஆலங்குளம்
 

ஆவுடையப்பன் ஆர். அம்பாசமுத்திரம்
 

ரங்கநாதன் பி அம்பத்தூர்
 

மூக்கையா  எல் ஆண்டிப்பட்டி
 

ராஜா என்.கே.கே.பி அந்தியூர்


சிவானந்தம் . ஆர் ஆரணி
 

பழனிசாமி கே.சி. அரவக்குறிச்சி
 

ராமச்சந்திரன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அருப்புக்கோட்டை
 

பெரியசாமி ஐ ஆத்தூர்

லோகேஸ்வரி பவானிசாகர் (தனி)


லெட்சுமணன் எஸ். போடிநாயக்கனூர்
 

அன்பழகன் ஜெ சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
 

வீரகோபால் எம். கோவை வடக்கு
 

பொங்கலூர் பழனிசாமி கோவை தெற்கு
 

ராமச்சந்திரன் கா.குன்னூர்

 

புகழேந்தி இ. கடலூர்
 

ராமகிருஷ்ணன்  என் கம்பம்
 

ஜெயந்தி இரா. தாராபுரம் (தனி
 

சேகர்பாபு பி.கே டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர்


பரிதி இளம்வழுதி எழும்பூர் (தனி)
 

முத்துசாமி சு. ஈரோடு கிழக்கு
 

கவிஞர் கவிதைப்பித்தன் கந்தர்வக்கோட்டை (தனி)
 

சின்னதுரை கு. கங்கவல்லி (தனி)
 

திராவிடமணி மு. கூடலூர் (தனி)


ராஜமார்த்தாண்டன் க. குடியாத்தம் (தனி)
 

சீத்தாராமன் கே. கே.வி.குப்பம் (தனி)
 

சுரேஷ் ராஜன் என். கன்னியாகுமரி
 

துரைமுருகன் காட்பாடி
 

சுப்பிரமணியன் டி.பி. கவுண்டம்பாளையம்


கு.பிச்சாண்டி கீழ்பெண்ணாத்தூர்
 

மதிவாணன் உ கீழ்வேளூர் (தனி)
 

மு.கண்ணப்பன் கிணத்துக்கடவு
 

மு.க.ஸ்டாலின் கொளத்தூர்
 

காமராஜ் பி. கிருஷ்ணராயபுரம் (தனி)


மாணிக்கம் ஆர். குளித்தலை
 

வெப்படை ஜி.செல்வராஜ் குமாரபாளையம்
 

குத்தாலம் அன்பழகன் கே. கும்பகோணம்
 

சிவசங்கர் எஸ்.எஸ். குன்னம்
 

பன்னீர்செல்வம் எம்.ஆர்.கே குறிஞ்சிப்பாடி


சௌந்தர பாண்டியன் ஏ. லால்குடி
 

சாமிநாதன் மு.பெ மடத்துக்குளம்
 

டாக்டர். கனிமொழி மாதவரம்
 

மூர்த்தி பி மதுரை கிழக்கு
 

தளபதி கோ.மதுரை மேற்கு


கவுஸ்பாட்சா எஸ்.எஸ். மதுரை மத்தி

தமிழரசி ஆர். மானாமதுரை (தனி)
 

செல்வராஜ் என்.மண்ணச்சநல்லூர்
 

ராஜா டி.ஆர்.பி.
 மன்னார்குடி
 

ராணி ராஜமாணிக்கம்மேலூர்


அருண்குமார் பி மேட்டுப்பாளையம்
 

சத்தியமூர்த்தி வ. முதுகுளத்தூர்
 

மகேஷ் ஆர். நாகர்கோவில்
 

இளங்கோவன் ஆர்.நன்னிலம் 

விஜயன் க.நத்தம்
 


மகேஷ் கிருஷ்ணசாமி டி.ஒரத்தநாடு
 

சக்கரபாணி ஆர் ஒட்டன்சத்திரம்
 

ராஜா சௌ. ஓட்டப்பிடாரம் (தனி)
 

டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் பத்மனாபபுரம்
 

மொய்தீன் கான் டி.பி.எம். பாளையங்கோட்டை


செந்தில்குமார் இ.பெ. பழநி
 

தா.மோ.அன்பரசன் பல்லாவரம்
 

சபா ராஜேந்திரன் பண்ருட்டி
 

வ.முல்லைவேந்தன் பாப்பிரெட்டிபட்டி
 

இன்பசேகரன் பி.என்.பி.பெண்ணாகரம்


பிரபாகரன் எம். பெரம்பலூர் (தனி)
 

அன்பழகன் வீ. பெரியகுளம் (தனி)
 

மணிமேகலை அ. பொன்னேரி (தனி)
 

பெரியண்ணன் அரசு புதுக்கோட்டை
 

தங்கபாண்டியன் எஸ். இராஜபாளையம்


காந்தி ஆர் ராணிப்பேட்டை
 

துரைசாமி வி.பி ராசிபுரம் (தனி)
 

மகேஷ்குமார் மு. சைதாப்பேட்டை
 

சிவலிங்கம் எஸ்.ஆர். சேலம் தெற்கு
 

ராஜேந்திரன் .ஆர்சேலம் மேற்குRead more...

About This Blogஇந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP