புதன், 2 மார்ச், 2011

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

சென்னை: 

            தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகள்:

பதட்டம் ஏற்படுத்தக் கூடாது:
- எந்த கட்சியும் அல்லது வேட்பாளரும் பற்பல சமய அல்லது மொழிச் சாதியினர், வகுப்பினரிடையே பரஸ்பர வெறுப்பினை, பதட்ட நிலையை உருவாக்குகிற எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.

- ஒரு கட்சி, பிற  அரசியல் கட்சிகள் பற்றி குறை கூறும்போது, அவர்களுடைய கொள்கைகள், திட்டம், கடந்த கால சாதனைகள், பணிகள் ஆகியவை பற்றி மட்டுமே குறை கூறுவதாக இருக்க வேண்டும்.

- வாக்கு பெறுவதற்காக சாதி, இன உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் எந்த வேண்டுகோளையும் விடுக்கக்கூடாது. மசூதிகள், மாதா கோவில்கள், கோவில்கள், வழிபாட்டிற்கான பிற இடங்களை தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தக்கூடாது.

- வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக் கோருதல், வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு முடிகிற 48 மணி நேர கால அளவில் பொதுக் கூட்டங்களை நடத்துதல், வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு போய்வர போக்குவரத்து  வசதி செய்து கொடுத்தல் போன்ற தேர்தல் சட்டத்தின்கீழ் "ஊழல்கள்'', "குற்றங்கள்'' என அமைகிற எல்லாச் செயல்களையும் அனைத்துக்கட்சிகளும், வேட்பாளர்களும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.

- அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் எவரும் அதனுடைய அல்லது அவர்களுடைய தொண்டர்களை எந்தவொரு தனி நபருடைய நிலம், கட்டிடம், மதில்சுவர் முதலியவற்றின் மீது அவருடைய அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், விளம்பரத் தட்டிகள் தொங்க விடுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், கோஷங்கள் எழுதுதல் முதலியவற்றுக்காகப் பயன்படுத்தக் கூடாது.

ஊர்வலத்தை தடுத்தல் கூடாது:

- ஓர் கட்சியின் கூட்டம் நடைபெற்று வருகிற இடத்தின் வழியாக மற்றொரு கட்சி ஊர்வலம் நடத்தக் கூடாது. ஒரு அரசியல் கட்சி ஒட்டுகிற சுவரொட்டிகளை மற்றோர் அரசியல் கட்சி அகற்றுவது கூடாது.

- ஊர்வலம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்கிற ஒரு கட்சி அல்லது வேட்பாளர், ஊர்வலம் தொடங்குகிற காலம், இடம், செல்ல இருக்கிற வழித்தடம், முடிவடைகின்ற நேரம், இடம் ஆகியவை குறித்து முன்னதாகவே முடிவு செய்து கொள்ள வேண்டும். சாதாரணமாக இம்முடிவை மாற்றக்கூடாது.

- ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்பவர்கள், போக்குவரத்திற்குத் தடை, தொந்தரவு ஏற்படாத வகையில் ஊர்வலம் தடையின்றிச் செல்வதற்குரிய ஏற்பாடுகளுக்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.

- ஊர்வலங்கள் இயன்றவரையில் சாலைக்கு வலதுபுறம் ஒழுங்காகச் செல்ல வேண்டும். மேலும் காவல் துறையினரின் கட்டளைகளையும் ஆலோசனைகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

- ஊர்வலத்தினர் தட்டிகள், கொடிக் கம்பங்கள் போன்ற பொருள்களை எடுத்துச் செல்லும்போது முக்கியமாக உணர்ச்சிவயப்படும் நேரங்களில் அப்பொருள்களை கெட்ட வழிகளில் பயன்படுத்தாதபடி அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ பெருமளவிற்கு கண்காணிக்க வேண்டும்.

- பிற அரசியல் கட்சியினரை அல்லது அவர்களுடைய தலைவர்களை குறிக்கிற கொடும்பாவிகளை இழுத்துச் செல்லுதல், பொது இடத்தில் அத்தகைய கொடும்பாவிகளை எரித்தல் போன்றவற்றிலும், இதுபோன்ற பிற நடவடிக்கைகளிலும் ஈடுபடுதலை குறித்து எந்தவொரு அரசியல் கட்சியும், அல்லது வேட்பாளரும் எண்ணிப் பார்க்கவே கூடாது.

- மைதானங்கள் முதலிய பொது இடங்களை தேர்தல் கூட்டம் நடத்துவதற்காக தனி உரிமையுடன் ஆளுங்கட்சியே பயன்படுத்தக்கூடாது. ஆளுங்கட்சி எந்த வரையறைகள், நிபந்தனைகளின் பேரில் பொது இடங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதே வரையறைகள், நிபந்தனைகளின் பேரில் பிற கட்சிகளும், வேட்பாளர்களும் அப்பொது இடங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

அரசு கெஸ்ட் ஹவுஸ்கள் அனைவருக்கும் பொது:

- ஓய்வு இல்லங்கள், பயணியர் மாளிகைகள் அல்லது ஏனைய அரசு குடியிருப்பை ஆட்சியில் இருக்கும் கட்சியினர் அல்லது அக்கட்சியின் வேட்பாளர்கள் மட்டுமே பயன்படுத்த கூடாது. அவற்றை ஏனைய கட்சியினரும், வேட்பாளர்களும் நியாயமான முறையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆனால் கட்சி அல்லது வேட்பாளர் எவரும் அவற்றை (வளாகம் உள்பட) தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு பிரசார அலுவலகமாக பயன்படுத்தவோ, பயன்படுத்திக் கொள்ளவோ, யாதொரு பொதுக்கூட்டத்தை நடத்தவோ அனுமதிக்கக் கூடாது.

- தேர்தல் நேரத்தில் செய்தித் தாள்களிலும், ஏனைய மக்கள் தொடர்பு அமைப்புகள் மூலமும், அரசு செலவில் விளம்பரங்கள் வெளியிடுதல், செய்தித் தாள்கள் ஏனைய மக்கள் தொடர்பு அமைப்புகளை ஆளுங்கட்சிக்கு சாதகமாக பயன்படுத்துவதும், அரசின் சாதனைகளை ஆளுங்கட்சியின் செல்வாக்கினை மேம்படுத்தும் நோக்குடன் விளம்பரப்படுத்துதல் ஆகியவை கவனமாக தவிர்க்கப்பட வேண்டும்.

- தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் நடப்பது பற்றி அறிவிப்பு வெளியிட்டது முதல், அமைச்சர்களும், பிற அதிகாரிகளும் அவர்களுடைய விருப்ப நிதிகளிலிருந்து மானியமோ, தொகைகளோ வழங்கக் கூடாது.

- தேர்தல் ஆணைக்குழு தேர்தலை அறிவித்தது முதல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக வாக்காளர்களை தூண்டும் வகையில் அமைச்சர்களும் பிற அதிகாரிகளும் இருக்க கூடாது.

வாக்கு தரக் கூடாது:

- ஏதேனும் ஒரு வகையில் மானியங்களை அறிவிக்கவோ, அது தொடர்பாக வாக்குறுதிகள் கொடுக்கவோ கூடாது.

- ஏதேனும் ஒரு வகைத்திட்டங்கள், செயல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் முதலானவற்றை செய்யக்கூடாது.

- சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதிகள் செய்து தருவது போன்றவை பற்றி வாக்குறுதி கொடுக்க கூடாது.

- அரசுப்பணியில், அரசு நிறுவனங்கள் முதலியவற்றில் தனிப்பட்ட நியமனம் எதனையும் செய்யக்கூடாது.

- மத்திய, மாநில அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் அல்லது வாக்குச்சீட்டு எண்ணும் இடத்திற்குள் நுழையக்கூடாது. வேட்பாளர், அனுமதி பெற்ற தேர்தல் ஏஜெண்டு என்கிற முறையில்தான் அவ்வாறு நுழையலாம். வாக்காளர் என்ற முறையில் குறிப்பிட்ட வாக்கு சாவடிக்குள் சென்றிடலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP