நல்ல திட்டங்களை செயல்படுத்த பா.ம.க., ஆட்சிக்கு வரவேண்டும்: ராமதாஸ்

மாமல்லபுரம்:
பா.ம.க.,விடம் நல்ல திட்டங்கள் உள்ளன. இதை செயல்படுத்த பா.ம.க., ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என திருக்கழுக்குன்றத்தில் நடந்த திருப்போரூர் தொகுதி பா.ம.க., களப்பணியாளர் பயிற்சி முகாமில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
முகாமில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:
மக்களுக்கு இலவசங்களை கொடுக்காமல், அவர்களுக்கு வாங்கும் சக்தியை உருவாக்க வேண்டும். அனைவரும் பிளஸ் 2 வரை கட்டாயம் கல்வி கற்க வேண்டும். அதற்குமேல் படிப்பவர்களுக்கும் அரசு இலவசக் கல்வி அளிக்க வேண்டும். அவர்களுக்கு அரசே வேலை வழங்க வேண்டும். படிக்க வைக்காத பெற்றோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். பல நல்ல திட்டங்கள் பா.ம.க.,விடம் உள்ளன. இதை செயல்படுத்த பா.ம.க., ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். இப்போது கூட்டணி வேண்டாம் என்கிறீர்கள்.
இது எனக்கு தெம்பை தருகிறது. கோடிக் கணக்கான ரூபாய்களை கொட்டி நம்மை மற்றவர்கள் இதுவரை ஏமாற்றினர். இனி நமக்கு பலகீனம் ஏற்படாது. நாம் வெற்றிபெறத்தான் எம்.எல்.ஏ.,க்கள் ஊர் ஊராக சுற்றி வருகின்றனர். கட்சியிலும், இளைஞர்களுக்குதான் இனி வாய்ப்பு. ஒவ்வொரு ஊர் கிளையிலும் 30 வயதிற்குள் உள்ள வாலிபர்தான் கிளைச் செயலர். வயதானவர்கள் கிளைத் தலைவராக மட்டுமே இருக்க வேண்டும். அதேபோல், பொருளாளர் பதவியில் இளம்பெண்கள் மட்டுமே இருக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம், பா.ம.க., கோட்டையாக மாற வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ., ஆறுமுகம் போட்டியிடுகிறார். இவ்வாறு ராமதாஸ் பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக