புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தவிப்பு
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் போட்டோ இல்லாத வாக்காளர் பட்டியல்தான் நடைமுறையில் இருந்தது. கள்ள ஓட்டு புகாரை தவிர்ப்பதற்காக இந்தமுறை புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
அதே போல் வாக்காளர்களுக்கு போட்டோ ஒட்டிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் நடந்த தேர்தல்களில் ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, பாஸ் போர்ட், உள்பட பல்வேறு ஆவணங்களை காட்டி ஓட்டுப் போடலாம் என்று தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. ஆனால் இந்த தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஓட்டுப் போட முடியும் என்று தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்து உள்ளது.தற்போது வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையில் பல குளறுபடிகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
போட்டோக்கள் மாற்றி ஒட்டப்பட்டும், பெயர்கள், முகவரிகள் மாறி இருப்ப தாகவும் கூறப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் முகாம்கள் நடைபெற்றன. அப்போது வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. பலருக்கு அடையாள அட்டை இல்லாததால் வீட்டுக்கு நேரில் வந்து ஊழியர்கள் கொடுப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நேரில் வந்து அடையாள அட்டை வழங்கினார்கள். பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை.
ஆண்கள் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு உள்பட போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து ஓட்டுப் போட்டு விடுவார்கள். ஆனால் எல்லா பெண்களுக்கும் டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு போன்ற அடையாள அட்டைகள் இருக்க வாய்ப்பு இல்லை.
பெரும்பாலானவர்களுக்கு இது போன்ற அடையாள அட்டைகள் எதுவும் கிடையாது. இதே போல் கிராமங்களில் வசிக்கும் பெண்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு போன்ற போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரே அத்தாட்சி போட்டோவுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைதான். அது 100 சதவீதம் முழுமையாக அனைவருக்கும் கிடைக்கவில்லை.
எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அடையாள அட்டை இல்லாததால் அவர்கள் இந்த தேர்தலில் ஓட்டுப் போட முடியுமா?
என்ற தவிப்பில் உள்ளார்கள். போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அருகில் உள்ள தேர்தல் பதிவு அலுவலகத்துக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அங்கு தயார் நிலையில் உள்ள அடையாள அட்டை மட்டுமே வழங்கப்படுகிறது.
அடையாள அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பம் செய்யலாமா?
அவ்வாறு விண்ணப்பம் செய்தால் உடனே கிடைக்குமா? என்பது பற்றி தேர்தல் கமிஷன் எதுவும் கூறவில்லை. இதனால் அடையாள அட்டை இல்லாதவர்கள் குறிப்பாக பெண்கள் கிராமப்புற வாக்காளர்கள் தவிப்பில் உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக