திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராகிறது பாமக

ஓமலூர்:

              தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியாத நிலையிலும், எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று முடிவாகாத நிலையிலும் பாட்டாளி மக்கள் கட்சி, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

மைக்ரோ பிளானிங்: 

               2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக "மைக்ரோ பிளானிங்' என்ற புதிய திட்டத்தை ஏற்படுத்தி தனது பிரசார முறையை மாற்றிக் கொண்டு களத்தில் இறங்கியது.

                 இந்தத் திட்டப்படி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தலைமையில், சட்டப்பேரவை பாமக உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் குக்கிராமங்களுக்குச் சென்று மக்களோடு மக்களாக திண்ணையில் அமர்ந்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தனர். அப்போது, பாமக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று கூறி வாக்கு சேகரித்தனர்.

இப்போதும் அதே பாணி: 

                    இந்தத் தேர்தலில் பாமக வெற்றி பெற முடியாவிட்டாலும் இரண்டாவது இடத்தைப் பிடித்ததோடு தமிழக அரசியல் களத்தில் தன்னுடைய இருப்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டது. 

               இதற்கிடையே வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் தயாராகாத நிலையில் தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியை இப்போது தொடங்கியுள்ளது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பென்னாகரம் பார்முலா குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 

                இதன்படி, கட்சியை வளர்க்க வேண்டும் என்றால், 2011 பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்று ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால், பென்னாகரம் பார்முலாதான் கை கொடுக்கும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் பேசியுள்ளனர். இதையடுத்து கட்சியின் அனைத்து மேல்நிலைத் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களும் ஒரு பேரவைத் தொகுதியில் 4 நாள்கள் வீதம் முகாமிட்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, கிளைகளை ஒருங்கிணைத்தல், கட்சிக் கொடியேற்று விழாக்கள் நடத்துதல் உள்ளிட்ட வழக்கமான பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

சாதனைகளை விளக்கத் தயார்!  

                  அத்துடன் ஒவ்வொரு கிளையிலும் இளைஞர்களை குறிவைத்து இளைஞர், இளம்பெண்கள் அணியைத் தொடங்க உள்ளனர். கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்களும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும், குக்கிராமங்களிலும் பொதுமக்களைச் சந்தித்து டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் சாதனைகள், கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்க உள்ளனர். "மைக்ரோ பிளானிங்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் பாமக எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் இருந்தே தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்போது கட்சியில் இணையும் இளைஞர்களுக்கு ராமதாஸ் தலைமையில் தனியாக அரசியல் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அசைக்க முடியாத நம்பிக்கை: 

                    சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்தத் திட்டம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ. தமிழரசு, கட்சியின் புதிய திட்டம் மூலம் ஓமலூர் தொகுதியை மீண்டும் பாமக கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்களவைத் தொகுதி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை, "மைக்ரோ பிளானிங்' சரி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP