அன்புமணி தலைமையில் ஆட்சி: ராமதாஸ்

இரண்டரை கோடி வன்னியர்கள் கொண்ட தமிழகத்தில், அன்புமணி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். பா.ம.க., சார்பில் மேட்டூர் சட்டசபை தொகுதி இளைஞர், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம், மேச்சேரியில் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு தலைமை வகித்து பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,
இன்றைய இளைஞர்கள் சினிமாக்காரர்களுக்கு ஓட்டு போட்டு தறி கெட்டு போகின்றனர். தந்தை, சகோதரர்களுடன் சேர்ந்து மது அருந்துகின்றனர். டிவியில் ஒளிபரப்பும் மாமியாரை பழி வாங்குவது, மருமகளை கொலை செய்வது போன்ற வன்முறை காட்சியைப் பார்த்து கெட்டு போகின்றனர்.
தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். நான் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது, என்னுடன் மூன்று வன்னியர்கள் மட்டுமே படித்தனர். என் மகன் படிக்கும் போது, அவருடன் எட்டு பேர் படித்தனர். தற்போது இடஒதுக்கீடு மற்றும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் மூலம், 250 பேர் மருத்துவப் படிப்பு, 15 ஆயிரம் பேர் இன்ஜினியரிங் படிக்கின்றனர். இடஒதுக்கீடுக்காக நடத்திய போராட்டங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியாது.
போராட்டம், இடஒதுக்கீட்டால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்குவதற்காகவே இந்த முகாம் நடத்தப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளில் பா.ம.க., போட்டியிட்டது. அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு ஏழு தொகுதிகளிலும் மாம்பழத்தைமிதித்து, நசுக்கி, பா.ம.க.,வை தோல்வியடைய வைத்து விட்டனர். தமிழகத்தில் பா.ம.க., ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
இரண்டரை கோடி வன்னியர்கள் கொண்ட தமிழகத்தில், அன்புமணி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாடு வறுமை நீங்கி, புதிய வரலாறு படைக்கும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக