வியாழன், 31 மார்ச், 2011

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: களத்தில் 2,773 வேட்பாளர்கள்




               தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தேர்தல் களத்தில் 2,773 வேட்பாளர்கள் உள்ளனர்.மொத்தமாக 313 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இந்தத் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார். 
 
                  தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்கியது. மார்ச் 26-ம் தேதி மனு தாக்கல் முடிந்தது.தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 228 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களது மனுக்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் பணி கடந்த திங்கள்கிழமை நடந்தது.மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி அறிவிக்கப்பட்டு இருந்தார். 
 
             மனுக்களில் அவர் கையெழுத்திடவில்லை என மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.இதையடுத்து, ஜெயந்தியின் மாற்று வேட்பாளராக மனு அளித்திருந்த கே.வீ.தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியின் வேட்பாளர் ஆனார். இதேபோன்று, வேதாரண்யம் தொகுதி பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சதாசிவத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக, அதே கட்சியைச் சேர்ந்த சின்னதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 4 ஆயிரத்து 228 வேட்பு மனுக்களில் 1,153 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
 
வேட்புமனுக்கள் வாபஸ்: 
 
                  பல தொகுதிகளில் கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்குப் போட்டியாக அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.போட்டியாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்த நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.ஹசீனா சையத் வாபஸ்: 3,075 மனுக்களில் 313 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான புதன்கிழமையின் கடைசி நேரத்தில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசீனா சையத் தனது மனுவை வாபஸ் பெற்றதால் மாற்று வேட்பாளரான அவரது கணவர் சையத் கியாஸ் வேட்பாளரானார்
 
.கை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு: 
 
              ஆனால், சையத் கியாஸýக்கு "கை' சின்னம் ஒதுக்குவதற்கு காங்கிரஸ் போட்டி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அதிகாரப்பூர்வ வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டால் மட்டுமே மாற்று வேட்பாளருக்கு அதே சின்னம் ஒதுக்கப்படும். ஹசீனா வாபஸ் பெற்றுள்ளதால் சையத்துக்கு "கை' சின்னம் ஒதுக்கக் கூடாது என்றும் கிருஷ்ணமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து இப் பிரச்னை குறித்து வியாழக்கிழமை காலை முடிவு எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
 
தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் விவரம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்தி:
 
                பேரவைத் தேர்தல் களத்தில் 2,773 வேட்பாளர்கள் உள்ளனர். 313 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.
 
அதிகபட்ச வேட்பாளர்: 
 
                அதிகபட்சமாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 31 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் நான்கு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
 
               திருப்பூர் வடக்குத் தொகுதியில் மொத்தமாக 151 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 81 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 60 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். அந்தத் தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
 
               ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து தொலைபேசி வழியாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. படிவம் 7-"ஏ'வை சரிபார்த்தபின்புதான் துல்லியமான தகவல் வியாழக்கிழமை கிடைக்கப் பெறும் என பிரவீண் குமார் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
                தே.மு.தி.க.வுக்கு முரசு: மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு, வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
                   விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.41 தொகுதிகளில் போட்டியிடும் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதிகளைத் தவிர்த்து, இதர தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சைகளுக்கு அந்தச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP