விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி: தேமுதிக அறிவிப்பு
கடலூர்:
விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று தேமுதிக மாநில இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் கூறினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி கடலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், செயல் வீரர்கள் கூட்டமும் செவ்வாய்க்கிழமை நடந்தது.
கூட்டத்தில் தேமுதிக மாநில இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் பேசியது:
வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில், அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு மாற்றாக விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி அமையும். அந்தக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். விஜயகாந்தை ஆட்சியில் அமர்த்துவோம். குறிப்பிட்ட ஜாதி கட்சிகளுக்கு மட்டும்தான் வாக்குகள் கிடைக்கும் என்று பேசப்பட்ட கடலூர் மாவட்டத்தில், விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே இந்த மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தேமுதிக கூட்டணி வெற்றி பெறும்.
தேமுதிகவினர் மட்டுமே தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து விஜயகாந்த் பிறந்தநாளுக்கு டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர். மற்ற கட்சியினர் பொதுமக்களிடம் பணம் வசூலித்து பேனர்களை வைத்து வருகிறார்கள் என்றார் சுதீஷ். 200 ஏழைப் பெண்களுக்கு சேலைகள், மாணவர்களுக்கு 1000 நோட்டுப் புத்தகங்கள், இருவருக்கு 3 சக்கர வண்டிகள் ஆகியவற்றை சுதீஷ் வழங்கினார். விழாவுக்கு தேமுதிக வடக்கு மாவட்டச் செயலர் பி.சிவக்கொழுந்து தலைமை வகித்தார். மாநில விவசாயத் தொழிலாளர் பிரிவு செயலர் வி.சி.சண்மும் வரவேற்றார். தெற்கு மாவட்டச் செயலர் உமாநாத், கடலூர் நகரச் செயலர் ஏ.ஜி.தட்சணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக