தே.மு.தி.க. சார்பில் போட்டியிட பண்ருட்டி ராமச்சந்திரனிடம் விருப்ப மனு கொடுத்த விஜயகாந்த்
தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்பமனு தாக்கல் தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் தொடங்கியது. முதல் விருப்பமனுவை கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் தேர்தல் குழுவிடம் வழங்கினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 13 ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. தே.மு.தி.க., மார்ச் 2ந் தேதி முதல் விருப்ப மனுக்களை கொடுக்கலாம் என்று அறிவித்தது. இதன்படி தே.மு.தி.க. சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிட விரும்பிய அக்கட்சி நிர்வாகிகள் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் குவிந்தனர்.
தமிழ்நாட்டில் பொது தொகுதிகளுக்கான விண்ணப்பங்களுக்கு ரூ.10 ஆயிரமும், தனி தொகுதிகளுக்கான விண்ணப்பங்களுக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. புதுச்சேரியில், பொது தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.2,500 மும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதன்படி நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கு விருப்பமனுக்களை கொடுத்தனர். விருப்பமனுக்களை வாங்குவதற்காக தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது.
முதலாவதாக தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் தனது விருப்பமனுவை அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் விருப்ப மனுவை அளித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக