புதன், 22 செப்டம்பர், 2010

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்:ஆசாத்

Updated : 22 Sep 2010 04:24:19 AM IST


சென்னை சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டத்தில் பேசுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கேகே.வீ. தங்கபாலு,
சென்னை:
 
                   வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், அக்கட்சியின் தமிழகப் பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத் நம்பிக்கை தெரிவித்தார்.காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியது:வரும் 
 
                      அக்டோபர் 9-ம் தேதி திருச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவராக 4-வது முறையாக பொறுப்பேற்றுள்ள சோனியா காந்திக்கு தமிழகத்தின் சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிப்பதென முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தமிழகத் தலைவர்களை நினைவுகூரும் வகையில் இந்தப் பொதுக்கூட்டம் அமையும். பாஜக எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 
 
                   திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைய உள்ளனர்.மத்திய, மாநில அரசுகள் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதனை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்காக கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அதற்காக கட்சி நிர்வாகிகள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். 
 
                 வரும் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது. அவரவர் எல்லையைத் தாண்டக் கூடாது: காங்கிரஸ் மிகப்பெரிய ஜனநாயகக் கட்சியாகும். எனவே, இங்கு பல்வேறு விதமான கருத்துகள் வருவது சகஜமானது. ஆனால், கட்சியைப் பாதிக்கும் வகையில் வெளிப்படையாக யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. லட்சுமண ரேகையை யாரும் தாண்டக் கூடாது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. அது கட்சியின் உள் விவகாரமாகும்.
 
                 நவம்பர் 19-ம் தேதி ராகுல் காந்தி வருகை: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கட்சியைப் பலப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவரது முயற்சியால் இளைஞர் காங்கிரஸ் பலம் பெற்று வருகிறது. தமிழக இளைஞர் காங்கிரஸôர் மேற்கொள்ளும் பாத யாத்திரை மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தொடங்குகிறது. அனைத்து மாவட்டங்களின் வழியாகவும் செல்லும் இந்த பாத யாத்திரை இந்திரா காந்தி பிறந்த நாளான நவம்பர் 19-ம் தேதி திருச்சியில் நிறைவு பெறும். நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இளைஞர் காங்கிரஸ் நடத்தும் இந்த பாத யாத்திரை வெற்றிகரமாக அமைய காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், அமைப்புகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் குலாம் நபி ஆசாத்.
 
                    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், எம். கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் டி. யசோதா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கார்த்தி சிதம்பரம், கே. சிரஞ்சீவி, மக்களவை உறுப்பினர்கள் கே.எஸ். அழகிரி, விஸ்வநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP