ரகசியமாக தயாராகுது வேட்பாளர் பட்டியல் : அ.தி.மு.க.,வில் அதிரடி

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக, தொகுதிக்கு 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை, விசுவாச போலீஸ் அதிகாரிகள் மூலம் அ.தி.மு.க., தலைமை ரகசியமாக தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற சூழ்நிலையில், இப்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் ஈடுபடத் துவங்கிவிட்டன. தேர்தலுக்கு தயாராகும் விதமாக, விழாக்கள், கட்சி பொதுக்கூட்டங்கள் என முதல்வர் கருணாநிதி மக்களைச் சந்திக்கத் துவங்கிவிட்டார்.
அ.தி.மு.க.,வோ ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும் தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து, பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஜரூராக இறங்கியுள்ளது.ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும் தொகுதி பொறுப்பாளர் ஒருவரை நியமனம் செய்து, அவர் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் வார்டு, கிளை வாரியாக பூத் கமிட்டிகள் அமைத்து தே.மு.தி.க., பணியைத் துவக்கியுள்ளது.அதேபோல் காங்கிரஸ் கட்சியும் சோனியா, ராகுலை தமிழகம் அழைத்து தேர்தலுக்கான ஆயத்தபணிகளை துவங்கவுள்ளது.
பா.ம.க., வழக்கம்போல், தனக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இப்படி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமாக, வரவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.இப்படிப்பட்ட சூழ்நிலையில், அ.தி.மு.க.,வோ எப்போதும் போல் மற்ற கட்சிகளை விட ஒருபடி மேலே போய், தொகுதிக்கு 15 பேர் வீதம் வேட்பாளருக்கான பட்டியலை தனக்கு விசுவாசமான போலீஸ் அதிகாரிகள் மூலம் ரகசியமாக தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவ்விஷயம் கட்சியின் மாவட்ட செயலர்களுக்கு கூட தெரியாமல் நடந்துள்ளது.
தன்னுடைய ஆதரவு போலீஸ் அதிகாரிகள் மூலம் எடுக்கப்பட்ட தொகுதிக்கு 15 பேர் கொண்ட பட்டியலிலிருந்து, அலசி ஆராய்ந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்க அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.கட்சியினரிடமோ, மண்டல பொறுப்பாளர்களிடமோ இப்பொறுப்பை ஒப்படைத்தால், தனக்கு வேண்டப்பட்டவர்கள், பணபலம் படைத்தவர்கள் என்று தகுதியற்றவர்களை தேர்வு செய்து கொடுத்து விடுகின்றனர்
.இப்படி ஒரு அனுபவத்தை கட்சி பொறுப்பாளர் நியமனத்தில், அ.தி.மு.க., தலைமை கண்டுள்ளதால், தொகுதிக்கு 15 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்யும் பணியை விசுவாச போலீஸ் அதிகாரிகளிடம் அ.தி.மு.க., தலைமை ஒப்படைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசுவாச அதிகாரிகள் கொடுத்த பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர் தான், கூட்டணி கட்சிகள் போக அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளனர்.
தொகுதி செயலர்கள் கிலி :
தொகுதி செயலர்கள் கிலி :
எம்.ஜி.ஆர்., பாணியில் தொகுதி செயலர்களை, சில மாதங்களுக்கு முன் நியமித்தார் ஜெயலலிதா. இப்படி தொகுதி செயலர், துணை செயலராக நியமிக்கப்பட்டவர்கள், தாங்கள் தான் சட்டசபை தொகுதி வேட்பாளர்கள் என தம்பட்டம் அடித்து வந்தனர். இதில் பலர், மண்டல பொறுப்பாளர்களுக்கு பணம் கொடுத்து பதவி, "வாங்கியதாக' கட்சி தலைமைக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் ரகசிய விசாரணை நடத்திய தலைமை, புகார்களின் மீதான நம்மபகத்தன்மையை உறுதி செய்தது. பதவி வாங்கிய பல தொகுதி செயலர்கள், தற்போது வரை கட்சி வளர்ச்சிக்காக பெரிய அளவில் பணி செய்யவில்லை.
மாறாக தங்களின் வளர்ச்சிக்காக கிளை, ஒன்றிய, வார்டு நிர்வாகிகளை பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் பிரசனைக்குரிய, பணம் கொடுத்து பதவி வாங்கிய தொகுதி செயலர்களையும் கழட்டி விட கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக தொகுதி செயலர்களின் நடவடிக்கையை கண்காணித்து அறிக்கை அனுப்பும் படி மாவட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சி தலைமை ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அறிந்து, கிலி அடைந்த தொகுதி செயலர்கள் பலர், மாவட்ட பொறுப்பாளர்களின் பின்னால் வலம் வருகின்றனர். மதுரை பொதுக்கூட்டத்துக்கு பின் தொகுதி செயலர்கள் பலருக்கு கல்தா கொடுக்கப்படும் என அ.தி.மு.க., வினர் கூறி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக