திங்கள், 11 ஏப்ரல், 2011

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் பரபரப்பான மும்முனைப் போட்டி!


               
                நாகர்கோவில் தொகுதியின் தேர்தல் முடிவை தமிழகம் மட்டுமல்ல, நாடே எதிர்பார்க்கிறது. காரணம், இங்கு பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பதும், அவர் வெற்றி பெற்றால் அதுவே தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையக்கூடும் என்பதும்தான்.  இதுவரை மக்களவைத் தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் இப்போதுதான் முதன்முறையாகப் பேரவைத் தேர்தலில் களம் இறங்கி இருக்கிறார்.
 
                இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் சமுதாய வாக்காளர்களைக் கொண்ட நாகர்கோவில் தொகுதியில் எண்ணிக்கையில் இந்து நாடார்கள் முதலிடத்திலும், கிறிஸ்தவ நாடார்கள் அடுத்ததாகவும் உள்ளனர். நாகர்கோவில் நகராட்சியில் 5 வார்டுகளில் முஸ்லிம்கள் பெருமளவு உள்ளனர். 
 
 இங்கு மொத்த வாக்காளர்கள் 2,09,587. 
ஆண்கள்-1,05,410, 
பெண்கள்-1,04,177. 
 
            நாகர்கோவில் நகராட்சியின் 51 வார்டுகளையும், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கி இத் தொகுதி உள்ளது. 
 
                 கடந்த தேர்தல்வரை குளச்சலில் இடம்பெற்றிருந்த பல பகுதிகள் இப்போது நாகர்கோவிலுடன் இணைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவிலில் இடம்பெற்றிருந்த பல பகுதிகள் கன்னியாகுமரி தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் நகரப் பகுதி வாக்காளர்களை அதிகமாகக் கொண்ட தொகுதியாக நாகர்கோவில் மாறி இருக்கிறது. இங்கு பாஜக மாநிலத் தலைவரும் முன்னாள் மத்திய துணையமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்து அதிமுக வேட்பாளராக மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் நாஞ்சில் ஏ. முருகேசனும், திமுக வேட்பாளராக நாகர்கோவில் நகரச் செயலர் வழக்கறிஞர் ஆர். மகேஷும் போட்டியிடுகின்றனர்.  
 
                 மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் இரண்டு தேர்தல்களிலுமே, (1957, 1962) இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். 1989-ல் நான்குமுனைப் போட்டி ஏற்பட்டபோது இந்தத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எம். மோசஸ் சுமார் ஏழாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தனக்கு அடுத்து வந்த திமுக வேட்பாளர் தர்மராஜைத் தோற்கடித்தார். இந்தத் தொகுதியில் கணிசமாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவர்களது வாக்குகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவை என்பதையும்தான் இது சுட்டிக்காட்டுகிறது. 
 
          1967 தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட திமுக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது என்றாலும், அடுத்து வந்த 1971 தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் ஆதரவுடன் சுதந்திராக் கட்சி வேட்பாளர் மோசஸ்தான் மீண்டும் இங்கு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக அலை வீசியது என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு, 1977, 1980 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் இந்தத் தொகுதியை அதிமுகதான் கைப்பற்றியது. 1980 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும் இந்தத் தொகுதியைக் கைப்பற்ற முடியவில்லை. 
 
                   காங்கிரஸ் வாக்காளர்கள் முழுமையாகத் திமுகவை ஆதரிக்காததும், எம்.ஜி.ஆர் அலை வீசியதும்கூட அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.  அதேநேரத்தில், 1984-ல் தமிழகம் முழுவதும் இந்திரா படுகொலையால் அனுதாப அலையும், எம்.ஜி.ஆர். உடல்நலக் குறைவால் ஏற்பட்ட ஆதரவு அலை இருந்தும், நாகர்கோவில் மட்டும் வித்தியாசமாக திமுக வேட்பாளரான எஸ். ரத்தினராஜை ஆதரித்து வெற்றிபெறச் செய்தது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் அவர் வெற்றி பெற்றார் என்றாலும், யாருமே எதிர்பாராத வெற்றியாக அது அமைந்தது.  1989, 1991, 1996 என்று தொடர்ந்து நாகர்கோவில் தொகுதியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் மோசஸ்
 
                . 1996-ல் தமாகா பிரிந்தபோது அந்தக் கட்சியில் இணைந்து கொண்டவர், மீண்டும் தமாகா தாய்க் கட்சியான காங்கிரஸில் இணைந்தபோது காங்கிரஸ் திரும்பி விட்டார்.  2001 தேர்தலில் நாகர்கோவில் 1984, 1989 தேர்தல்களில் அளித்ததுபோல மீண்டும் ஓர் அதிர்ச்சியைத் தந்தது. டாக்டர் மோசஸ் தமாகா வேட்பாளராக அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்டார் என்றாலும் தமிழ்நாடு முழுவதும் வீசிய அதிமுக அலையை மீறி நாகர்கோவிலில் அவர் திமுக ஆதரவுடன் போட்டியிட்ட எம்.ஜி.ஆர். அதிமுக வேட்பாளர் என். ஆஸ்டினிடம் தோல்வி அடைந்தார். 
 
                  2006 சட்டப்பேரவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதி மீண்டும் தனது காங்கிரஸ் விசுவாசத்தைக் காட்டியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ. ராஜன் வெற்றி பெற்றார். பொன். ராதாகிருஷ்ணன் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவரை எதிர்த்துப் போட்டியிடும் நாஞ்சில் முருகேசனும், ஆர். மகேஷும் தேர்தல் களத்துக்குப் புதியவர்கள். இத் தொகுதியில் திமுக வேட்பாளராக இப்போதைய எம்எல்ஏ ராஜன் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
                    மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளரான ராஜன் புறக்கணிக்கப்பட்டு, மு.க. ஸ்டாலின் ஆதரவாளரான மகேஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  கடந்த பல தேர்தல்களில் கிறிஸ்தவ வேட்பாளரையே இத் தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இம் முறை இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில், களத்தில் உள்ள மூன்று முக்கிய வேட்பாளர்களுமே இந்துக்களாக இருப்பதுதான்.  இதைக் கருத்தில் கொண்டு மகேஷும், நாஞ்சில் முருகேசனும் கிறிஸ்தவ ஆயர்களையும், குருமார்களையும் சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர். 

                 கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் சட்டப்பேரவைப் பகுதியில் 48,965 வாக்குகள் பெற்றிருந்தார். இங்கே அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட பெல்லார்மின் 13,232 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆஸ்டின் 10,230 வாக்குகளும்தான் பெற முடிந்தது. மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஹெலன் டேவிட்சன், நாகர்கோவிலில் பெற்றது 41,476 வாக்குகள்தான். 
 
                 இந்த முறை தேமுதிக, இடதுசாரிகள் என்கிற கூட்டணி பலத்துடன் அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசனும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி பலத்துடன் திமுக வேட்பாளர் மகேஷும் களமிறங்கி இருந்தாலும், முன்னணி வேட்பாளராகக் காணப்படுவது என்னவோ பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன்தான். எதிர்பாராத திருப்பங்களையும், அதிர்ச்சிகளையும் ஏற்படுத்துவது நாகர்கோவில் தொகுதியின் தனித்துவம். கூட்டணி பலம் எதுவும் இல்லாமல் சொந்த செல்வாக்கில் பாஜக நாகர்கோவில் தொகுதியைக் கைப்பற்றுமேயானால், ஆச்சரியப்படுவதற்கில்லை! 

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP