திமுக மீண்டும் வெற்றிபெறக் கூடாது: விஜயகாந்த்

சென்னை:
எந்தக் காரணத்தைக் கொண்டும் இன்றைய திமுக ஆட்சி மீண்டும் வராமல் தோற்கடித்து, தமிழக மக்களை மீட்பதே தேமுதிகவின் புனிதப் பணியாகும் என்று அக் கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா இந்த மாதம் 14-ம் தேதி வருவதை ஒட்டி சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
"கட்சி தொடங்கி சில மாதங்களில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 8.5 சதவீத வாக்குகளும், அடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் 11 சதவீத வாக்குகளும் தேமுதிகவுக்கு கிடைத்தன.தனித்துப் போட்டியிட்டும் மக்கள் தொடர்ந்து ஆதரிப்பதற்கு காரணம், நாம் யாருக்கும் இடையூறு செய்வதில்லை என்பதுதான். வணிக நிறுவனங்களை மிரட்டிப் பணம் வசூலிப்பதில்லை. இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக இருந்தாலும் வன்முறைகளில் ஈடுபடுவது இல்லை. உழைப்பினால் சம்பாதிக்கும் பணத்திலேயே கட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம், ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசியலில் சில குடும்பங்கள் குபேரர்களாகவும், கோடிக்கணக்கான குடும்பங்கள் வறுமையிலும் உழன்று வருகின்றன.திமுக அரசின் புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் 52 லட்சம் ஏழைக் குடும்பங்கள் உள்ளன. இவற்றில் பரம ஏழைகளாக இருப்போர் 19 லட்சம் குடும்பத்தினர்.இந்தச் சூழ்நிலையில் வரும் தேர்தலிலாவது ஆட்சி மாறாதா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தேமுதிகவிடம் அவர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ப நாம் ஆற்ற வேண்டிய பணி மகத்தானது.வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் புதிய வரலாறு படைக்கும் வகையில் நம் உழைப்பு அமைய வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் திமுக ஆட்சி மீண்டும் வராமல் அதைத் தோற்கடித்து, தமிழ்நாட்டு மக்களை மீட்பதே நம்முடைய புனிதப் பணியாகும். இன்றைய முதல்வர் கருணாநிதியின் கனவு பலிக்காது.மாற்றார்கள் நம் மீது அவதூறு பரப்புவார்கள். வீண் பழி சுமத்துவார்கள், நமக்குள்ளேயே பேதத்தை உருவாக்குவார்கள். ஆசை காட்டுவார்கள். அச்சமூட்டுவார்கள். அவை அனைத்தையும் துச்சமென முறியடித்து தேர்தலில் தேமுதிகவை வெற்றிபெறச் செய்வது நம் கடமையாகும்' என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக