போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறியது திருச்சி

திருச்சி- தஞ்சாவூர் சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.
திருச்சி:
திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்திருந்ததால், மாநகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெரும்பாலான வாகனங்கள் திருச்சி மாநகருக்குள் அனுமதிக்கப்படாமல் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை 8 மணி முதலே தொண்டர்கள் திருச்சியில் குவியத் தொடங்கினர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் வரும் வாகனங்கள் மாநகர எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. மாநகரில் கே.கே.நகர், பொன்மலைப்பட்டி, முன்னாள் ராணுவ வீரர் காலனி, கரூர் புறவழிச் சாலை உள்ளிட்ட 10 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர்களின் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே, சென்னையைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் காலை 10.15 மணியளவில் அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகே வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஜி கார்னர் மைதானத்துக்குள் தங்களது வாகனத்தை அனுமதிக்க வேண்டும் எனக் கூறினர். ஆனால், போலீஸôர் அனுமதிக்கவில்லை. அம்பிகாபுரம் வழியாகச் சென்று பொன்மலைப்பட்டி பகுதியில் வாகனங்களை நிறுத்தும்படி போலீஸôர் கூறியதால், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தொண்டர்களில் 200-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள் அதிமுக தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற மைதானத்துக்கு நடந்து சென்றனர். இதனால், மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வாகனங்களை நிறுத்தி மறியல்: இதேபோல, திருவாரூர், தஞ்சாவூர் பகுதியில் இருந்து வந்த அதிமுக தொண்டர்களின் வாகனங்கள் அனைத்தும் அம்பிகாபுரம் வழியாக பொன்மலைப்பட்டிக்குச் செல்ல வேண்டும் என போலீசார் கூறினர். ஆனால், தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற மைதானப் பகுதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என போலீஸôரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர், தஞ்சாவூர்- திருச்சி சாலையில் எஸ்.ஐ.டி. பேருந்து நிறுத்தம் அருகே சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், போலீசார் அவர்களைச் சமரசம் செய்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நண்பகல் ஒரு மணி அளவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கனரக வாகனங்கள் மாநகரப் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதையைடுத்து, பஞ்சப்பூரில் இருந்து செந்தண்ணீர்புரம் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
தென் மாவட்டங்களில் இருந்து வந்த கனரக வாகனங்கள் அனைத்தும் துவரங்குறிச்சியில் இருந்து மணப்பாறை, குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாக சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன. இதேபோல, சென்னையில் இருந்து வந்த கனரக வாகனங்கள் அனைத்தும் பெரம்பலூரில் இருந்து முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாகத் திருப்பிவிடப்பட்டு தென் மாவட்டங்களுக்குச் சென்றன. சென்னை, பெரம்பலூர் பகுதிகளில் இருந்து வந்த பேருந்துகள் திருவானைக்கா, மாம்பழச்சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரை இயக்கப்பட்டன.
தென் மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வந்த பேருந்துகள் அனைத்தும் பஞ்சப்பூர், எடமலைப்பட்டிபுதூர் வழியாக மத்திய பேருந்து நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து திருச்சிக்கு வந்த பேருந்துகள் பிற்பகல் வரை காந்தி மார்க்கெட் வழியாக திருச்சிக்குள் அனுமதிக்கப்பட்டன. பின்னர், போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், அங்கிருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் காட்டூர் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக