திங்கள், 16 ஆகஸ்ட், 2010

அ.தி.மு.க.,வில் ஐக்கியமாகும் ஜாதி கட்சிகள்

              ஜாதிக்கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு ஜாதி அமைப்புகளும் அ.தி.மு.க.,வில் அடுத்தடுத்து ஐக்கியமாகி வருகின்றன. இட ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு காரணமாக இருந்த, ஜெயலலிதாவுக்கு அடுத்த மாதம் சென்னையில் நடத்தவுள்ள பாராட்டு விழா, தேர்தல் பிரசார மாநாடாக மாறுகிறது.

              தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, பிற்படுத்தப்பட்டோர் வயிற்றில் பால் வார்த்துள்ளது. தீர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு, செப்., 29ல், சென்னை அருகே வானகரத்தில் பாராட்டு விழா நடக்கவுள்ளது.இதற்கு பிள்ளையார் சுழி போட்டது 

              வன்னியர் கூட்டமைப்பு என்றாலும், விழாவை மாநாடு போல் நடத்த, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் முன் வந்துள்ளது. பாராட்டு விழா, தேர்தல் பிரசார மாநாடாக மாறும் நிலை உருவாகியுள்ளது.புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு ஆதிதிராவிட அமைப்புகளும் வரிந்து கட்டி களத்தில் குதித்துள்ளன. தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இம்மானுவேல், சேலம் விமான நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர்களை சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையையும் இவர்கள் முன் வைக்கின்றனர். முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கைகளை மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் பிரகடனப்படுத்த தயாராகி வருகின்றன.

             ஏற்கனவே அ.தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் போன்றவை உள்ளன. புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, வன்னியர் கூட்டமைப்பு, பார்வர்டு பிளாக் மற்றும் பல அமைப்புகளும் கூட்டணியில், "லேட்டஸ்டாக' ஐக்கியமாகியுள்ளன .எப்படியும் கூட்டணி கட்சிகளை வைத்து கொண்டு, முதல்வராக அரியணையில் அமர வேண்டுமென்பது ஜெயலலிதாவின் இலக்கு. அதனால், கூட்டணி கட்சிகளிடம் கொள்கை முரண்பாடு, தொகுதி பங்கீட்டு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதிலும், எந்த ஒரு கட்சியும் கூட்டணியிலிருந்து விலகி விடக் கூடாது என்பதிலும் ஜெ., கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

                கடந்த சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச நியமிக்கப்பட்ட, தேர்தல் பணிக் குழுவினரின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த சில கட்சிகள், அ.தி.மு.க.,வுக்கு எதிராக களம் அமைத்தன. இந்த முறை அதுபோன்ற தவறு நடக்கக் கூடாது என்பதிலும் ஜெ., கவனமாகவே உள்ளார்.

               கூட்டணி கட்சித் தலைவர்கள், ஜாதி அமைப்புகளின் தலைவர்களிடம் நேரடியாக சந்தித்து பேசுகிறார். அந்த வகையில் சி.என்.ராமமூர்த்தி, தமிழரசன், கிருஷ்ணசாமி, கதிரவன் போன்ற ஜாதி கட்சி, ஜாதி அமைப்பு தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், தே.மு.தி.க., போன்ற பெரிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரும் பணிகள் ஒருபுறம் நடந்தாலும், சிறிய கட்சிகளுக்கு அ.தி.மு.க., கொடுக்கும் முக்கியத்துவம் அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து நோக்கப்படுகிறது.

               கடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் 20 தொகுதிகளை அ.தி.மு.க., கூட்டணி இழந்தது. சிறிய கட்சிகள் அணியில் இருந்திருந்தால், இது போன்ற தோல்விகள் தவிர்க்கப்பட்டு இருக்கும் என்று ஜெ., நினைக்கிறார். அதன் அடிப்படையில் தான், அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.மேலும், இத்தகைய சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டாலும், அவர்களை, "இரட்டை இலை' சின்னத்திலேயே போட்டியிட வைத்து, அதன் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்று அ.தி.மு.க., தலைமை கருதுகிறது.எது எப்படியோ, "கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்.

                      நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்' என்று தொண்டர்களுக்கு கோவையில் தெம்பளித்து விட்டு, தேர்தல் களத்தில் ஜெ., அதிரடியாக நகர்த்தும் காய்கள் அனைத்துக் கட்சிகளையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருப்பது நிஜம்.



0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP