யாருடன் கூட்டணி : விஜயகாந்த் பேச்சு

சென்னை :
"கூட்டணி குறித்து எனது தொண்டர்களை கேட்காமல் நான் எதையும் செய்ய மாட்டேன்' என, சென்னையில் நடந்த முப்பெரும் விழாவில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
வடசென்னை மாவட்ட தே.மு.தி.க., சார்பில் முப்பெரும் விழா சென்னை திரு.வி.க.,நகரில் நடந்தது. இதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில இளைஞரணி செயலர் சுதீஷ், வடசென்னை மாவட்ட செயலர் யுவராஜ், பகுதி செயலர் லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்த பேசியது:
ஈ.வெ.ரா., அண்ணாதுரை பெயர்களை சொல்லி, தி.மு.க., தலைவர் கருணாநிதி மக்களை ஏமாற்றி வருகிறார். மனிதர்களுக்குள் சாதி, மதம் மற்றும் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது என்றவர் ஈ.வெ.ரா., ஆனால், மக்களுக்குள் மோதலை ஏற்படுத்தி குளிர் காய்பவர் கருணாநிதி.அம்பேத்கர் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி. எனது விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலையை வைக்கவிடாமல் தடுத்து விட்டனர். அவரை கேட்டால் அம்பேத்கரையும் நான் அறிவேன் என்பார். இறந்தவர்களை எல்லாம் எனக்குத் தெரியும்; பழகினேன் என்று பொய் சொல்வார். வீணர்கள் என்று சொல்லும் கருணாநிதி, தைரியம் இருந்தால் தே.மு.தி.க., என்று சொல்லட்டுமே?
எதையும் தாங்கும் இதயம் அவருக்கு இல்லை. ஆனால், எதையும் தாங்கும் இதயம் இருப்பதாக மக்களை ஏமாற்றுகிறார். எனது விருதகிரி படத்தை வெளிவரவிடாமல் பல்வேறு வகையில் இடையூறு செய்கின்றனர். ஆனால், அவர்களோ மக்கள் பணி என்று சொல்லி படத்தயாரிப்பில் ஈடுபட்டு, திரைப்படத் தொழிலாளர்களையும் வதைக்கின்றனர். கேட்டால் பேரனுக்கு கொடுத்த பாக்கெட் மணியில் படத்தை தயாரிப்பதாக கூறுகிறார்கள். செம்மொழி மாநாட்டால் தமிழக மக்களுக்கு என்ன பயன்? அரசு கேபிள் டிவி என்னவாயிற்று. இன்று கலர் டிவி கொடுத்தவர்கள்;அதற்கான இலவச கேபிள் டிவி இணைப்பு தராமல் கட்டணம் வசூலிக்கின்றனர். குழந்தைகளுக்கு சத்துணவாக ஐந்து முட்டை போடுவதாக சொல்கிறார். உண்மை அதுவல்ல. தனது சொத்தை காப்பாற்றிக் கொள்ளவே முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். தொடர்ந்து முட்டை போடுகிறோம் என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.
இன்னும் இவர்களுக்கு ஓராண்டில் மக்கள் ஒட்டுமொத்த மொட்டை போடுவார்கள். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 66 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், 93 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. கருணாநிதியும், அவரது மகளும் 4.5 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாக சொல்கிறார்கள். அப்படியென்றால் கூட 61.5 லட்சம் பேருக்கு யார் வேலை கொடுப்பது. ஊனமுற்றவர்களை மாற்று திறனாளிகள் என அழைக்க வேண்டும் என்றார். இது நல்ல விஷயம்தான். ஆனால், அவர்களுக்கு மூன்று சதவீத வேலை வாய்ப்பை தருவாரா? நான் நினைத்தால் கூட்டணி அமைத்து எத்தனை கோடி வேண்டுமானும் சம்பாதித்திருப்பேன். மக்கள் சேவைக்காக எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் இழப்பேன். கூட்டணி குறித்து எனது தொண்டர்களை கேட்காமல் நான் எதையும் செய்ய மாட்டேன். நம்ம வழி ஒரே வழி. அது மக்களுக்கு சேøவை செய்யும் நேர் வழி.இது முப்பெரும் விழா அல்ல; கருணாநிதி ஆட்சிக்கு முடிவு கட்டும் விழா. இவ்வாறு விஜயகாந்த பேசினார்
தே.மு.தி.க., பொதுக்கூட்டம் :
வடசென்னை மாவட்ட தே.மு.தி.க., சார்பில், ஈ.வெ.ரா., அண்ணாதுரை பிறந்தநாள் விழா மற்றும் தே.மு.தி.க., ஆறாம் ஆண்டு துவக்க விழாவின் பொதுக்கூட்டம் திரு.வி.க., நகரில் நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில இளைஞரணி செயலர் சுதீஷ், வடசென்னை மாவட்ட செயலர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏழைகளுக்கு உதவும் விஜயகாந்த நல்வாழ்வு திட்டத்தின் துவக்க விழா தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுதினம் நடைபெறுகிறது. அதற்கான திட்டத்தை விஜயகாந்த நேற்று அறிமுகப்படுத்தினார்.முன்னதாக, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுக்கூட்டத்தில், விஜயகாந்திற்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக