செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

அடுத்த முதல்வர் யார்? : தி.மு.க.வுக்கு சோனியா திடீர் நிபந்தனை!





                       சமீப சில நாட்களாக, கொஞ்சம் நிம்மதியும் கொஞ்சம் குழப்பமுமாகக் காட்சியளிக்கிறார்கள் தி.மு.க.வின் முக்கியத் தலைகள். நிம்மதிக்குக் காரணம்... ‘தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி தொடரும்’ என்று சோனியாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள். குழப்பத்திற்கு காரணம்..? அதே சோனியாவின் வாயிலிருந்து வந்த சில வார்த்தைகள்தான்!

அதற்குள் போகும் முன்பாக ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்...

                     கடந்த ஆண்டு மத்தியில், துணை முதல்வர் பதவியில் ஸ்டாலின் அமர்த்தப்பட்ட சில மாதங்களிலேயே, ‘முதல்வர் பதவியிலும் விரைவில் அமர வைக்கப்படுவார் ஸ்டாலின்’ என்ற எதிர்பார்ப்பு, சக அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மத்தியில் நிலவியது.

                       இதை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த காலக்கட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகள் சிலவற்றில் பேசிய கலைஞர், ‘நான் விட்டுச் செல்லும் பணியை எனக்குப் பின்னால் தம்பி ஸ்டாலின் தொடர்வார்’ என்றும், ‘விரைவில் நான் அரசியலை தவிர்த்த பொதுவாழ்க்கையில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போகிறேன்’ என்றெல்லாம் தொடர்ந்து பேசி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினார்.

 
                  கிட்டத்தட்ட இதே காலத்தில்தான் டெல்லி அரசியல் சுவைக்காத அழகிரி, மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பும் விருப்பத்தை கலைஞரிடம் கொஞ்சம் வலுவாகவே முன் வைத்தார். ஓய்வு பெறும் எண்ணத்தை சற்று தள்ளி வைக்கும் நிலைக்கு கலைஞரைத் தள்ளியது அழகிரியின் இந்த நிலைப்பாடு. அழகிரியின் விருப்பமும் முதல்வர் பதவியில் கலைஞர் நீடிக்க வேண்டும் என்பதுதான்.
 
                    நான்கு சுவற்றுக்குள் நடந்த இந்த ‘விருப்பங்களை’ பொதுக்கூட்ட மேடைகளில் போட்டுடைக்க ஆரம்பித்தார் அழகிரி. ‘ஆறாவது முறையும் கலைஞர்தான் முதல்வராவார்’ என்று போகும் இடமெல்லாம் பேசிப் பதியவைத்தார் அழகிரி. இந்த ஆண்டு மார்ச் மாதம் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அன்று இரவே அழகிரி உதிர்த்த வார்த்தைகள்தான் சுவாரஸ்யமானது.

                       ‘‘என் மகனின் திருமணம் வரும் நவம்பரில் ‘முதல்வர் கலைஞர்’ தலைமையில்தான் நடைபெறும்’’ என்று உறுதிபடச் சொன்னார் அழகிரி. அதாவது திருமணத்திற்கு சுமார் எட்டுமாதங்கள் இருக்கும்போதே, அப்போதும் முதல்வர், கலைஞர்தான் என்று சொல்லி திருமண அழைப்பிதழையும் அதன்படி எழுதச் சொன்னார் அழகிரி. ஒரு தந்தையாக இவரது இயல்பான ஆசைதான் இது. என்றாலும், ‘முதல்வர் பதவியிலிருந்து கலைஞர் இப்போது இறங்கமாட்டார் அல்லது இறங்கவிடமாட்டேன்’ என்ற அவரது எண்ண ஓட்டத்தை ஸ்டாலின் ஆதரவாளர்கள் கவனிக்காமலில்லை.

                       அதே மார்ச் மாதத்தில் வந்த தனது பிறந்த நாளன்று கலைஞரிடம் ஆசிபெறச் சென்ற ஸ்டாலின், இந்தப் பின்னணிகளை புரிந்துகொண்டு வெளிப்படையாகவே கலைஞரிடம் கொஞ்சம் கசப்பு காட்டியதாக தகவல் உண்டு. ஆனாலும் எதையும் போராடிப் பெறும் குணமில்லாத ஸ்டாலின், அதன் பின்பும் அமைதிகாத்தார். இந்தச் சூழலை பயன்படுத்திக்கொண்ட கலைஞர், ‘‘ஓய்வு பெறுவதாக நான் எப்போது சொன்னேன்?’’ என்று கேட்கும் அளவுக்கு தன் நிலையை மாற்றிக்கொண்டு கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தார்.

               இந்த நிலையில்தான் தி.மு.க.வின் சார்பில் அடுத்த முதல்வர் யார் என்ற விவாதம் மீண்டும் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. 
 
எப்படி..-? 
 
                கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தி.மு.க.வின் தூக்கத்தை ரொம்பவே கெடுத்து வருகிறார் இ.வி.கே.எஸ்.இளங்கோவன். நாளுக்கு நாள் தி.மு.க. மீதான அவரது தாக்குதல் அதிகமாகி, வாகை.முத்தழகன் விவகாரத்தில் உச்சத்தைத் தொட்டு, தனது உணர்வுகளை பொதுமேடையில் வெளியிட்டார் இளங்கோவன். இந்த நேரத்தில்தான் ரியாக்ஷன் காட்டியது தி.மு.க. ராஜீவ், ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்துப் பேசிய வாகை. முத்தழகனை தி.மு.க.விலிருந்து நீக்குவதாக அறிவித்த கலைஞர், அதே கையோடு டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு அனுப்பி சோனியாவைச் சந்திக்க வைத்தார்.

                    தி.மு.க & காங்கிரஸ் உறவை சீர்குலைக்கும் வகையில் இளங்கோவனின் பேச்சுக்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய பாலுவிடம், ‘கூட்டணி பற்றி சந்தேகம் வேண்டாம். வரும் தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை... கலைஞர்தான் முதல்வர் வேட்பாளர். வேறு யாரையும் காங்கிரஸ் ஏற்காது’ என்று சொல்லியிருக்கிறார் சோனியா. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கலைஞரை நேசிக்கும் லட்சோபலட்சம் உடன் பிறப்புகளுக்கு இதில் சந்தோஷம்தான். என்றாலும், இந்த நேரத்தில் இப்படி ஓர் அழுத்தத்தை காங்கிரஸ் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்ற குழப்பம் தி.மு.க. மேல் மட்டத்தில் பலரிடமும¢ காணப்படுகிறது.

                   ‘‘தலைவர் கலைஞர்தான் அடுத்த முதல்வர் என்பது தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டன் வரை எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துக்கூடிய விஷயம்தான். ஆனால்... கடந்த சில வாரங்களாக, தன் கட்சி முக்கியஸ்தர்களை விட்டே, ‘சரிபாதி இடங்கள் வேண்டும். ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு தொகுதிகள் வேண்டும். குறைந்தது எழுபது இடங்கள் வேண்டும்...’ என்றெல்லாம் பேச வைத்துவிட்டு, கலைஞர்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லுவதுதான் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

                ஒருவேளை, பின்னாளில் கலைஞர் ஓய்வு பெறும் சூழல் வந்தால், குட்டை குழம்பும்... அதில் மீன் பிடிக்கலாம் என்று காங்கிரஸ் தனது வழக்கமான சித்துவிளையாட்டை மனதில் வைத்து ஏதேனும் திட்டமிடுகிறதா என்பது புரியவில்லை’’ என்கிறார் ஒரு மூத்த அமைச்சர், குழப்பம் விலகாமலேயே.

                 ‘அடுத்த முதல்வரும் கலைஞர்தான்’ என்று உற்சாகத்துடன் சொல்லிவந்த அழகிரியையே கூட சோனியாவின் இந்த நிபந்தனை சற்று யோசிக்க வைத்திருக்கிறது என்கின்றன மதுரை பக்கம் இருந்து வரும் தகவல்கள்.

                   ‘சோனியாவின் திட்டம் எதுவாக இருந்தாலும், வரும் தேர்தலில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் தொடங்கியே தி.மு.க. தனது ராஜதந்திரத்தை திருப்பிக் காட்டும்’ என்பதே அறிவாலய வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் லேட்டஸ்ட் தகவல்!
 

1 கருத்துகள்:

பெயரில்லா,  9 செப்டம்பர், 2010 அன்று 8:16 PM  

WE WANT M.K ALAGRI AS A C.M

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP