தமிழக சட்டமன்றத் தேர்தல் : திமுக சார்பில் போட்டியிட 9 ஆயிரத்த்துக்கும் அதிகமானோர் விருப்ப மனு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில் போட்டியிடக் கோரி விருப்ப மனு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறப்பட்டு வருகின்றன. மார்ச் 7ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், விருப்ப மனுக்கள் மார்ச் 5ம் தேதியுடன் முடிக்கப்பட்டு, 8ம் தேதி முதல் விருப்ப மனு பெற்றவர்களிடம் நேர்காணல் துவங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
மனு தாக்கல் செய்ய இரண்டு நாட்களே இருந்ததால், விருப்ப மனு தாக்கல் சுறுசுறுப்பு அடைந்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் மனு தாக்கல் செய்தனர். கடந்த ஏழு நாட்களில் மட்டும் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மதிவாணன், பெரிய கருப்பன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் இன்று விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் 9 ஆயிரம் பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக