சனி, 25 செப்டம்பர், 2010

‘‘தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான்!’’ அடித்துச் சொல்லும் ப.சிதம்பரம்



                      சென்னையை அடுத்து கோவை தற்போது முக்கியமான அரசியல் களமாக மாறி வருகிறது. இரு கழகங்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் தனது பலத்தைக் காட்ட கோவையில் கடந்த 28-ம் தேதி சனிக்கிழமை பொதுக்கூட்டத்தை கூட்டியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு விழாவும் காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா பொதுக்கூட்டமும், கோவை ஜெயில் மைதானத்தில் நடந்தது.

                             நேருவின் அமைச்சரவையில் பங்குபெற்றவர், காமராஜர் ஆட்சியில் பங்கு-பெற்றிருந்தவர்,பசுமை புரட்சியை முதலில் ஏற்படுத்தியவர், நேருவின் நெருங்கிய நண்பர், என்று பல பெருமைகளுக்கு உரியவர் சி.எஸ்.

                         அப்படிப்பட்டவருக்கு நடந்த விழாவைக் கூட காங்கிரஸ் கட்சிக்-காரர்கள் புறக்கணித்திருப்பது தான் உண்மையான காங்கிரஸ்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                         கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கோவையில் சி.எஸ். க்கு விழா எடுப்பதோடு பொதுக்-கூட்டமும் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்தவுடன்,அதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக மேடை ஏறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

                       ஆனால் இந்த விழாவிலும், பொதுக்-கூட்டத்திலும் கலந்துகொள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன் போன்றவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து கூட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்னர், கோவை மாணவர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் யுவராஜ் என்பவர் கோவை வருகை தரும் தங்கபாலுவிற்கு கறுப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அவரும் மற்றும் ஐந்து காங்கிரஸ் தொண்டர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

                         இதனால் இளங்கோவன் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக கூட்டத்தை புறக்கணித்தனர். அதே போல் கோவை தங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட வாசன் ஆதரவாளர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தங்கபாலு ஆதரவாளர்களும், மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்களும் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசின் நிதியில்தான் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட தங்கபாலு மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க.&காங்கிரஸ் உறவு சிறப்பாக உள்ளதாகவும், இதே நிலை தொடரவேண்டும் என்றுதான் காங்கிரஸ் தலைமையும் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 
 
                     சி.எஸ். எந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியை வளர்க்க பாடுபட்டார் என்பதை குறிப்பிட்டுவிட்டு, மத்திய அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். அதோடு, மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் எந்த மாநில அரசுகளும் திட்டங்களை நிறைவேற்றமுடியாது. அதனால் அனைத்து பெருமைகளும் மத்திய அரசையே சேரும் என்று பேசினார். மேலும் ‘1967 &ல் இழந்த ஆட்சியை மீண்டும் பெற வேண்டும். மீண்டும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். அதற்கு தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும்’ என்று சுருக்கமாக பேசிவிட்டு விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.

பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
 
                  ‘‘எந்தக் கட்சியில் பூசல்கள், கோஷ்டிகள் இல்லை? காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்தே கோஷ்டிப் பூசல்கள் இருந்து தான் வருகிறது. காமராஜர் முதல்வரான போது, சி.சுப்பிரமணியம் இருந்தால் தான் அமைச்சரவைக்கு அழகு என்று கூறி ராஜாஜி அணியில் இருந்த சி.எஸ். க்கு அமைச்சர் பதவியை கொடுத்து அழகு பார்த்தார். அன்று காமராஜர் கோஷ்டிகளைப் பற்றி கவலைப்படாமல், அனைவரையும் அரவணைத்துச் சென்றார். ஆனால் அந்த நிலை இன்று இல்லை. நானும் காங்கிரசில் இந்த கோஷ்டி வளர வேண்டும்... அந்த கோஷ்டி தேய வேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததில்லை.

                    இந்தியாவை காங்கிரஸ் ஆளும்போது தமிழகத்தை ஆள முடியாதா? இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது, ஆனால் தமிழகத்தில் முடியவில்லையே என்ற ஆதங்கம் அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள் மனதிலும் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். 1969ல் இளைஞர் காங்கிரசில் சேர்ந்ததிலிருந்தே எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது. 40 ஆண்டுகளாக இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

                   தமிழக மக்களுக்கு தற்போது தனியொரு கட்சி மீது நம்பிக்கை இல்லை. கூட்டணியைத் தான் நம்புகிறார்கள். மத்தியில் உள்ளது போல் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சியைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், அதுவும் நம்மோடு தான்’’ என்று பேசி முடித்தார் சிதம்பரம்.

கூட்டத்தில் தலைவர்கள் பேசியது குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் சிலர்  கூறியது 
 
                        ‘தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என உண்மையான காங்கிரஸ் தொண்டன் ஒவ்வொருவரும் விரும்பும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மட்டும் இன்றும் தி.மு.க.வின் வாலை பிடித்துக்கொண்டே திரிகிறார்கள். தேர்தலில் வெற்றிபெற்றவுடன் எந்த தொண்டனையும் தி.மு.க.வினர் மதிப்பதில்லை. ஆட்சியில் பங்கு கேட்டாலும் வாயைத் திறப்பதில்லை. எத்தனை காலம் தான் இவர்கள் பின்னாலேயே செல்வது என்று தெரியவில்லை’ என்றனர்.

இளங்கோவன் ஆதரவாளர்கள் சிலர்  கூறியது 
 
                       ‘‘இளங்கோவன் தற்போது தமிழக அரசின் குறைகளையும், செயல்பாடுகளையும் சுட்டிகாட்டி வருகிறார். இது தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் எங்களுக்கு எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுப்பதில்லை. அவர்கள் எங்களை புறக்கணிக்க திட்டமிட்டதால் நாங்களே ஒதுங்கிகொண்டோம். நாங்களும் இதில் கலந்துகொண்டிருந்தால் நல்ல கூட்டம் கூடியிருக்கும்’’ என்றதோடு முடித்துகொண்டனர். மூத்த தலைவர் ஒருவருக்காக நடந்த விழாவிலும், காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்திலும் கூட காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோஷ்டி பூசலை பதிவு செய்யத் தவறவில்லை. அடையாளத்தை மறைக்க முடியுமா?

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP