சனி, 2 ஏப்ரல், 2011

அதிமுக இதுவரை ஜெயிக்காத தொகுதி!

திருவண்ணாமலை:
          சட்டப்பேரவைத் தேர்தலில் கலைக்கப்பட்ட தண்டராம்பட்டுத் தொகுதியில் மோதிக் கொண்டவர்கள் இப்போது திருவண்ணாமலை தொகுதியில் நேரடி மோதலில் இறங்கி இருக்கிறார்கள்.
               திருவண்ணாமலைக்கு அரசியல் ரீதியாகச் சில தனிச் சிறப்புகள் உண்டு. மணியம்மையுடனான அவரது திருமணத்துக்கு முன்பு பெரியாருக்கும், அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கும் இடையே சந்திப்பும், ஆலோசனையும் நடத்த இடம் திருவண்ணாமலை. திமுகவின் முதல் நகர்மன்றத் தலைவர், முதல் எம்.பி.யை தேர்வு செய்த பெருமைக்குரிய இடமும் திருவண்ணாமலைதான்.இத்தொகுதியில் கடந்த 1957ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு தேர்தல் வரை 12 பேரவைத் தேர்தல்களில் திமுக அதிகபட்சமாக 7 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும் வென்றுள்ளன. 
             அதிமுக இதுவரை ஒருமுறை கூட வெற்றி பெறாத தொகுதிகளில் ஒன்று என்கிற தனித்துவமும் திருவண்ணாமலைக்கு உண்டு. திருவண்ணாமலை தொகுதியில் இப்போது 1,02,992 ஆண்கள், 1,04,920 பெண்கள் என மொத்தம் 2,07,212 வாக்காளர்கள் உள்ளனர். திமுக சார்பில் தற்போதைய உணவு அமைச்சர் எ.வ.வேலுவும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரனும் போட்டியிடுவதால் இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இத்தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றுள்ளது.திமுக சார்பில் ப.உ.சண்முகம் 3 முறையும், கு.பிச்சாண்டி 4 முறையும் வெற்றி பெற்ற தொகுதி இது.

               கடந்த 2006 பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.பிச்சாண்டி 74,773 வாக்குகளும், அதிமுகவின் வி.பவன்குமார் 61,970 வாக்குகளும், தேமுதிகவின் எஸ்.குமரன் 6,660 வாக்குகளும் பெற்றனர்.திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் வேலு, ஏற்கெனவே மூன்று முறை வென்ற தண்டராம்பட்டு தொகுதி கலைக்கப்பட்டதால் தற்போது திருவண்ணாமலையில் போட்டியிடுகிறார். உணவுத் துறை அமைச்சராக தொடர்ந்து 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர். 
              திருவண்ணாமலை தொகுதியில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ள பா.ம.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் போன்றவற்றின் துணையோடு தேர்தலை எதிர்கொள்கிறார் என்பதுதான் அவரது பலம்.அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன் அமைதியான சுபாவம் கொண்டவர். இவர் 2001-ல் கலசபாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று பால்வளத் துறை அமைச்சாரக இருந்தார். 
                இதுதவிர, பா.ஜ.க. சார்பில் அ.அர்ச்சுனன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ச.ராஜி, இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இ.கு.தெய்வீகன் உள்பட 16 பேர் போட்டியிடுகின்றனர். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தொகுதியில் மணிலா விவசாயிகள் பயன்பெறும் வகையில் துவக்கப்பட்ட டான்காப் ஆலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. சிறந்த சுற்றுலா நகரமாக திருவண்ணாமலையை மாற்ற வேண்டும் என தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. 
                ஆனால், இவையெல்லாம் தேர்தல் பிரச்னைகளா என்றால் அதுதான் இல்லை.திருவண்ணாமலையைப் பொறுத்தவரை, முதலியார்களும், வன்னியர்களும் கணிசமாக உள்ள தொகுதி. எல்லாவற்றிற்கும் மேலாக, கணிசமாக காங்கிரஸ் வாக்காளர்கள் இருக்கும் வடமாவட்டத் தொகுதிகளில் திருவண்ணாமலையும் ஒன்று. இந்தத் தொகுதியில் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிப்பதில் தனிப்பட்ட செல்வாக்கு கணிசமான பங்கு வகிக்கிறது. 1977-ல் தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். அலை அடித்தபோதுகூட, அப்போது திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ப.உ. சண்முகத்துக்குத் தனிப்பட்ட செல்வாக்கு இருந்ததால் அவரால் வெற்றி பெற முடிந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

              ப.உ.சவின் தொகுதியாக இருந்த திருவண்ணாமலை 1989 முதல் கு. பிச்சாண்டியின் தொகுதி என்று அறியப்பட்டு வந்தது. 1991 ராஜீவ் அனுதாப அலையில் அவர் தோற்கடிக்கப்பட்டாலும் 1996, 2001, 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டவர் அவர். திருவண்ணாமலை மாவட்ட திமுக அரசியலில் கட்சியின் ஆரம்ப காலத் தொண்டர் என்று மதிக்கப்படுபவர் கு. பிச்சாண்டி. அதிமுகவிலிருந்து திமுகவில் அமைச்சர் எ.வ. வேலு இணைந்தது முதலே திருவண்ணாமலை மாவட்ட திமுக வேலு அணி, பிச்சாண்டி அணி என்று செயல்படத் தொடங்கிவிட்டது. 

                 பிச்சாண்டி அணியினரின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் இந்த முறை அமைச்சர் எ.வ. வேலுவின் வெற்றி அமையும். திருவண்ணாமலைத் தொகுதியில் தேமுதிகவுக்குக் கணிசமான ஆதரவு கிடையாது. அதிமுக கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகளுக்கும் செல்வாக்கு அதிகம் இல்லை. இந்தத் தொகுதியில் செல்வாக்கும் கணிசமான வாக்கு வங்கியும் உள்ள காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருப்பதும், திமுகவுக்கு என்று கணிசமான வாக்கு வங்கி இருப்பதும் அமைச்சர் எ.வ. வேலுவின் வெற்றிக்கு உத்திரவாதம் அளிக்கும் பலங்கள்.

                 திமுகவின் கோட்டை என்று கருதப்படும் திருவண்ணாமலை தொகுதி நழுவுமானால் அதற்கு அதிமுகவின் பலம் காரணமாக இருக்காது. திமுகவில் காணப்படும் உள்கட்சிப் பூசல்களும், தங்களுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படாததில் திமுகவிடம் மனவருத்தம் ஏற்பட்டிருக்கும் காங்கிரஸýம், பாமகவும் முழுமனதுடனான ஒத்துழைப்பு தராததும்தான் காரணமாக இருக்கும். உணவு அமைச்சரான வேலுவுக்கு யாருக்கு எப்படி என்ன சாப்பாடு போட்டு வசப்படுத்த முடியும் என்கிற கலை தெரியும் என்கிறார்கள்!

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP