ஞாயிறு, 26 டிசம்பர், 2010

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பார்வை - கோ.க.மணி
கோ.க.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடி கிராமத்தில் 06-03-1952ல் பிறந்தார். 1996, 2001 ஆகிய இருமுறை பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 2006ல் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் மகன் தமிழ்குமரன் மக்கள் தொலைக்காட்சி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.


தொகுதி மேட்டூர்
அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சிRead more...

செவ்வாய், 21 டிசம்பர், 2010

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பார்வை - ஆற்காடு வீராசாமி


   
 
 
சட்டமன்ற  தொகுதி: 
            
             அண்ணா நகர்

சட்டமன்ற பதவி:

 ஆண்டு           கட்சி             
2006                       திமுக
2001
திமுக
1996
திமுக 
            
               ஆற்காடு என். வீராசாமி தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார்.
                    வேலூர் மாவட்டம் குப்பாடிச்சத்தம் கிராமத்தில் 21 ஏப்ரல் 1937ஆம் ஆண்டு பிறந்தார். 1967, மற்றும் 1971ல் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 1989ல் புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மூன்றுமுறை 1996, 2001, மற்றும் 2006ல் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1977 - 1983 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும்பணியாற்றியுள்ளார். இவர் திமுகவின் பொருளாளராக பணியாற்றி தற்போது திமுகவின் முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

Read more...

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பார்வை - க. அன்பழகன்


    
சட்டமன்ற  தொகுதி: 
               துறைமுகம்

சட்டமன்ற பதவி:

 ஆண்டு           கட்சி             
2006                            திமுக            
2001                            திமுக
1996                            திமுக                                  
                 
                  க.அன்பழகன் தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொது செயலாளராக உள்ளார்.

  இளமைப் பருவம்

                        அன்பழகனார் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு 19-12-1922 அன்று மகவாகப் பிறந்தவர். இவர் இயற்பெயர் இராமையா. அண்ணாமலைபல்கலைக் கழகத்தில் முதுகலைமானித் தமிழ் பட்டப் படிப்பை 1944 முதல் 1946 வரை பயின்றார். பின் சென்னைபச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.

  பொது வாழ்க்கை

               தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1967 பணியாற்றியவர். இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971 இல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். 1984 இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். திமுகவின் முதுபெரும் மேடைப் பேச்சாளரும், தந்தை பெரியாரின் அடியொற்றி நடப்பவரும் ஆவார்.

              தமிழர் இனம் குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்படுகின்றார். திமுக கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர். கட்சி கட்டுப்பாடுகளுடன் செயல்படுவதற்கு இவரின் கண்டிப்பான அணுகுமுறையே என்பது பரவலான கருத்து. அரசியலில் தூய்மையானவர் என்ற நிலையிலும் மாற்றுக் கட்சியினரும் மதிப்பளிக்கும் வகையில் நடப்பவர் என்ற பெரும்பாலானவர் கருத்தும் உண்டு. திமுக வின் தலைவர் மு. கருணாநிதியுடன் அதிக நெருக்கமானவர்.

  எழுத்துப் பணி

                எழுத்தாளராக பல தமிழ் சமூக கட்டுரைகளையும் எழுதியவர். இவர் எழுதிய பேசும் கலை வளர்ப்போம், (பிரபல வாரப்பத்திரிகையில் பேசும் கலை வளர்ப்போம் என்ற தொடர் கட்டுரையாக வெளி வந்த்து), தமிழர் திருமணமும் இனமானமும் போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.
  பிற நூல்கள்;
  • உரிமை வாழுது
  • தமிழ்க்கடல்
  • அலை ஓசை
  • விடுதலைக் கவிஞர்
  • தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்
  • இன-மொழி வாழ்வுரிமைப் போர்
  • தமிழினக்காவலர் கலைஞர்
  • நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
  • தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி
  • விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு
  • பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள்

  Read more...

  புதன், 8 டிசம்பர், 2010

  வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி: தேர்தல் நேரத்தில் ராஜதந்திரத்தை கையாளுவேன்; விஜயகாந்த் பேட்டி

  விருத்தாசலம்:  
               கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை தே.மு.தி.க. தலைவரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் சிதம்பரம் பகுதியில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை விஜயகாந்த் எம்.எல்.ஏ. விருத்தாசலத்திற்கு வந்திருந்தார். அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினார்.
   
  பின்னர் விஜயகாந்த்  கூறியது:-
   
                மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க தேசிய பேரிடர் என அறிவித்து உடனுக்குடன் நிவாரணங்களை வழங்க அரசு நடவடிக்கை வேண்டும். கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக எனது தொகுதியிலும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இது குறித்து சட்டசபையில் பேசினால் நடவடிக்கை எடுப்பார்களா? இதனால் தான் என்னால் முடித்த உதவிகளை என் தொகுதிக்கு செய்து வருகிறேன்.
                      
                          சென்னையில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமமடைந்து வருகிறார்கள். விவசாயிகளுக்கு மின்சாரம் இல்லை. மக்களுக்கு பொது சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எனவே மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   
                     ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மத்திய அரசு தீர விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆனால், இது குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை என புரியவில்லை. ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கைகள் எடுத்தால் தான் குற்றங்கள் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
   
  பின்னர் கேட்ட கேள்விக்கு விஜயகாந்த் அளித்த பதில் வருமாறு:-
   
  கேள்வி - வரும் சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறீர்களா?
   
  பதில்- அது ரகசியம்.
   
  கேள்வி- வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியா?
   
  பதில் - வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வராமல் இருக்க அனைத்து ராஜதந்திரங்களையும் தேர்தல் நேரத்தில் கையாளுவேன்
   
  இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

  Read more...

  சனி, 4 டிசம்பர், 2010

  சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்; திருமாவளவன் பேட்டி

    சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்;
 
 திருமாவளவன் பேட்டி
   
  சிதம்பரம்:

  விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில்  அளித்த. அப்போது
  பேட்டி:

  தொடர்ந்து 3 வார காலமாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி உள்ளன. முன்னாள் மத்திய மந்திரி ராசா பதவி விலகிய பிறகும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போதும், சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையிலும், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவது மக்கள் விரோத செயலாகும்.

                 நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவையில் விவாதிக்கலாம் என்று கூறியபோதும் அவையை எதிர்க்கட்சிகள் முடக்கி இருப்பது ஜனநாயக விரோத செயல். மத்திய மந்திரிகள் பிரமோத் மகாஜன், அருண் ஜோரி ஆகியோர் என்ன நடவடிக்கையை பின்பற்றினார்களோ, அதையே ராசாவும் பின்பற்றியதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

                   பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? பாரதிய ஜனதா, ஜெயலலிதா, சுப்பிர மணியசாமி ஆகியோர் ராசாவை தனிமைப்படுத்தி பழிவாங்க துடிக்கின்றனர். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து. ஆனால் அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? இவர்களின் போக்கு தலித் விரோத போக்கு.

                      வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விடுதலை சிறுத்தை கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையில் தேர்தலில் வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணிக்கு எந்த கட்சிகள் வந்தாலும் வரவேற்கிறோம். கூட்டணியில் எந்த கட்சியை சேர்ப்பது என்பது குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவு செய்வார். கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

               விடுதலை சிறுத்தை கட்சியில் 42 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 10 சதவீதம் பேர் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தமிழ் இறையாண்மை மாநாடு சென்னையில் டிசம்பர் 26-ந்தேதி நடைபெறுகிறது. தமிழுக்கு என தனி தாயகம், தமிழ் இனம் தேசிய இனமாக அறிவிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.

               பேட்டியின் போது ரவிக்குமார் எம்.எல்.ஏ., கடலூர் நகரசபை துணைத்தலைவர் தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் திருமாறன், துணைச் செயலாளர் செல்லப்பன், பசுமைவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

  Read more...

  வெள்ளி, 26 நவம்பர், 2010

  எழும்பூர் சட்டமன்றத் தொகுதி

  எழும்பூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாடு மாநிலத்தில் சென்னைமாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 16. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பூங்கா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

   தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

  சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
  2006 பரிதி இளம்வழுதி திமுக 48.48
  2001 பரிதி இளம்வழுதி திமுக 47.69
  1996 இளம்வழுதி திமுக 72.57
  1991 இளம்வழுதி திமுக 50.47
  1989 இளம்வழுதி திமுக 49.80
  1984 S. பாலன் திமுக 51.84
  1980 L. இளையபெருமாள் இ.தே.காங்கிரசு 61.19
  1977 S. மணிமுடி திமுக 38.60

  Read more...

  இராயபுரம் சட்டமன்றத் தொகுதி

  இராயபுரம் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாடு மாநிலத்தில் சென்னைமாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 17. இது வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

  தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

  சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
  2006 செயகுமார் அதிமுக 53.26
  2001 செயகுமார் அதிமுக 56.76
  1996 இரா. மதிவாணன் திமுக 57.78
  1991 செயகுமார் அதிமுக 59.04
  1989 இரா. மதிவாணன் திமுக 45.95
  1984 பொன்னுரங்கம் திமுக 50.26
  1980 பொன்னுரங்கம் திமுக 50.31
  1977 பொன்னுரங்கம் திமுக 33.54


  Read more...

  புதன், 3 நவம்பர், 2010

  அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள்! ஜெயலலிதா எடுத்த ‘ஏ,பி,சி.’ சர்வே
                    ஜெயலலிதாவின் அரசியல் பணியே தனிதான். காரணம், எவ்வளவு ஆக்ரோஷமான அரசியல் காய்நகர்த்தல்கள் வெளியில் நடந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலையே படாமல், அரசியல் ரீதியாக அவர் செய்யும் ‘சைலன்ட் மூவ்’கள்தான். வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரு மாநில தேர்தல் தோற்றத்தைவிட, டெல்லியில் புதிய கூட்டணி உருவாகுமோ என்ற பரபரப்பையும் இந்தியா முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறது.

                       அதுவும் தேர்தல் நெருங்க நெருங்க ஜெயலலிதாவின் செயல்பாடுகள் அத்தனையும் டெல்லியில் கவனிக்கப்படுகிறதோ இல்லையோ, தி.மு.க.வால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. காரணம், அ.தி.மு.க.வின் ரகசிய நடவடிக்கைகள் தி.மு.க.வுக்கு போகாத வண்ணம் ஜெயலலிதா வைத்திருக்கிறார் ‘செக்’. அதுதான் இந்தத் தேர்தல் கால திட்டத்தின் முதல்படி என்கிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர்கள்.
  அந்த அதிரடி ‘செக்’ எது தெரியுமா? 
                       அ.தி.மு.க.வில் அசைக்க முடியாத மாவட்டச் செயலாளராக, அதுவும் 12 வருடங்கள் தொடர்ந்து வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த சேகர்பாபுவை அதிரடியாக, அப்பதவியிலிருந்து நீக்கியிருப்பதுதான். அது மட்டுமல்ல, ‘தி.மு.க.வுக்கு ரகசிய தகவல்களை பரிமாறும், துரோகிகளை மன்னிக்கவே மாட்டேன்’ என்று ஓப்பனாக பேசி, மற்ற அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் பீதிக்குள்ளாக்கி இருக்கிறார். சேகர்பாபு பதவி பறிக்கப்பட்ட நாள் அக்.25. மறுநாளே போயஸ் கார்டனில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அணிகளின் மாநில நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் பா.வளர்மதி வரவே கூடாது என்று போயஸ் கார்டனில் இருந்து உத்தரவு போனதாம். மறுநாளே, வளர்மதியிடம் இருந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பதவியும் காலி.

                      ஏன்? என்று விசாரித்தால் எல்லாம் சேகர்பாபு மற்றும் வளர்மதியின் தி.மு.க. தொடர்புகள் என்கிறார்கள். இதை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா கடுமையாகவே சொல்லி, அனைவரையும் எச்சரித்து இருக்கிறார்.

  ‘‘உங்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதே நேரத்தில் யாராவது துரோகம் செய்தால் சகித்துக் கொள்ளவே மாட்டேன். கட்சியின் பொறுப்பாளர்களை அடிக்கடி மாற்றுகிறேன் என்று நீங்கள் கருதலாம். இப்படி மாற்றுவதற்கு எனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

  யார் இந்த சேகர்பாபு? 
                     வாழ்க்கையில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்தார் என்று எனக்கு தெரியும். கட்சியில் உழைத்த சேகர்பாபுவுக்கு பதவி கொடுத்தேன். இன்று ஒரு என்ஜீனியரிங் கல்லூரியை வாங்கும் அளவுக்கு வசதி வந்துவிட்டது. அதுவும் மதுசூதனனின் அக்கா மகன் ஜெயப்பிரகாஷூடன் கூட்டு சேர்ந்து. வாங்கட்டும். வசதியை பெருக்கிக் கொள்ளட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

                      ஆனால், இங்கே கட்சியில் பதவி வகித்துக்கொண்டு தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார் சேகர்பாபு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தயாநிதி மாறன் வெற்றி பெற்றதற்கு காரணம், இந்த சேகர்பாபுதான். அந்த தொகுதியின் பொறுப்பாளராக இருந்து, சிமென்ட் அதிபர் சீனிவாசனிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு, புரோக்கர் வேலை செய்திருக்கிறார். அப்போதே பதவியிலிருந்து தூக்கியிருப்பேன். சரி, திருந்திவிடுவார் என்று கருதி, அவரை அழைத்து எச்சரித்து அனுப்பினேன்.

                       ஆனால் இன்னும் திருந்தவில்லையே. இங்கிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க. சென்றது எப்படி? செல்வகணபதி செல்ல யார் காரணம்? முத்துசாமியை போக வைத்தது யார்? சேகர்பாபுதான். இங்கே இருந்து, தி.மு.க.வுக்கு தகவல்களை கொடுப்பது மட்டுமில்லை... தன்னை எதிர்க்கிறான் என்பதாலேயே, நம் கட்சிக்காரரை தரக்குறைவாக பேசி அடிக்க சேகர்பாபு யார்? இவர் என்ன சூப்பர் பவர் மாவட்டச் செயலாளரா? இப்போது தெரிகிறதா, ஏன் அவரை பதவியை விட்டு தூக்கினேன் என்று!

                       அதற்காக, தேர்தல் வரும் நேரத்தில் மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிடுவேன் என்று யாரும் பயப்பட வேண்டாம். அதே நேரத்தில், பதவியை பிடிக்க மற்றவர் மீது புகார் அனுப்புவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள். எனக்கு யார் யார் என்ன செய்கிறார்கள் என்று தெரியும். அதற்குள் உங்கள் நடவடிக்கையை திருத்திக் கொள்ளுங்கள். தவறு செய்வதாக நான் கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை நிச்சயம்.

                      தேர்தல் வருகிறது. கூட்டணிக்காக நான் பல பணிகளை செய்து வருகிறேன். காங்கிரஸ் நம்மிடம் வரலாம். வராவிட்டாலும், மாற்று அணி தயாராக இருக்கிறது. நம் கட்சிதான் ஆட்சியில் அமரப் போகிறது. காரணம், பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிக அளவில் என்னிடம் பேசி வருகின்றனர். ‘மக்கள் மனநிலை உறுதியாக மாறும்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். அதிகாரிகள் பேசுவதுதான், நாம் ஆட்சியில் அமரப் போவதற்கு முதல் அறிகுறி.

                          வரும் ஆட்சியில் உங்களில் பலர் மந்திரியாகலாம். அதற்கு நீங்கள் கடுமையாகவும், விசுவாச-மாகவும் உழைக்க வேண்டும். கருணாநிதி தன் குடும்பத்தின் மீது காட்டும் பாசம் தெரிந்தும், அங்கிருக்கும் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் கட்சிக்கு எப்படி விசுவாசமாக இருக்கிறார்கள். ஆனால், எனக்கு குடும்பமே இல்லை. கட்சிக்காகவே உழைத்து வருகிறேன். எனக்கு நீங்கள் விசுவாசமாக உழைக்கக் கூடாதா?’’& என்றெல்லாம் உணர்ச்சிப்பூர்வமாக பேசி முடித்திருக்கிறார் ஜெயலலிதா.

                    கூட்டம் தொடங்குவதற்கு முன்பு வெற்றுத் தாளில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். அதில் ஏதோ தீர்மானம் இயற்றி, கூட்டணிக்கு முயற்சிக்கலாம் அல்லது தி.மு.க.வின் ஊழல் குறித்து எழுதி கவர்னர் மாளிகைக்கு அனுப்பலாம் என்று சொல்லப்படுகிறது.

                         கூட்டத்தின்முடிவில், மாவட்டச் செயலாளர்-களிடம் ஒரு படிவம் தரப்பட்டது. அதில் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என்று மூன்று பகுதிகள் இருந்தன. அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் தொகுதிகளை ‘ஏ’ பகுதியிலும், சில பல முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெறலாம் என்று கருதும் தொகுதிகளை ‘பி’ பகுதியிலும், வெற்றி வாய்ப்பு குறைவு... கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து விடலாம் என்று நினைக்கும் தொகுதிகளை ‘சி’ பகுதியிலும் குறிப்பிடச் சொன்னார் ஜெயலலிதா. அவரது அறிவுரைப்படி இந்த விவரங்களை தங்கள் மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். அதன்படி வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்று கொடுக்கப்-பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மொத்தம் 150&ஐ தாண்டியிருப்பதாக அ.தி.மு.க. தலைமைக் கழக வட்டாரம் சொல்கிறது.

                   ‘‘அந்த விவரங்களின் அடிப்-படையில் தன் மனதில் உள்ள கூட்டணிக் கணக்குகளையும் ஒப்பிட்டு, முதற்கட்டமாக சுமார் 120 தொகுதி-களுக்கு தலா மூன்று பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தனது நேரடி கண்காணிப்பின் கீழ் தயாரிக்கும் வேலைகளில் அம்மா விரைவில் இறங்கப் போகிறார்’’என்றும் கார்டன் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன.

  Read more...

  தமிழக சட்டசபை தேர்தலுக்கு முதல் கட்ட பணி துவக்கம்


  விருதுநகர் : 

               சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட பணியாக, ஓட்டு எண்ணிக்கை மையங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

                  மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகள், அதற்கான ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், முக்கிய பிரமுகர்களின் சட்டசபை தொகுதிகள் வருகிறதா, பதட்டமான தொகுதிகள் எது, மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா, பாதுகாப்பு, வாகன போக்குவரத்து, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறைகளில் இரும்பு வலை அமைப்பதற்கு வசதியுள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி, அனைத்து கலெக்டர்களுக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அறிக்கை பெற்ற பின், ஓட்டு எண்ணிக்கை மையங்கள் குறித்து தேர்தல் கமிஷன் முடிவு செய்யவுள்ளது.

  Read more...

  திங்கள், 25 அக்டோபர், 2010

  அன்புமணி தலைமையில் ஆட்சி: ராமதாஸ்                       
                    இரண்டரை கோடி வன்னியர்கள் கொண்ட தமிழகத்தில், அன்புமணி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். பா.ம.க., சார்பில் மேட்டூர் சட்டசபை தொகுதி இளைஞர், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம், மேச்சேரியில் நடைபெற்றது. 


  இந்த முகாமுக்கு தலைமை வகித்து பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,

                         இன்றைய இளைஞர்கள் சினிமாக்காரர்களுக்கு ஓட்டு போட்டு தறி கெட்டு போகின்றனர். தந்தை, சகோதரர்களுடன் சேர்ந்து மது அருந்துகின்றனர். டிவியில் ஒளிபரப்பும் மாமியாரை பழி வாங்குவது, மருமகளை கொலை செய்வது போன்ற வன்முறை காட்சியைப் பார்த்து கெட்டு போகின்றனர்.

                      தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். நான் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது, என்னுடன் மூன்று வன்னியர்கள் மட்டுமே படித்தனர். என் மகன் படிக்கும் போது, அவருடன் எட்டு பேர் படித்தனர். தற்போது இடஒதுக்கீடு மற்றும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் மூலம், 250 பேர் மருத்துவப் படிப்பு, 15 ஆயிரம் பேர் இன்ஜினியரிங் படிக்கின்றனர். இடஒதுக்கீடுக்காக நடத்திய போராட்டங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியாது.

                            போராட்டம், இடஒதுக்கீட்டால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்குவதற்காகவே இந்த முகாம் நடத்தப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளில் பா.ம.க., போட்டியிட்டது. அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு ஏழு தொகுதிகளிலும் மாம்பழத்தைமிதித்து, நசுக்கி, பா.ம.க.,வை தோல்வியடைய வைத்து விட்டனர். தமிழகத்தில் பா.ம.க., ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

                           இரண்டரை கோடி வன்னியர்கள் கொண்ட தமிழகத்தில், அன்புமணி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாடு வறுமை நீங்கி, புதிய வரலாறு படைக்கும் என்றார்.

  Read more...

  சட்டப் பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி? - சரத்குமார்


  வள்ளியூர்:
   
                 சட்டப் பேரவைத் தேர்தலில் ச.ம.க.வை மதிப்பவர்களுடன்தான் கூட்டணி அமைக்கப்படும் என அக் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார். 
   
  சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில், வள்ளியூர்  திருவள்ளுவர் திடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: 
   
                                தமிழர்கள் வளமுடன் வாழ வேண்டும் என்பதுதான் சமகவின் நோக்கம். ஓட்டுப் போட்டவுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக பொதுமக்கள் நினைக்கக்கூடாது. சிலரை பதவியில் அமர்த்தி இருக்கிறீர்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இலவசம் என்பது எதற்காக  என்பதையும் சிந்தியுங்கள். வரும் தேர்தலில் சமகவை மதிப்பவர்களுடன்தான்  கூட்டணி. நாம் இல்லாமல் எந்த அணியும் வெற்றிபெற முடியாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.

  Read more...

  வெள்ளி, 22 அக்டோபர், 2010

  அதிமுக அணியில் காங். வரும்: புதிய தமிழகம்

   அதிமுக அணியில் காங். வரும்: புதிய தமிழகம்                    தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி வரும் என, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  நெல்லையில் பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி,

                       தென்மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மதுரையில் நடந்தது. வடமாவட்டங்களின் கூட்டம் நவம்பர் 10ல் விழுப்புரத்தில் நடக்கிறது. தேர்தலுக்கு முன் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முயற்சித்து வருகிறோம். 6வது மாநில மாநாடு விரைவில் நடக்க உள்ளது. மேலவை அமைப்பதற்கு அரசு முயற்சித்து வருகிறது. 

                      அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு 19 சதவீத இடஒதுக்கீடு கோரி வரும் நவம்பர் 15ல் கவர்னர் மாளிகைக்கு பேரணி செல்கிறோம். பட்டதாரி ஒதுக்கீடு என்பது 60 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. தற்போது நடைமுறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 6 மாதமே எம்.எல்.ஏ.,பதவி கொண்டவர்கள் இன்னும் 6 ஆண்டுகளுக்கான மேலவை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியாது.

                       இதனை எதிர்த்து புதிய தமிழகம் சார்பில் வழக்கு தொடர உள்ளோம். ஜனவரியில் தென்மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கோரி போராட்டம் நடத்த உள்ளோம். அ.தி.மு.க.,கூட்டணியில் இன்னும் புதிய கட்சிகள் வர உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் காங்கிரஸ் கூட வரவாய்ப்புள்ளது என்றார். 

  Read more...

  வியாழன், 21 அக்டோபர், 2010

  காங்கிரஸ் இல்லாமல் சமாளிக்க முடியுமா ? அமைச்சர்களை ஆழம் பார்த்த கலைஞர்!
                      ‘ஆத்தாளை குளத்தங்கரையில் பார்த்தால் மகளை வீட்டில் போய் பார்க்க வேண்டாம்’ & அக்டோபர் 9 அன்று சென்னை விமான நிலையத்தில் வைத்து சோனியாவைச் சந்தித்த கலைஞருக்கு இந்த கிராமத்து சொலவடைதான் நினைவுக்கு வந்திருக்கும்.
   
  தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது கடினம்... 

                       விஜயகாந்துடன் சில காங்கிரஸ் தலைவர்கள் பேசிவருகிறார்கள்... ஜெயலலிதாவுடன் சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ச்சியான தொடர்பில் இருந்து ஏதோ திட்டமிட்டு வருகிறார்கள்... என்றெல்லாம் கடந்த ஓரிரு மாதங்களாக வதந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் வெளிப்படையான பேச்சுக்கள் இந்த வதந்திகளை உயிரோட்டமாக வைத்துள்ள நிலையில்... சோனியா திருச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் வருவதற்கு முதல் நாள் ஜெயலலிதா அளித்த பேட்டி ஒன்று வெளியானது.

                       ‘‘தி.மு.க. கூட்டணியில் இனியும் நீடிப்பது பற்றி காங்கிரஸ் யோசிக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. தற்போதையை அ.தி.மு.க. கூட்டணியில் மாற்றங்கள் வர இன்னும் நேரமும் வாய்ப்பும் இருக்கிறது’’ என்று சொல்லி காங்கிரசுடனான கூட்டணிக்கு தான் தயாராக இருப்பதாக பொருள்படும்படி அப்பேட்டியில் சில கருத்துக்களைச் சொல்லியிருந்தார் ஜெயலலிதா.

                     தி.மு.க.வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வதந்திகள், ஜெயலலிதாவின் மேற்கண்ட எதிர்பார்ப்பு கலந்த ஆசை போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சோனியாவுடனான தனது சந்திப்பும் அதைத் தொடர்ந்து வெளிவரும் கருத்துக்களும் வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்பில் அக்டோபர் 9 அன்று திருவாரூர் செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் சென்றார் கலைஞர்.

                    டெல்லியிலிருந்து வந்த சோனியாவுக்காக சற்று காத்திருந்து அவரைச் சந்தித்தார் கலைஞர். ஆனால், அங்கு சோனியாவின் முகபாவமும், பேச்சுவார்த்தை நேரத்தை நீட்டிக்க விரும்பாத தொனியும் கலைஞரை சற்று கலவரப்படுத்தியதாகச் சொல்கிறார்கள் அங்கிருந்த சிலர். சம்பிரதாயமாக சில நிமிடங்களில் முடிந்த அந்த சந்திப்புதான் தி.மு.க.வுடனான கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ் மேலிடத்தின் எண்ண ஓட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றத்தையும் கலைஞருக்கு உணர வைத்தது.

                        அதன் பிரதிபலிப்பாகத்தான் அடுத்த நாள் நாகப்பட்டினத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘கூட்டணி என்பது நிரந்தரமல்ல. தி.மு.க.வுடனான கூட்டணி மகிழ்ச்சியளிக்கிறது என்று சோனியா சொன்ன பிறகும், காங்கிரசுடனான கூட்டணிக்குத் தயார் என்று சொல்லும் எதிர்கட்சிக்கு சிலர் நடை பாவாடை விரிக்கிறார்கள். அவர்கள் ஏமாந்து போவர்கள்’’ என்று சொன்னதுடன், சோனியாவை பதிபக்தி இல்லாதவர் என்று ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை அவ்வப்போது நினைவுபடுத்தும் கலைஞர், இப்போதும் அதை மீண்டும் சொல்லி, இப்படியொரு தலைவருடன் காங்கிரஸ் கூட்டணி சேரமுடியுமா? என்ற கேள்வியை காங்கிரஸ்காரர்களுக்கு மறைமுகமாக எழுப்பினார்.

                        காங்கிரஸ்காரர்களிடம் இந்தப் பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ... கடந்த சில நாட்களாக சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சந்தேகம் மட்டும் கலைஞருக்குப் போகவேயில்லை.

                          இந்த நேரத்தில்தான் இன்னொரு செய்தியும் கலைஞரின் காதுகளுக்கு வந்தது. அதாவது, தி.மு.க.வுடனான கூட்டணியை இறுதி செய்யும் நேரத்தில் ஒரு பேரத்தை காங்கிரஸ் முன்வைத்து... அதை தி.மு.க. ஏற்காவிட்டால் மாற்று அணியில் சேருவது அல்லது புது அணி அமைப்பது போன்ற முயற்சியில் காங்கிரஸ் இறங்குவது என்று ஒரு பேச்சு இருக்கிறதாம். அதென்ன பேரம்?

                     ‘‘எங்களுக்கு சரிபாதியாக 117 இடங்களைக் கொடுத்துவிடுங்கள். தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.வை நாங்கள் இந்தக் கூட்டணிக்கு அழைத்து வந்து அவர்-களுக்குரிய இடங்களை நாங்களே பிரித்துக்-கொடுத்து விடுகிறோம்’’ என்று தி.மு.க.விடம் காங்கிரஸ் நிபந்தனை போடுவதுதான் அந்த பேரம்! அதாவது கூட்டணி ஆட்சி என்று வெளிப்படையாகச் சொல்லாமல், ஆனால் அதை ஏற்பதைத் தவிர தி.மு.க.வுக்கு வேறு வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்துவதுதான் காங்கிரஸின் திட்டம். இப்படி வந்த தகவலைத் தொடர்ந்துதான் நாகையிலிருந்து திரும்பிய அடுத்தநாள் அக்டோபர் 12 அன்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார் கலைஞர்.

                         செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நூலகத்திற்கு பாவேந்தரின் பெயரைச் சூட்டுவது, ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலைக்கு சில சலுகைகளை அளிப்பது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர் வரை நீட்டிப்பு உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட விஷயங்களை இறுதி செய்தபின் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் வெளியே போகச் சொன்னார் கலைஞர். அவரது செயலாளர் ராஜமாணிக்கம் மட்டும் உடனிருக்க, ஒருவித டென்ஷனோடு கலைஞரையே பார்த்தார்கள் அமைச்சர்கள்.

                      ‘‘நான் இங்கு பேசப்போகும் விஷயங்கள் பத்திரிகைகளுக்கும் போகக்கூடாது’’ என்ற வேண்டு-கோளுடன் பேச ஆரம்பித்தார் கலைஞர்.

                               ‘‘அமைச்சர்களைப் பற்றி பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வருகின்றன. அவை எல்லாம் உண்மையல்ல என்றாலும் அவற்றில் உண்மை இல்லாமலில்லை. பல அமைச்சர்களின் செயல்படுகள் சரியில்லை. தேர்தல் நெருங்கி வருகிறது. உங்களை நீங்களே திருத்திக்கொள்ளுங்கள். நான் கிராமப்புறங்களில் காணும் எழுச்சியை நகர்ப்புறங்களில் பார்க்க முடியவில்லை. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று மக்களின் தேவைகளை முடிந்தவரை பூர்த்தி செய்யப் பாருங்கள்’’ என்று எச்சரிக்கை கலந்த அறிவுரை சொல்லிய கலைஞர் அடுத்து பேசியதுதான் ஹைலைட்!

                        ‘‘தி.மு.க.வுடன் காங்கிரஸ் இந்த நிமிடம் வரை கூட்டணியில் தொடர்கிறது. ஆனால் இது நீடிக்குமா என்று தெரியவில்லை. காங்கிரஸ் நம்முடன் இல்லாவிட்டால் நம்முடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்...’’ என்று சொல்லி மாவட்டச் செயலாளர்களாகவும் இருக்கும் அமைச்சர்களை மட்டும் பேசச் சொன்னார் கலைஞர். சேலம் மாவட்டச் செயலாளர் வீரபாண்டியார் தொடங்கி நீலகிரி மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் வரை பதினான்கு அமைச்சர்கள் தங்கள் மாவட்டத்தின் சூழல்பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

                        ‘காங்கிரஸ் இல்லாவிட்டால் ஜெயிப்பது கஷ்டம்’ என்று பட்டவர்த்தனமாகச் சொன்னால், ‘அப்ப... நீங்க என்னதான் கட்சியை வளர்க்குறீங்க?’ என்று கலைஞரிடம் இருந்து பதில் கேள்வி வரும் என்று நினைத்தார்களோ என்னவோ... பெரும்பாலான அமைச்சர்கள், ‘‘காங்கிரஸ் இல்லாவிட்டாலும் நம்மால் ஜெயிக்க முடியும் தலைவரே... நம்முடைய திட்டங்கள் அந்தளவுக்கு மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது’’ என்றே சொல்லியிருக்கிறார்கள்.
          
                         கே.என்.நேரு உள்ளிட்ட சில அமைச்சர்கள் சில தொகுதிகளின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி, காங்கிரஸ் கூட்டணி இல்லாவிட்டால் இங்கெல்லாம் ஜெயிப்பது கடினம் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிரண்டு தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ‘காங்கிரஸ் இல்லாவிட்டாலும் எங்கள் மாவட்டத்தில் எல்லா தொகுதிகளிலும் தி.மு.க. ஜெயிக்கும்’ என்று கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் சொல்ல... ‘தி.மு.க. அங்கே வீக்-... பின்னே எப்படிய்யா எல்லாத்தையும் தனியாகவே ஜெயிக்கும்?’ என்று சில அமைச்சர்களே குறுக்கிட்டுச் சொல்ல... கொஞ்சம் சுதாரித்த சுரேஷ்ராஜன், பின்பு காங்கிரஸ் கூட்டணியின் அவசியத்தைச் சொல்லியிருக்கிறார். சிலர், பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தால் எந்தெந்தப் பகுதிகளில் தி.மு.க.வுக்கு பலன் கிடைக்கும் என்ற விவரத்தையும் எடுத்துச் சொன்னார்கள்.

                            அவ்வளவையும் பொறுமையாகக் கேட்ட கலைஞர், அந்த இடத்தில் வைத்து எந்த முடிவையும் தனது கருத்தாகச் சொல்லவில்லை. ‘தேர்தலை மனதில் வைத்து பணியாற்றுங்கள்’ என்று பொதுவாகச் சொல்லிவிட்டு கூட்டத்தை முடித்திருக்கிறார்.

                              ‘‘தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது... வரும் தேர்தலிலும் இது நீடிக்கும் என்று இரண்டு தரப்பும் மாறி மாறி சொல்லிவந்த நிலையில், முதல் முறையாக காங்கிரஸைப் பற்றிய சந்தேகம் தலைவருக்கு வந்திருப்பதையே அவரது இந்த ஆலோசனை வெளிக்காட்டுகிறது. கூட்டணி-யிலிருந்து காங்கிரஸ் பிரிந்தால், மாற்று அணியை எப்படி அமைப்பது என்று அவர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். நீண்ட நாட்கள் தேதி கேட்டு காத்திருந்த டாக்டர் ராமதாசுக்கு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை காரணமாக வைத்து சந்திக்க நேரம் கொடுத்ததே மாற்று அணி அமைப்பதற்கான தொடக்கமாக நாங்கள் பார்க்கிறோம்’’ என்கிறார் தி.மு-.க. மாவட்டச் செயலாளர் ஒருவர்.

  யாரோ எதிர்பார்த்தபடி, குட்டை குழம்பி-யிருக்கிறது. மீனைப் பிடிப்பது யார் என்பதுதான் கேள்வி!


  Read more...

  திங்கள், 11 அக்டோபர், 2010

  ரகசியமாக தயாராகுது வேட்பாளர் பட்டியல் : அ.தி.மு.க.,வில் அதிரடி

              

                    சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக, தொகுதிக்கு 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை, விசுவாச போலீஸ் அதிகாரிகள் மூலம் அ.தி.மு.க., தலைமை ரகசியமாக தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

                  தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற சூழ்நிலையில், இப்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் ஈடுபடத் துவங்கிவிட்டன. தேர்தலுக்கு தயாராகும் விதமாக, விழாக்கள், கட்சி பொதுக்கூட்டங்கள் என முதல்வர் கருணாநிதி மக்களைச் சந்திக்கத் துவங்கிவிட்டார். 

                      அ.தி.மு.க.,வோ ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும் தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து, பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஜரூராக இறங்கியுள்ளது.ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும் தொகுதி பொறுப்பாளர் ஒருவரை நியமனம் செய்து, அவர் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் வார்டு, கிளை வாரியாக பூத் கமிட்டிகள் அமைத்து தே.மு.தி.க., பணியைத் துவக்கியுள்ளது.அதேபோல் காங்கிரஸ் கட்சியும் சோனியா, ராகுலை தமிழகம் அழைத்து தேர்தலுக்கான ஆயத்தபணிகளை துவங்கவுள்ளது. 

                      பா.ம.க., வழக்கம்போல், தனக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இப்படி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமாக,  வரவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.இப்படிப்பட்ட சூழ்நிலையில், அ.தி.மு.க.,வோ எப்போதும் போல் மற்ற கட்சிகளை விட ஒருபடி மேலே போய், தொகுதிக்கு 15 பேர் வீதம் வேட்பாளருக்கான பட்டியலை தனக்கு விசுவாசமான போலீஸ் அதிகாரிகள் மூலம் ரகசியமாக தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவ்விஷயம் கட்சியின் மாவட்ட செயலர்களுக்கு கூட தெரியாமல் நடந்துள்ளது. 

                  தன்னுடைய ஆதரவு போலீஸ் அதிகாரிகள் மூலம் எடுக்கப்பட்ட தொகுதிக்கு 15 பேர் கொண்ட பட்டியலிலிருந்து, அலசி ஆராய்ந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்க அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.கட்சியினரிடமோ, மண்டல பொறுப்பாளர்களிடமோ இப்பொறுப்பை ஒப்படைத்தால், தனக்கு வேண்டப்பட்டவர்கள், பணபலம் படைத்தவர்கள் என்று தகுதியற்றவர்களை தேர்வு செய்து கொடுத்து விடுகின்றனர் 

                     .இப்படி ஒரு அனுபவத்தை கட்சி பொறுப்பாளர் நியமனத்தில், அ.தி.மு.க., தலைமை  கண்டுள்ளதால், தொகுதிக்கு 15 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்யும் பணியை விசுவாச போலீஸ் அதிகாரிகளிடம் அ.தி.மு.க., தலைமை ஒப்படைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசுவாச அதிகாரிகள் கொடுத்த பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர் தான், கூட்டணி கட்சிகள் போக அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளனர்.
   
  தொகுதி செயலர்கள் கிலி : 

                      எம்.ஜி.ஆர்., பாணியில் தொகுதி செயலர்களை, சில மாதங்களுக்கு  முன் நியமித்தார் ஜெயலலிதா. இப்படி தொகுதி செயலர், துணை செயலராக நியமிக்கப்பட்டவர்கள், தாங்கள் தான் சட்டசபை தொகுதி வேட்பாளர்கள் என தம்பட்டம் அடித்து வந்தனர். இதில் பலர், மண்டல பொறுப்பாளர்களுக்கு பணம் கொடுத்து பதவி, "வாங்கியதாக' கட்சி தலைமைக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் ரகசிய விசாரணை நடத்திய தலைமை, புகார்களின் மீதான நம்மபகத்தன்மையை உறுதி செய்தது. பதவி வாங்கிய பல தொகுதி செயலர்கள், தற்போது வரை கட்சி வளர்ச்சிக்காக பெரிய அளவில் பணி செய்யவில்லை. 

                       மாறாக தங்களின் வளர்ச்சிக்காக கிளை, ஒன்றிய, வார்டு நிர்வாகிகளை பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் பிரசனைக்குரிய, பணம் கொடுத்து பதவி வாங்கிய  தொகுதி செயலர்களையும் கழட்டி விட கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக தொகுதி செயலர்களின் நடவடிக்கையை கண்காணித்து அறிக்கை அனுப்பும் படி மாவட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சி தலைமை ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அறிந்து, கிலி அடைந்த தொகுதி செயலர்கள் பலர், மாவட்ட பொறுப்பாளர்களின் பின்னால் வலம் வருகின்றனர். மதுரை பொதுக்கூட்டத்துக்கு பின் தொகுதி செயலர்கள் பலருக்கு கல்தா கொடுக்கப்படும் என அ.தி.மு.க., வினர் கூறி வருகின்றனர்.

  Read more...

  கூட்டணியில் புதிய கட்சிகள்: கருணாநிதி கருத்து

  சிதம்பரம்:

                புதிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்துவது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது; தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.  

   சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் வல்லம்படுகையில் கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் வீட்டை பயனாளியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:  

                      தமிழகத்தில் குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களே இத்திட்டத்தை வரவேற்கிறார்கள். தமிழகத்தில் 6 ஆண்டு திட்டமாக மொத்தம் 21 லட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்த ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு படிப்படியாக பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.  

  அனைவருக்கும் இலவச உயர்கல்வி வழங்கப்படுமா?  

                  தமிழகத்தில் தற்போது மருத்துவம், பொறியியல் படிப்பில் பயில குறிப்பிட்ட பிரிவினருக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பிரிவினர்களுக்கு வழங்குவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு எடுக்கப்படும்.  

  வீராணம் ஏரி தூர்வாரப்படுமா?  

                        ஏரி தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  

  சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்துக்கு யார் பெயர் சூட்டப்படும்?  

                      அதுகுறித்து பிரச்னையாக உள்ளது. பின்னர் முடிவு செய்யப்படும்.  

  வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுமா?  

                      அடுத்து ஆட்சிக்கு வந்த பிறகு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார் முதல்வர் மு.கருணாநிதி.

  Read more...

  வியாழன், 7 அக்டோபர், 2010

  தொகுதி மாறுகிறார் அமைச்சர் தமிழரசி? பரமக்குடி மீது பாசம்காட்டும் பின்னணி  சமீபத்தில் பரமக்குடியில் நடந்த இமானுவேல் சேகரனின் குருபூஜை விழாவுக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்த வந்தார் அமைச்சர் சுப.தங்கவேலன். அப்போது அவர், ‘‘ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி நிச்சயமாக இன்று மாலைக்குள் இங்கே வந்து அஞ்சலி செலுத்திச் செல்வார்’’ என அழுத்தம் கொடுத்து உச்சரித்தார். அப்போதுதான் அமைச்சரின் ‘அழுத்தத்திற்கான’ காரணத்தை உடன்பிறப்புக்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

  அதாவது கடந்த தேர்தலில் சமயநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரான தமிழரசி, இப்போது பரமக்குடி தொகுதியை குறி வைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பரமக்குடி தொகுதியில் தமிழரசி போட்டியிடக்கூடும் என்று நம்மிடம் கூறிய உடன்பிறப்புகள், தமிழரசியின் தொகுதி மாற்றத்துக்கான காரணங்களையும் பட்டியலிட ஆரம்பித்தார்கள்.

  ‘‘அழகிரியின் ஆசீர்வாதத்தால் அமைச்சர் ஆன தமிழரசிக்கு பூர்வீகம் பரமக்குடி அருகே உள்ள வெள்ளா கிராமம் ஆகும். அமைச்சர் ஆனதுமே பிறந்த மண்ணுக்கு எதையாவது செய்தாக வேண்டும் என விரும்பிய தமிழரசி, தனது பிறந்த ஊரான வெள்ளா கிராமத்தில், தனது தந்தையார் நினைவாக சமுதாயக்கூடம் ஒன்றை கட்டிக் கொடுத்தார். அதுமட்டுமின்றி, இமானுவேல் குருபூஜை சமயத்தில் தலித் இளைஞர்கள் தொடர் ஓட்ட ஜோதி கொண்டு வருவதற்காக டீ சர்ட்டுகள், பனியன்கள் மற்றும் பலவற்றை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார்.

  பரமக்குடி தொகுதியில் நடைபெறும் கல்யாணம், காதுகுத்து, சடங்கு, துக்க வீடுகளுக்கெல்லாம், தமிழரசி எங்கே இருந்தாலும் கண்டிப்பாக ஆஜராகிவிடுவார். இப்பழக்கத்தை ஆறு மாத காலமாகவே தவறாது கடைபிடித்து வந்தார்.

  சமீபத்தில் பரமக்குடி அருகே கேளா என்ற கிராமத்தில், மரத்தின்மேல் அரசு பஸ் ஒன்று மோதிவிட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள் என காயமடைந்தவர்கள் எல்லாம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர்.

  இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உடனேயே, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு வந்த தமிழரசி, காயமடைந்த அனைவருக்கும் ஹார்லிக்ஸ், பழம், பால், பிஸ்கட் எல்லாம் கொடுத்து ஆறுதல் கூறிவிட்டு, படுகாயமடைந்தவர்களை எல்லாம் உடனடியாக தனியார் மருத்துவமனையில் தனது சொந்த செலவில் சேர்த்து சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

  தமிழரசியின் இந்த பரமக்குடி பாசத்துக்கு காரணம், சமயநல்லூர் ரிசர்வ் தொகுதி தற்போது தொகுதி மறு சீரமைப்பில் பொது தொகுதியாக மாறிவிட்டது என்பதுதான். பரமக்குடி தனித்தொகுதி என்பதும், அத்தொகுதி தான் பிறந்த ஊர் என்பதும் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியாகிவிட்டது. தனது தொகுதி மாறுதல் குறித்து அழகிரியின் குடும்பத்தினரிடையேயும் தமிழரசி அவ்வப்போது விவாதித்து வருகிறார்’’ என்றும் சொல்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புக்கள்.

  சரி, பரமக்குடி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம்பிரபு. காங்கிரஸார் எப்படி தங்களது ‘கை இருப்பில்’ உள்ள தொகுதியை தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுப்பார்கள் எனக் கேட்டபோது, இதற்கான பதிலை கதர் கட்சியினர் நம்மிடம் விவரித்தார்கள்.

  ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை தொகுதிகள் காங்கிரஸ் வசமும், முதுகுளத்தூர், கடலாடி தொகுதிகள் தி.மு.க.விடமும் உள்ளன. தொகுதி சீரமைப்பில் கடலாடி தொகுதி இல்லாமல் போய்விட்டது. எனவே முதுகுளத்தூரை தி.மு.க. தரப்பு காங்கிரசுக்கு ஒதுக்கி கொடுத்துவிட்டு, தமிழரசிக்காக பரமக்குடியை கேட்டுப் பெற்று கொள்வார்கள். தென்மண்டலத்தை பொறுத்தவரை அண்ணன் அழகிரி ஆசைப்பட்டு கேட்கும் தொகுதியை காங்கிரஸார் தராமலா போய்விடுவார்கள்?’’ என்றார்கள் அந்த கதர் கோஷ்டிகள்.

  தமிழரசியின் பரமக்குடி வருகையை அ.தி.மு.க. தரப்பும் ஸ்மெல் செய்து, உடனடியாக உஷாராகிவிட்டது.

  தமிழரசியின் பலமான பிரசாரம் மற்றும் பண பலத்திற்கு முன்பு, காமா சோமா வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தமிழரசி எளிதில் வென்றுவிடுவார் என்று உள்ளூர் அ.தி.மு.க.வினர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். ‘‘தமிழரசியின் போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்றால், சிட்டிங் எம்.எல்.ஏ.வான ராம்பிரபுவின் சகோதரி கணவரான டாக்டர் முத்தையா மாதிரி பலமான ஒருவரை களம் இறக்கினால், இம்முறை பரமகுடியில் எங்கள் கொடிதான்’’ என்று உற்சாகப்படுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.

  ‘‘தொகுதி பறிபோன அதிருப்தியில் ராம்பிரபு தனது மச்சானுக்காக வரிந்து கட்டுவார். இதன்மூலம் காங்கிரசுக்குள் கலகத்தை ஏற்படுத்தியது மாதிரியும் இருக்கும். தமிழரசியை வீழ்த்தியது மாதிரியும் இருக்கும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்’’ என்று மனக்கோட்டையில் துடிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியிடமே அவரது பரமக்குடி பாசம் குறித்தும், தொகுதி மாறும் முயற்சி பற்றியும் கேட்டோம்.

  ‘‘உங்க வாய் முகூர்த்தம் பலித்து, எனக்கு பரமக்குடி கிடைச்சா ரொம்ப சந்தோஷம்தான். சொந்த ஊர் என்பதால், அங்கு நடக்கும் நல்லது, கெட்டது என்று எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சென்று வருகிறேன். ‘அங்கே நில்’ என்று தலைவர் உத்தரவிட்டால், நின்றுதானே ஆக வேண்டும்?’’ என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார் தமிழரசி.

  பரமக்குடி இப்போதே ‘பரபரப்புக்குடி’ ஆகிவிட்டது!


  Read more...

  சனி, 25 செப்டம்பர், 2010

  ‘‘தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான்!’’ அடித்துச் சொல்லும் ப.சிதம்பரம்                        சென்னையை அடுத்து கோவை தற்போது முக்கியமான அரசியல் களமாக மாறி வருகிறது. இரு கழகங்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் தனது பலத்தைக் காட்ட கோவையில் கடந்த 28-ம் தேதி சனிக்கிழமை பொதுக்கூட்டத்தை கூட்டியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு விழாவும் காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா பொதுக்கூட்டமும், கோவை ஜெயில் மைதானத்தில் நடந்தது.

                               நேருவின் அமைச்சரவையில் பங்குபெற்றவர், காமராஜர் ஆட்சியில் பங்கு-பெற்றிருந்தவர்,பசுமை புரட்சியை முதலில் ஏற்படுத்தியவர், நேருவின் நெருங்கிய நண்பர், என்று பல பெருமைகளுக்கு உரியவர் சி.எஸ்.

                           அப்படிப்பட்டவருக்கு நடந்த விழாவைக் கூட காங்கிரஸ் கட்சிக்-காரர்கள் புறக்கணித்திருப்பது தான் உண்மையான காங்கிரஸ்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                           கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கோவையில் சி.எஸ். க்கு விழா எடுப்பதோடு பொதுக்-கூட்டமும் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்தவுடன்,அதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக மேடை ஏறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

                         ஆனால் இந்த விழாவிலும், பொதுக்-கூட்டத்திலும் கலந்துகொள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன் போன்றவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து கூட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்னர், கோவை மாணவர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் யுவராஜ் என்பவர் கோவை வருகை தரும் தங்கபாலுவிற்கு கறுப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அவரும் மற்றும் ஐந்து காங்கிரஸ் தொண்டர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

                           இதனால் இளங்கோவன் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக கூட்டத்தை புறக்கணித்தனர். அதே போல் கோவை தங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட வாசன் ஆதரவாளர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தங்கபாலு ஆதரவாளர்களும், மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்களும் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசின் நிதியில்தான் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட தங்கபாலு மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க.&காங்கிரஸ் உறவு சிறப்பாக உள்ளதாகவும், இதே நிலை தொடரவேண்டும் என்றுதான் காங்கிரஸ் தலைமையும் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

  பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 
   
                       சி.எஸ். எந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியை வளர்க்க பாடுபட்டார் என்பதை குறிப்பிட்டுவிட்டு, மத்திய அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். அதோடு, மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் எந்த மாநில அரசுகளும் திட்டங்களை நிறைவேற்றமுடியாது. அதனால் அனைத்து பெருமைகளும் மத்திய அரசையே சேரும் என்று பேசினார். மேலும் ‘1967 &ல் இழந்த ஆட்சியை மீண்டும் பெற வேண்டும். மீண்டும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். அதற்கு தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும்’ என்று சுருக்கமாக பேசிவிட்டு விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.

  பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
   
                    ‘‘எந்தக் கட்சியில் பூசல்கள், கோஷ்டிகள் இல்லை? காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்தே கோஷ்டிப் பூசல்கள் இருந்து தான் வருகிறது. காமராஜர் முதல்வரான போது, சி.சுப்பிரமணியம் இருந்தால் தான் அமைச்சரவைக்கு அழகு என்று கூறி ராஜாஜி அணியில் இருந்த சி.எஸ். க்கு அமைச்சர் பதவியை கொடுத்து அழகு பார்த்தார். அன்று காமராஜர் கோஷ்டிகளைப் பற்றி கவலைப்படாமல், அனைவரையும் அரவணைத்துச் சென்றார். ஆனால் அந்த நிலை இன்று இல்லை. நானும் காங்கிரசில் இந்த கோஷ்டி வளர வேண்டும்... அந்த கோஷ்டி தேய வேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததில்லை.

                      இந்தியாவை காங்கிரஸ் ஆளும்போது தமிழகத்தை ஆள முடியாதா? இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது, ஆனால் தமிழகத்தில் முடியவில்லையே என்ற ஆதங்கம் அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள் மனதிலும் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். 1969ல் இளைஞர் காங்கிரசில் சேர்ந்ததிலிருந்தே எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது. 40 ஆண்டுகளாக இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

                     தமிழக மக்களுக்கு தற்போது தனியொரு கட்சி மீது நம்பிக்கை இல்லை. கூட்டணியைத் தான் நம்புகிறார்கள். மத்தியில் உள்ளது போல் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சியைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், அதுவும் நம்மோடு தான்’’ என்று பேசி முடித்தார் சிதம்பரம்.

  கூட்டத்தில் தலைவர்கள் பேசியது குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் சிலர்  கூறியது 
   
                          ‘தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என உண்மையான காங்கிரஸ் தொண்டன் ஒவ்வொருவரும் விரும்பும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மட்டும் இன்றும் தி.மு.க.வின் வாலை பிடித்துக்கொண்டே திரிகிறார்கள். தேர்தலில் வெற்றிபெற்றவுடன் எந்த தொண்டனையும் தி.மு.க.வினர் மதிப்பதில்லை. ஆட்சியில் பங்கு கேட்டாலும் வாயைத் திறப்பதில்லை. எத்தனை காலம் தான் இவர்கள் பின்னாலேயே செல்வது என்று தெரியவில்லை’ என்றனர்.

  இளங்கோவன் ஆதரவாளர்கள் சிலர்  கூறியது 
   
                         ‘‘இளங்கோவன் தற்போது தமிழக அரசின் குறைகளையும், செயல்பாடுகளையும் சுட்டிகாட்டி வருகிறார். இது தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் எங்களுக்கு எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுப்பதில்லை. அவர்கள் எங்களை புறக்கணிக்க திட்டமிட்டதால் நாங்களே ஒதுங்கிகொண்டோம். நாங்களும் இதில் கலந்துகொண்டிருந்தால் நல்ல கூட்டம் கூடியிருக்கும்’’ என்றதோடு முடித்துகொண்டனர். மூத்த தலைவர் ஒருவருக்காக நடந்த விழாவிலும், காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்திலும் கூட காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோஷ்டி பூசலை பதிவு செய்யத் தவறவில்லை. அடையாளத்தை மறைக்க முடியுமா?

  Read more...

  About This Blog  இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


    © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

  Back to TOP