அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளில் 519 வாக்குச்சாவடிகள்
அரியலூர்:
அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 519 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், ஜயங்கொண்டம், அரியலூர் ஆகிய 3 தொகுதிகள் இருந்தன. இவற்றில் ஆண்டிமடத்தில் திமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ். சிவசங்கரும், அரியலூரில் காங்கிரஸ் சேர்ந்த பாளை து. அமரமூர்த்தியும், ஜயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு இப்போது திமுகவில் இணைந்துள்ள கே. ராஜேந்திரனும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளனர். இதில், தொகுதி மறுசீரமைப்பில் ஆண்டிமடம் தொகுதி நீக்கப்பட்டு, அந்தத் தொகுதியிலிருந்த கிராமங்கள் அரியலூர், ஜயங்கொண்டம் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் இறுதி பட்டியலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,06,821 ஆண் வாக்காளர்கள், 1,08,648 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,15,469 வாக்காளர்களும்,
ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,07,154 ஆண் வாக்காளர்கள், 1,06,871 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,14,025 வாக்காளர்களும் உள்ளனர்.
இந்த இரு தொகுதிகளிலும் சேர்த்து 2,13,975 ஆண் வாக்காளர்கள், 2,15,519 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 4,29,494 வாக்காளர்கள் உள்ளனர்.
அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளும், ஜயங்கொண்டம் தொகுதியில் 253 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 519 வாக்குச்சாவடிகள் அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
எம்எல்ஏ அலுவலகங்களுக்கு பூட்டு:
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், இப்போது பதவியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களைப் பூட்டி சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரியலூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகமும், விருத்தாசலம் சாலையில் உள்ள ஜயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகமும் மாவட்ட நிர்வாகத்தால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜயங்கொண்டம், திருமானூர், தா.பழூர், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய 6 ஒன்றியக் குழுத் தலைவர்கள் பயன்படுத்திய வாகனங்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு தீவிரம்:
அரியலூர், ஜயங்கொண்டம் தொகுதிகளுக்குள்பட்ட கிராமங்களில் எந்த கட்சியின் பேனர்களும் இருக்கக் கூடாது என்று அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட பகுதி அலுவலர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசு அலுவலகங்களில் சுவர் விளம்பரம் செய்யும் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால், இவ்விரு தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்கின்றனரா என்பதை கண்காணிக்கும் பணியிலும் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக