அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ்

சென்னை :
""அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்,'' என அ.தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சூசகமாக பதிலளித்தார். பா.ம.க., தலைமை நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, குரு உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பா.ம.க. நிறுவனர்ராமதாஸ் கூறியதாவது:
குரு மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்து பேசினோம். இது அரசின் பழி வாங்கும் நடவடிக்கை. அவரை கொலை செய்ய கூலிப்படையினரை ஏவி விட்டுள்ளனர். அது குறித்து உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் போலீசார் தான் பொறுப்பு.கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு எனக்கு கொடுத்த அதிகாரத்தை, நிர்வாக குழுவும் அங்கீகரித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையில் மாற்று அணியென, காங்கிரசில் உள்ள, "வயதான' தலைவர்கள் பேசி கொண்டதை தான் நான் சொன்னேன். கூட்டணி குறித்து தி.மு.க., ஏதும் பேசவில்லை.அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்கிறீர்கள். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்.
கூலிப்படையினரை ஏவி விடுவதாக குற்றம் சாட்டும் நீங்கள், தி.மு.க.,வுடன் கூட்டணி வைப்பது சாத்தியமா என கேட்கிறீர்கள்.இது குறித்தும் நிர்வாக குழுவில் விரிவாக பேசினோம். கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு தரப்பட்டுள்ளது; கூட்டணியை நான் முடிவு செய்வேன்.பூரண மதுவிலக்கு வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆக., 15 அன்று கொடியேற்றும் முதல்வர், பூரண மதுவிலக்கு குறித்து அறிவிக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அரசு விரைவாக அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தும் "ஸ்டிரைக்'கிற்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. அவர்களை எந்த வகையிலும் அரசு பழி வாங்க கூடாது.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக