செவ்வாய், 7 செப்டம்பர், 2010

30-40 தொகுதிகளுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம்: விஜயகாந்த்

 ஸ்ரீவில்லிபுத்தூர்:

                    வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 30, 40 தொகுதிகளுக்காக எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார். தே.மு.தி.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம், சிவகாசி பஸ் நிலையம் அருகே உள்ள திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது:

 
                       வரும் தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது பற்றி கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் குழப்பம் அடையத் தேவையில்லை. நிச்சயமாக 30, 40 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். மேலும், தே.மு.தி.க. அமைக்கும் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கும்.  தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நான் ஏன் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும்? மாநிலத்தில் வறுமையை ஒழிப்பதிலும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு தருவதிலும் இரு கட்சிகளுமே தோல்வியடைந்து விட்டன.

             வரும் தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்று தி.மு.க. தப்புக் கணக்கு போடுகிறது. அது நிச்சயம் வரும் தேர்தலில் நிறைவேறாது. தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் விவசாயிகளை ஏமாற்றி, அவர்களது வாக்குகளைக் கவருவதற்காகவே இலவச பம்ப்செட் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. விவசாயத்துக்குத் தேவையான மின்சாரத்தை ஒழுங்காக வழங்க முடியாத கருணாநிதி, பம்ப்செட் வழங்கப் போவதாக அறிவித்திருப்பது குறுக்கு வழியில் விவசாயிகளின் வாக்குகளைப் பெறவே என்பது எங்கள் குற்றச்சாட்டாகும்.



மின்சார உற்பத்தியை அதிகரிக்க இந்த ஆட்சியில் இதுவரை நிரந்தரத் திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை.

                    சேது சமுத்திரத் திட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது, முதல்வர் கருணாநிதி மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதால்தான் இப்போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றார் விஜயகாந்த்.

                   கூட்டத்தில், மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் மாஃபா க. பாண்டியராஜன், துணைச் செயலாளர் ஆஸ்டின், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், மகளிர் அணிச் செயலாளர் ரெஜினா பாப்பா உள்ளிட்டோர் உரையாற்றினர்.


கடலூர் மாவட்ட செய்திகள்

1 கருத்துகள்:

பெயரில்லா,  9 செப்டம்பர், 2010 அன்று PM 8:14  

HE IS 101% BACKSLIDER

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP