திங்கள், 11 ஏப்ரல், 2011

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக-காங்கிரஸ் நேரடிப் போட்டி

     மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக கே.ஜெயக்குமாரும், அதிமுக சார்பில் எஸ்.கணிதாசம்பத்தும் போட்டியிடுகின்றனர்.  இது தவிர, பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இருந்தாலும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையேதான் நேரடிப் போட்டி. 
                 இதில் அதிமுக வேட்பாளர் எஸ்.கணிதாசம்பத், ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்தவர். காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், 2 முறை நாமக்கல் தொகுதியில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸின் தற்போதைய சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு குழுவின் ஐவரில் ஒருவர்.  கடந்த முறை மதுராந்தகம் தொகுயில் இருந்த இலத்தூர் ஒன்றியம் புதியதாக உருவாக்கப்பட்ட செய்யூர் (தனி)தொகுதிக்கு மாறியுள்ளது. அதே போல் அச்சிறுபாக்கம் (தனி)தொகுதி நீக்கப்பட்டு அத் தொகுதியில் இருந்த அச்சிறுபாக்கம் ஒன்றியத்திலுள்ள 59 ஊராட்சிகளும், பேரூராட்சியும் மதுராந்தகம் தொகுதியில் சேர்க்கப்பட்டுவிட்டன.  
            இதுவே இரு வேட்பாளர்களுக்கு சாதகமாகவும்,பாதகமாகவும் இருக்கும்.  இத் தொகுதி பொதுத்தொகுதியாக இருந்து தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 750 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆதிதிராவிடர்கள் 39 சதவீதமும், வன்னியர்கள் 30 சதவீதமும் மற்றவர்கள் 31 சதவீதமும் உள்ளனர்.  இது வரை பொதுத் தொகுதியாக இருந்த போது 1952 தேர்தல்களில் இருந்து இதுவரை காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 4 முறையும்,திமுக 5 முறையும் வெற்றி பெற்று உள்ளன.  கடந்த 2006-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் காயத்ரிதேவி, தன்னை எதிர்த்த அதிமுக வேட்பாளர் கோ.அப்பாதுரையை விட 3691 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
             இத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் கஜேந்திரன், 9811 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.  கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற காயத்ரிதேவி, 2001-ல் மூடப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறக்க சட்டப் பேரவையில் பலமுறைகள் வலியுறுத்தியதன் பேரில் மீண்டும் ஆலையைத் திறக்க திமுக அரசு உத்தரவிட்டது. இந்த ஆலையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று, தற்போது ஆலையில் சோதனை அரவை நடைபெற்று வருகிறது. இதனால் கரும்பு விவசாயிகள் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு நன்றியுடன் வாக்களிப்பார்கள் என திமுக கூட்டணியினர் நம்புகின்றனர்.  
              மதுராந்தகம்-சூணாம்பேடு சாலையில் ரூ.14 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருவது உள்ளிட்ட சில பணிகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமாக அமையும். இத் தொகுதியில் விவசாயமே முக்கியத் தொழிலாகும்.இதுவரை மாவட்டத்திலுள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது விவசாயிகளிடையே பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த ஏரி தூர்வார பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. ஆகவே, விவசாயிகளின் வாக்குகள் திமுக கூட்டணியான காங்கிரசுக்கு கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான். 
              பல்வேறு அடிப்படை பிரச்னைகள் கிராமங்களில் நிறைவேற்றப்படாததும், மதுராந்தகம் நகராட்சியில் அடிப்படை வசதியான சாக்கடை நீர் கால்வாயில் செல்லாமல் சாலையில் ஓடுவது உள்ளிட்டவையும் காங்கிரஸின் வாக்குகளை பாதிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.  காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு,திமுக,பாமக,விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் கூட்டணி பலம் சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், திமுக ஆட்சியில் செய்தவை குறித்து பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்து வருகிறார் வேட்பாளர் ஜெயக்குமார்.  அதிமுக வேட்பாளர் கணிதாசம்பத் கூட்டணியில் உள்ள தேமுதிக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளுடன் களம் இறங்கி உள்ளார்.  பிரசாரத்தின் போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையைக் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார். அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பிரசாரம் செய்து தேமுதிக தொண்டர்களை உற்சாகப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
                கடந்த முறை அதிமுக வேட்பாளர் கோ.அப்பாதுரை, 3691 என்ற குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்ததால் இந்த முறை அதிமுக வேட்பாளரான எஸ்.கணிதாசம்பத்தை மிக எளிதாக வெற்றி பெற வைத்துவிடலாம் என அதிமுகவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.  மேலும், இத் தொகுதியில் 9811 வாக்குகள் பெற்ற தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக வேட்பாளர் கணிதாசம்பத் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும் அதிமுக நம்புகிறது.  இத் தொகுதியை பொறுத்தவரை கடுமையானப் போட்டி நிலவுவதால் யார் வெற்றி பெற்றாலும் சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசமே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP