காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பாமகவுக்கும்-அதிமுகவுக்கும் இடையே நேரடியான போட்டி

காஞ்சிபுரத்தில் தொகுதி மறுசீரமைப்பில் சற்று உருமாறியுள்ள தொகுதி காஞ்சிபுரம். இத் தொகுதியில் பாமகவுக்கும்-அதிமுகவுக்கும் இடையே நேரடியான கடும் போட்டி நிலவுகிறது. இத் தொகுதியில் நடைபெற்ற 12 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக 5 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் பாமக வெற்றி பெற்றது. இத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரமும், பாமக சார்பில் முன்னாள் செய்யாறு எம்எல்ஏ உலகரட்சகனும் போட்டியிடுகின்றனர். இத் தொகுதியில் 2,31,038 வாக்குகள் உள்ளன. இவர்களில் 35 சதவீதம் வன்னியர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 28 சதவீதம் முதலியார் சமூகத்தினரும், தாழ்த்தப்பட்டோர் 25 சதவீதத்தினரும் உள்ளனர். இதர ஜாதியைச் சேர்ந்தவர்கள் 12 சதவீதம் பேர் உள்ளனர். இத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் உலகரட்சகன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது அவருக்கு பலம். மேலும் இக் கூட்டணியில் உள்ள திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகியவை இணைந்து தீவிரம் பிரசாரம் செய்வது கூடுதல் பலம்.
ராமதாஸ், மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து வந்து பிரசாரம் செய்துவிட்டு சென்றிருப்பதால் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும் தொடர்ந்து இரு முறை கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கியிருப்பதால் திமுக நிர்வாகிகள் சிலர் சோர்வடைந்துள்ளனர். எதிர்கட்சிகளால் வைக்கப்படும் விலைவாசி உயர்வு, ஊழல் ஆகிய பிரசார யுக்தியால் நகர்புறத்தில் இவர்களுக்கு வாக்கு இழப்பு ஏற்படும். தான் தேர்தலில் வெற்றி பெற்றால் புதிய பாதாள சாக்கடைத் திட்டம் அமைப்பது, நெசவாளர் பிரச்னையை தீர்க்க முக்கியத்துவம் அளிப்பது, குடிதண்ணீர் பிரச்னையை தீர்ப்பது ஆகிய வாக்குறுதிகளை உலகரட்சகன் அளித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வி.சோமசுந்தரம் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இச் சமூகத்தினரும் இத் தொகுதியில் அதிகம் இருப்பது இவருக்கு பலம். அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிரசாரம் செய்துவிட்டு சென்றுள்ளார். இதனால் அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் பாமக 11,284 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது. இத் தொகுதியில் ரூ.15,187 வாக்குகள் பெற்ற தேமுதிக அதிமுக கூட்டணியில் சேர்ந்திருப்பதும் இக் கூட்டணிக்கு பலம். தேமுதிக தனித்து போட்யிட்டபோது அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக வாக்குகள் விழுந்திருக்கலாம்.
அந்த வாக்குகள் தற்போது கூட்டணிக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் அரசியல் நோக்கர்கள் மத்தியில் உள்ளது. இத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்யும் அதிமுகவினர் தேமுதிகவை தவிர மற்ற கூட்டணிக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைத்து செயல்படவில்லை என்ற குறை உள்ளது. திமுக அரசால் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் கிராம மக்களிடம் முழுமையாக சென்றடைந்துள்ளதால் அங்கு திமுக கூட்டணியின் வாக்கு வங்கியை உடைப்பதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சில சுயேச்சை வேட்பாளர்கள் அதிமுகவின் வாக்கு வங்கியை சிதைத்து வருவதாகவும் அதிமுகவினர் மத்தியிலேயே பேச்சு உள்ளது.
மேலும் கைத்தறி துறை அமைச்சராக இருந்தபோது வி.சோமசுந்தரம் நெசவாளர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்ற பாமகவின் பிரசாரம் நெசவாளர்கள் மத்தியில் எடுபடுகிறது. நகர்புறத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியிலும், இளம் வாக்காளர்கள் மத்தியிலும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவான சூழ்நிலையும், அரசின் நலத்திட்ட உதவிகள், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புகளின் ஜாதி வாக்குகள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்துவதால் கூலித் தொழிலாளர்கள் வாக்குகள் என்று கிராமப்பு புற பகுதிகள் பாமகவுக்கு சாதகமாகவும் உள்ளன.
பாமகவுக்கும்-அதிமுகவுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தாலும், கடைசி நேர சாமார்த்திய சதுரங்கத்தில் யார் முந்துகிறார்களோ அவர்களுக்கு வெற்றி கிடைக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக