வியாழன், 21 அக்டோபர், 2010

காங்கிரஸ் இல்லாமல் சமாளிக்க முடியுமா ? அமைச்சர்களை ஆழம் பார்த்த கலைஞர்!




                    ‘ஆத்தாளை குளத்தங்கரையில் பார்த்தால் மகளை வீட்டில் போய் பார்க்க வேண்டாம்’ & அக்டோபர் 9 அன்று சென்னை விமான நிலையத்தில் வைத்து சோனியாவைச் சந்தித்த கலைஞருக்கு இந்த கிராமத்து சொலவடைதான் நினைவுக்கு வந்திருக்கும்.
 
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது கடினம்... 

                     விஜயகாந்துடன் சில காங்கிரஸ் தலைவர்கள் பேசிவருகிறார்கள்... ஜெயலலிதாவுடன் சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ச்சியான தொடர்பில் இருந்து ஏதோ திட்டமிட்டு வருகிறார்கள்... என்றெல்லாம் கடந்த ஓரிரு மாதங்களாக வதந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் வெளிப்படையான பேச்சுக்கள் இந்த வதந்திகளை உயிரோட்டமாக வைத்துள்ள நிலையில்... சோனியா திருச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் வருவதற்கு முதல் நாள் ஜெயலலிதா அளித்த பேட்டி ஒன்று வெளியானது.

                     ‘‘தி.மு.க. கூட்டணியில் இனியும் நீடிப்பது பற்றி காங்கிரஸ் யோசிக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. தற்போதையை அ.தி.மு.க. கூட்டணியில் மாற்றங்கள் வர இன்னும் நேரமும் வாய்ப்பும் இருக்கிறது’’ என்று சொல்லி காங்கிரசுடனான கூட்டணிக்கு தான் தயாராக இருப்பதாக பொருள்படும்படி அப்பேட்டியில் சில கருத்துக்களைச் சொல்லியிருந்தார் ஜெயலலிதா.

                   தி.மு.க.வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வதந்திகள், ஜெயலலிதாவின் மேற்கண்ட எதிர்பார்ப்பு கலந்த ஆசை போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சோனியாவுடனான தனது சந்திப்பும் அதைத் தொடர்ந்து வெளிவரும் கருத்துக்களும் வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்பில் அக்டோபர் 9 அன்று திருவாரூர் செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் சென்றார் கலைஞர்.

                  டெல்லியிலிருந்து வந்த சோனியாவுக்காக சற்று காத்திருந்து அவரைச் சந்தித்தார் கலைஞர். ஆனால், அங்கு சோனியாவின் முகபாவமும், பேச்சுவார்த்தை நேரத்தை நீட்டிக்க விரும்பாத தொனியும் கலைஞரை சற்று கலவரப்படுத்தியதாகச் சொல்கிறார்கள் அங்கிருந்த சிலர். சம்பிரதாயமாக சில நிமிடங்களில் முடிந்த அந்த சந்திப்புதான் தி.மு.க.வுடனான கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ் மேலிடத்தின் எண்ண ஓட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றத்தையும் கலைஞருக்கு உணர வைத்தது.

                      அதன் பிரதிபலிப்பாகத்தான் அடுத்த நாள் நாகப்பட்டினத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘கூட்டணி என்பது நிரந்தரமல்ல. தி.மு.க.வுடனான கூட்டணி மகிழ்ச்சியளிக்கிறது என்று சோனியா சொன்ன பிறகும், காங்கிரசுடனான கூட்டணிக்குத் தயார் என்று சொல்லும் எதிர்கட்சிக்கு சிலர் நடை பாவாடை விரிக்கிறார்கள். அவர்கள் ஏமாந்து போவர்கள்’’ என்று சொன்னதுடன், சோனியாவை பதிபக்தி இல்லாதவர் என்று ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை அவ்வப்போது நினைவுபடுத்தும் கலைஞர், இப்போதும் அதை மீண்டும் சொல்லி, இப்படியொரு தலைவருடன் காங்கிரஸ் கூட்டணி சேரமுடியுமா? என்ற கேள்வியை காங்கிரஸ்காரர்களுக்கு மறைமுகமாக எழுப்பினார்.

                      காங்கிரஸ்காரர்களிடம் இந்தப் பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ... கடந்த சில நாட்களாக சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சந்தேகம் மட்டும் கலைஞருக்குப் போகவேயில்லை.

                        இந்த நேரத்தில்தான் இன்னொரு செய்தியும் கலைஞரின் காதுகளுக்கு வந்தது. அதாவது, தி.மு.க.வுடனான கூட்டணியை இறுதி செய்யும் நேரத்தில் ஒரு பேரத்தை காங்கிரஸ் முன்வைத்து... அதை தி.மு.க. ஏற்காவிட்டால் மாற்று அணியில் சேருவது அல்லது புது அணி அமைப்பது போன்ற முயற்சியில் காங்கிரஸ் இறங்குவது என்று ஒரு பேச்சு இருக்கிறதாம். அதென்ன பேரம்?

                   ‘‘எங்களுக்கு சரிபாதியாக 117 இடங்களைக் கொடுத்துவிடுங்கள். தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.வை நாங்கள் இந்தக் கூட்டணிக்கு அழைத்து வந்து அவர்-களுக்குரிய இடங்களை நாங்களே பிரித்துக்-கொடுத்து விடுகிறோம்’’ என்று தி.மு.க.விடம் காங்கிரஸ் நிபந்தனை போடுவதுதான் அந்த பேரம்! அதாவது கூட்டணி ஆட்சி என்று வெளிப்படையாகச் சொல்லாமல், ஆனால் அதை ஏற்பதைத் தவிர தி.மு.க.வுக்கு வேறு வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்துவதுதான் காங்கிரஸின் திட்டம். இப்படி வந்த தகவலைத் தொடர்ந்துதான் நாகையிலிருந்து திரும்பிய அடுத்தநாள் அக்டோபர் 12 அன்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார் கலைஞர்.

                       செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நூலகத்திற்கு பாவேந்தரின் பெயரைச் சூட்டுவது, ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலைக்கு சில சலுகைகளை அளிப்பது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர் வரை நீட்டிப்பு உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட விஷயங்களை இறுதி செய்தபின் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் வெளியே போகச் சொன்னார் கலைஞர். அவரது செயலாளர் ராஜமாணிக்கம் மட்டும் உடனிருக்க, ஒருவித டென்ஷனோடு கலைஞரையே பார்த்தார்கள் அமைச்சர்கள்.

                    ‘‘நான் இங்கு பேசப்போகும் விஷயங்கள் பத்திரிகைகளுக்கும் போகக்கூடாது’’ என்ற வேண்டு-கோளுடன் பேச ஆரம்பித்தார் கலைஞர்.

                             ‘‘அமைச்சர்களைப் பற்றி பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வருகின்றன. அவை எல்லாம் உண்மையல்ல என்றாலும் அவற்றில் உண்மை இல்லாமலில்லை. பல அமைச்சர்களின் செயல்படுகள் சரியில்லை. தேர்தல் நெருங்கி வருகிறது. உங்களை நீங்களே திருத்திக்கொள்ளுங்கள். நான் கிராமப்புறங்களில் காணும் எழுச்சியை நகர்ப்புறங்களில் பார்க்க முடியவில்லை. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று மக்களின் தேவைகளை முடிந்தவரை பூர்த்தி செய்யப் பாருங்கள்’’ என்று எச்சரிக்கை கலந்த அறிவுரை சொல்லிய கலைஞர் அடுத்து பேசியதுதான் ஹைலைட்!

                      ‘‘தி.மு.க.வுடன் காங்கிரஸ் இந்த நிமிடம் வரை கூட்டணியில் தொடர்கிறது. ஆனால் இது நீடிக்குமா என்று தெரியவில்லை. காங்கிரஸ் நம்முடன் இல்லாவிட்டால் நம்முடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்...’’ என்று சொல்லி மாவட்டச் செயலாளர்களாகவும் இருக்கும் அமைச்சர்களை மட்டும் பேசச் சொன்னார் கலைஞர். சேலம் மாவட்டச் செயலாளர் வீரபாண்டியார் தொடங்கி நீலகிரி மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் வரை பதினான்கு அமைச்சர்கள் தங்கள் மாவட்டத்தின் சூழல்பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

                      ‘காங்கிரஸ் இல்லாவிட்டால் ஜெயிப்பது கஷ்டம்’ என்று பட்டவர்த்தனமாகச் சொன்னால், ‘அப்ப... நீங்க என்னதான் கட்சியை வளர்க்குறீங்க?’ என்று கலைஞரிடம் இருந்து பதில் கேள்வி வரும் என்று நினைத்தார்களோ என்னவோ... பெரும்பாலான அமைச்சர்கள், ‘‘காங்கிரஸ் இல்லாவிட்டாலும் நம்மால் ஜெயிக்க முடியும் தலைவரே... நம்முடைய திட்டங்கள் அந்தளவுக்கு மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது’’ என்றே சொல்லியிருக்கிறார்கள்.
        
                       கே.என்.நேரு உள்ளிட்ட சில அமைச்சர்கள் சில தொகுதிகளின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி, காங்கிரஸ் கூட்டணி இல்லாவிட்டால் இங்கெல்லாம் ஜெயிப்பது கடினம் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிரண்டு தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ‘காங்கிரஸ் இல்லாவிட்டாலும் எங்கள் மாவட்டத்தில் எல்லா தொகுதிகளிலும் தி.மு.க. ஜெயிக்கும்’ என்று கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் சொல்ல... ‘தி.மு.க. அங்கே வீக்-... பின்னே எப்படிய்யா எல்லாத்தையும் தனியாகவே ஜெயிக்கும்?’ என்று சில அமைச்சர்களே குறுக்கிட்டுச் சொல்ல... கொஞ்சம் சுதாரித்த சுரேஷ்ராஜன், பின்பு காங்கிரஸ் கூட்டணியின் அவசியத்தைச் சொல்லியிருக்கிறார். சிலர், பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தால் எந்தெந்தப் பகுதிகளில் தி.மு.க.வுக்கு பலன் கிடைக்கும் என்ற விவரத்தையும் எடுத்துச் சொன்னார்கள்.

                          அவ்வளவையும் பொறுமையாகக் கேட்ட கலைஞர், அந்த இடத்தில் வைத்து எந்த முடிவையும் தனது கருத்தாகச் சொல்லவில்லை. ‘தேர்தலை மனதில் வைத்து பணியாற்றுங்கள்’ என்று பொதுவாகச் சொல்லிவிட்டு கூட்டத்தை முடித்திருக்கிறார்.

                            ‘‘தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது... வரும் தேர்தலிலும் இது நீடிக்கும் என்று இரண்டு தரப்பும் மாறி மாறி சொல்லிவந்த நிலையில், முதல் முறையாக காங்கிரஸைப் பற்றிய சந்தேகம் தலைவருக்கு வந்திருப்பதையே அவரது இந்த ஆலோசனை வெளிக்காட்டுகிறது. கூட்டணி-யிலிருந்து காங்கிரஸ் பிரிந்தால், மாற்று அணியை எப்படி அமைப்பது என்று அவர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். நீண்ட நாட்கள் தேதி கேட்டு காத்திருந்த டாக்டர் ராமதாசுக்கு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை காரணமாக வைத்து சந்திக்க நேரம் கொடுத்ததே மாற்று அணி அமைப்பதற்கான தொடக்கமாக நாங்கள் பார்க்கிறோம்’’ என்கிறார் தி.மு-.க. மாவட்டச் செயலாளர் ஒருவர்.

யாரோ எதிர்பார்த்தபடி, குட்டை குழம்பி-யிருக்கிறது. மீனைப் பிடிப்பது யார் என்பதுதான் கேள்வி!


0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP