பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க - அதிமுக நேரடிப்போட்டி

தொகுதி மறுசீரமைப்பின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11}வது தொகுதியாக, புதிதாக உருவாக்கப்பட்ட பல்லாவரம் தொகுதியில் வெற்றி பெற திமுகவும், அதிமுகவும் கடுமையாக உழைத்து வருகின்றன.
கடந்த தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திமுக வேட்பாளராகவும், பல்லாவரம் நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர் தன்சிங் அ.தி.மு.க வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் ஐக்கிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் உள்பட 16 பேர் போட்டியிட்டாலும், தி.மு.க - அதிமுகவுக்கு இடையேதான் நேரடிப்போட்டி.
ஆலந்தூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க.செயலாளர் என்ற முறையில் மாவட்டம் முழுக்க பணிபுரிந்தாலும்,தனது தொகுதியைச் சேர்ந்த பல்லாவரம் நகராட்சிப் பகுதி முன்னேற்றத்திலும், கட்டமைப்புப் பணிகளிலும் தனிக் கவனம் செலுத்தியதால், கடந்த 5 ஆண்டுகளில் பல்லாவரம் பிரமிக்கத்தக்க வளர்ச்சி பெற்றது. பாலங்கள்,பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பணிகள் வேறெந்த புறநகர் பகுதித் தொகுதிகளிலும் நிறைவேற்றப்படவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
தனது அமைச்சகப் பணிகளுக்கு அடுத்தபடியாக தா.மோ.அன்பரசன் பல்லாவரம் நகராட்சி வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்தியதால், தமிழக முதல்வர் கருணாநிதி பல்லாவரம் தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூட பேச்சு அடிபட்டது. பல்லாவரம்,குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள நகர்நலச் சங்க பிரதிநிதிகள் மூலம் அப்பகுதியில் இருந்து வந்த குறைந்த மின்அழுத்தப் பிரச்னை,குடிநீர் பிரச்னை,போக்குவரத்து தேவை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, உடனுக்குடன் நிறைவேற்றி வைத்துள்ளார் தா.மோ.அன்பரசன்.
பல்லாவரம் தொகுதியில் பிராமணர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் கணிசமான அளவில் இருந்தாலும், தொகுதி முழுக்க ஆதி திராவிட சமுதாய மக்கள் 20 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளனர். பல்லாவரத்தில் நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றி இருக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் தன்சிங்கிற்குக் கணிசமான அளவில் வாக்கு கிடைக்கும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி ஆகியவை அ.தி.மு.க அணிக்கு பலம் சேர்க்கும். இரு கட்சிகளுமே கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளன. யார் வெற்றி பெற்றாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் ஜெயிக்க முடியும் என்ற நிலைதான் பல்லாவரத்தில் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக