திங்கள், 11 ஏப்ரல், 2011

திருவாரூர் சட்டமன்றத் தொகுதி முதல்வரின் தொகுதியாகவும் இருக்குமா?




 
             
                தொடர்ந்து 12-வது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் திருவாரூரில் மண்ணின் மைந்தராய் களமிறங்கியுள்ளார் திமுக தலைவரும், முதல்வருமான மு. கருணாநிதி.  திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாறியுள்ளது. 
 
               தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர், திருவாரூர் தொகுதியில் இருந்த சில பகுதிகள் நாகை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கீழ்வேளூர் (தனி) தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. மன்னார்குடி தொகுதியில் இருந்த கூத்தாநல்லூர் நகராட்சி, வக்கிராநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகள் திருவாரூர் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரத்தநாடு தொகுதியில் இருந்த பொதக்குடி, அத்திக்கடை உள்ளிட்ட பகுதிகளும் திருவாரூர் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.  தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு திருவாரூர் தொகுதி பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக இத் தொகுதியில் கருணாநிதி போட்டியிடுகிறார்.
 
              இதனால், இந்தத் தொகுதி தற்போது வி.வி.ஐ.பி. அந்தஸ்தைப் பெற்றுள்ளது.  ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகைக்கு அருகிலுள்ளது திருக்குவளை கிராமம். இங்கு பிறந்தாலும், தனது பள்ளிப் பருவக் கல்விக்காக சொந்த ஊரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாரூருக்கு வந்து தங்கியவர் கருணாநிதி. அதன் பின்னர் அரசியலில் ஈடுபட்டு, முதன் முதலில் 1957-ம் ஆண்டில் குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
                இதைத் தொடர்ந்து, 1962-ல் தஞ்சாவூர், 1967, 1971-ல் சைதாப்பேட்டை, 1977, 1980-ல் அண்ணாநகர், 1989, 1991-ல் துறைமுகம், 1996,2001,2006-ல் சேப்பாக்கம் தொகுதி என போட்டியிட்ட 11 முறையும் தோல்வி காணாத பேரவை உறுப்பினராகத் திகழ்கிறார் கருணாநிதி. 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.  12-வது முறையாக தான் படித்து, வளர்ந்த திருவாரூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தலில் இப்போது போட்டியிடுகிறார்.  
 
                இவரை எதிர்த்து அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் குடவாசலை சேர்ந்த எம். ராஜேந்திரன். இவர் அதிமுகவில் மாவட்டச் செயலர், ஒன்றியக் குழுத் தலைவர், பேரூராட்சித் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் எந்தப் பதவியும் இல்லாமலும், கட்சிப் பணிகளில் பங்கேற்காமலும் இருந்து வந்தவர். இந்நிலையில், திடீரென ராஜேந்திரனுக்கு திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளது அதிமுக தலைமை.  திருவாரூர் தொகுதியில் வெள்ளாளர்கள் அதிகமாக உள்ளனர். தாழ்த்தப்பட்டவர்களும் கணிசமாக உள்ளனர். இந்தத் தொகுதியில் உள்ள கொடிக்கால்பாளையம், அடியக்கமங்கலம், கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி. கள்ளர் சமுதாயத்தினரும் இங்கு உள்ளனர்.  திமுக வாக்கு வங்கி இத் தொகுதியில் சற்று அதிகம் என்றாலும், அதிமுக, இடதுசாரிக் கட்சிகள், தேமுதிக ஆகியவற்றுக்கு உள்ள வாக்கு வங்கியை ஒப்பிடும்போது, இரு அணிகளும் சமமான வாக்கு வங்கியைப் பெற்றுள்ளன என்றுதான் கூற வேண்டும்.
 
                   கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இத் தொகுதி தனித்தொகுதியாகவே இருந்து வந்த காரணத்தால், ஜாதி வாக்குகள் வெற்றி, தோல்வியை என்றும் நிர்ணயித்ததில்லை. இதனால், வெற்றி தோல்விக்கு ஜாதி ஒரு காரணமாக இருந்ததற்கான வாய்ப்புகளும் ஏற்படவில்லை.  இந்தத் தொகுதியில் 1962-ம் ஆண்டில் தொடங்கி, 2006-ம் ஆண்டு வரையிலான 11 தேர்தல்களில் திமுக அல்லது திமுகவின் ஆதரவு பெற்ற வேட்பாளரே பெரும்பாலும் வெற்றி பெற்ற நிலைதான் இங்கு தொடர்ந்து இருந்து வந்துள்ளது.  கடந்த 2006-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உ. மதிவாணன் 76,901 வாக்குகள் பெற்று, பால்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 
 
                 அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ. தங்கமணி 49,968 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் என். மோகன்குமார் 5,198 வாக்குகளும் பெற்றனர்.  2009 மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் மக்களவை தொகுதிக்குட்பட்ட திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் 75,038, அதிமுக அணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் 55,873 வாக்குகள் பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் முத்துகுமார் 9,734 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் அதிமுக தேமுதிக வாக்குகளைவிட திமுக வேட்பாளர் கிட்டதட்ட 10 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
                 திமுகவுக்கு பெரும்பாலும் சாதகமான தொகுதியாக திருவாரூர் தொகுதி இருந்து வந்துள்ளதை கடந்த காலத் தேர்தல் வரலாறுகள் காட்டுகின்றன.  1997-ம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து பிரித்து 10 ஊராட்சி ஒன்றியங்கள், 7 வட்டங்கள், 4 நகராட்சிகளுடன் பிரிக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம். இதனாலேயே, அதிமுக ஆட்சியில் கவனிக்கப்படாத பகுதியாக திருவாரூர் இருந்தது என்பது இத் தொகுதி மக்களின் பரவலான குற்றச்சாட்டு.  மேலும், தற்போதைய திமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி, திருவாரூரில் தமிழகத்துக்கான மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூரில் புதிய பேருந்து நிலையத்துக்கான நிதி ஒதுக்கீடு, அரைவட்டப் புறவழிச் சாலைக்கு நிதி ஒதுக்கீடு ஆகியவை மக்களுக்கான பயனுள்ள திட்டங்களில் முக்கியமானவை.  
 
               அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேந்திரன் அதிமுகவினரிடையே சமீபகாலமாக நெருங்கிய தொடர்பில்லாதவர் என்பது அவருக்கு பலவீனம். இருப்பினும், அதிமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு கிளைகளும், வாக்குகளும் உள்ள பகுதி திருவாரூர் தொகுதி என்பதும், மக்களை பாதித்துள்ள விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள திமுக எதிர்ப்பு அலை ஆகியவை அவருக்கு பலமாகவும் அமைந்துள்ளன.  கடந்த நாற்பது ஆண்டுகளாக சென்னை மாநகரில் போட்டியிட்டு வந்த முதல்வர் கருணாநிதி இந்த முறை திருவாரூருக்குப் போய் போட்டியிட நேர்ந்திருப்பது சென்னையிலும், தமிழகத்தின் ஏனைய தொகுதிகளிலும் திமுகவின் பலவீனத்தைக் காட்டுவதாக இருக்கலாம். ஆனால், தனது சொந்த ஊரில் தனது கடைசித் தேர்தலில் கருணாநிதி போட்டியிடுகிறார் என்பது திருவாரூர் தொகுதியில் அவருக்கு பலம். 
 
              "இப்போதாவது நமது ஊருக்கு நம்ம ஊர் பிள்ளை வந்து போட்டியிடுகிறதே' என்பது நிச்சயமாக அவருக்குக் "கை' கொடுக்கும் சென்டிமென்ட்.  காமராஜ், பக்தவத்சலம், அண்ணா என்று பல தலைவர்கள் தங்கள் சொந்தத் தொகுதியில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். அந்த "சென்டிமென்டை' இந்த முறை திருவாரூரில் முதல்வர் கருணாநிதி முறியடிப்பார் என்று நம்பலாம்.  தொகுதி மக்கள் மத்தியில் பரவலாகக் கேட்கப்படும் கேள்வி. என்ன தெரியுமா? "இது முதல்வர் போட்டியிடும் தொகுதியாக மட்டும்தான் இருக்குமா இல்லை முதல்வரின் தொகுதியாக இருக்குமா?' என்பதுதான்

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP