வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் நிலை உருவாகும்: கார்த்தி சிதம்பரம்


ராஜீவ்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மந்தைவெளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் அகில இந்திய காங்கிரஸ்
 
             ராகுல் காந்தியின் கைக்குப் பொறுப்புகள் வந்தவுடன் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் சூழ்நிலை உருவாகும் என்றார் அ.இ.கா.க. உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம். மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு விளம்பரம் தேடிக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
 
சென்னை மந்தைவெளியில் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இதில் கார்த்தி சிதம்பரம் பேசியது:
 
                  சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல.தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் பெரிய அளவில் விளம்பரம் செய்கின்றனர். 6 ஆண்டுகள் கழித்து நிறைவேறும் திட்டத்துக்கு இப்போதே விழா நடத்தி விளம்பரம் தேடுகின்றனர். அந்தத் திட்டம் பின்பு நிறைவேறுமா இல்லையா என்பதைக் கூற முடியாது. 
 
                      ஆனால் அந்த திட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் திராவிடக் கட்சிகள் என்று மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்த பிறகுதான் பல இளைஞர்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. என் தந்தைக்கு 39 வயது இருக்கும்போது அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது.  இப்போதும் காங்கிரஸ் கட்சிதான் மத்தியில் ஆட்சி செய்கிறது. ஆனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை. நமது கட்சியில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்ட தயங்கக்கூடாது. அப்போதுதான் கட்சி வளரும்.மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி. இதை காங்கிரஸ்தான் சாதித்தது என்று மக்களிடம் நாம் பேசவில்லை.
 
               இலங்கைப் பிரச்னை குறித்து காங்கிரஸ் கட்சி மெüனமாக உள்ளது. ராஜீவ் காந்தி என்ன செய்தார், காங்கிரஸ் கட்சிதான் என்ன செய்தது என்று குறை கூறுகின்றனர். இலங்கையிóல் தமிழர்கள் பாதிக்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் கூறுகின்றனர். இந்தியாவில் உள்ளது போன்று தனித்தனி மாநிலமாக இலங்கையிலும் செயல்பட வேண்டுóம் என்று ராஜீவ் காந்தி விரும்பினார். இதுதான் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா உடன்பாடு. ஆனால் தமிழர்களுக்காக போராடுவதாக கூறிக் கொண்ட விடுதலைப் புலிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை இதை ஏற்றுக் கொண்டிருந்தால், மக்கள் செல்வாக்கு பிரபாகரனுக்கு இருந்திருந்தால் அவர் தமிழர் பகுதிக்கு முதலமைச்சராகி இருப்பார்.
 
            ஆனால் இதை விடுத்து, தனி நாடு கோரிக்கை ஏற்புடையது அல்ல. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன. அவை தனி நாடு கோரிக்கை விடுத்தால் நாம் யாராவது ஏற்றுக் கொள்வோமா? ஆனால் புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு ராஜீவ் காந்தி ஆதரவு அளிக்காததால் அவரை 1991-ல் படுகொலை செய்தனர். இதை நாம் எப்படி மன்னிக்க முடியும்? திராவிடக் கட்சிகளில் தலைவர்கள் யாருக்காவது இது போன்ற கதி ஏற்பட்டிருந்தால் யாராவது மன்னிப்பார்களா?1967-களில் காங்கிரஸ் கட்சிமீது பல்வேறு அவதூறுகளைக் கூறித்தானே திராவிடக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. நான் இப்போது தேர்தல் கூட்டணி குறித்துப் பேசவில்லை. 
 
             ஆனால் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் எந்தக் கட்சியும் வெற்றிபெற முடியாது, ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது. போராடும் குணம் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டும். சர்ச்சைகளை கண்டு அஞ்சக்கூடாது. பக்கத்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் போராடும் குணம் இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் இல்லை? சர்ச்சை வேண்டாம் என்றால் காங்கிரஸ் கட்சி விடுதலைப் போராட்டத்தல் ஈடுபட்டிருக்க முடியுமா? அதிக சர்ச்சைகளையும், போராடும் குணத்தையும் கொண்ட கட்சிதான் காங்கிரஸ்.விமர்சனம் இல்லாமல் முன்னேற முடியாது. தமிழகத்தில் மக்கள் பிரச்னை குறித்து மேடைகளில் பேசத் தயங்கக்கூடாது. அப்படிப் பேசினால்தான் நாம் வளர முடியும். இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருப்பது காங்கிரஸ் கட்சி.
 
                  தீவிரவாதம் குறித்து திராவிடக் கட்சிகள் எங்காவது பேசுவது உண்டா? தமிழகத்துக்கு தேசியக் கட்சி அவசியம் தேவை. தமிழர்களாக இருப்பதில் தவறில்லை. முதலில் இந்தியராக இருக்க வேண்டும். கூட்டணியே வேண்டாம் என்று 1989-ல் ராஜீவ் காந்தி தனித்து நின்று சாதனை புரிந்தார். ஆனால் அப்போது நாம் ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும் நமது பெயர் நிலைத்திருந்தது. இப்போது மீண்டும் அதே நிலை, ராகுல் காந்தி கைக்கு அனைத்து பொறுப்பும் வந்தவுடன் வரும் என்பது நிச்சயம் என்றார் கார்த்தி ப. சிதம்பரம்.சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன், அ.இ.கா.க. உறுப்பினர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
 
தனியார் பள்ளிகள் பாதிப்பு
 
                  தனியார் பள்ளிகளுக்கான மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிóல் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலித்தால் பள்ளிகளை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நியாயமான கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பல பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இப்பிரச்னையில் தெளிவான நல்லதொரு முடிவு எடுக்கப்பட வேண்டும். முதல்வர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண வேண்டும் என்றார் கார்த்தி ப.சிதம்பரம்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP