காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் துரைமுருகன் மீண்டும் போட்டி

துரைமுருகன்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தின் வி.ஐ.பி. தொகுதியான காட்பாடி தொகுதியில் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது .காட்பாடி சட்டப் பேரவை தொகுதி 1962-ல் குடியாத்தம் தொகுதியில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.
தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக விளங்கும் துரைமுருகன் 1971-ல் முதன்முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1977, 80 தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். அதில் 84-ல் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அடுத்து 89-ல் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக தி.மு.க. அமைச்சரவையில் பொதுப் பணித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
91-ல் நடந்த தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் 1996 தேர்தல் முதல் தொடர்ந்து 3 முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இம்முறையும் அவர் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் வகையில் இப்போதே தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.காட்பாடி தொகுதியில் 91 ஆயிரத்து 344 ஆண் வாக்காளர்களும், 93 ஆயிரத்து 906 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
அதிமுக போட்டி:
இத்தொகுதியில் முதன்முறையாக 1977-ல் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது. 80-ல் அதன் கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், 84, 91 தேர்தல்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன.96-ல் அ.தி.மு.க.வும், 2001-ல் அந்த அணியில் இடம்பெற்ற பா.ம.க.வும், 2006-ல் மீண்டும் அ.தி.மு.க.வும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவின. இத்தொகுதியை அ.தி.மு.க. அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எதுவும் கோரவில்லை. அ.தி.மு.க.வுக்கும் இத்தொகுதியில் செல்வாக்கு அதிகம் என்பதால், இம்முறையும் அ.தி.மு.க.வே போட்டியிடும் என்கின்றனர் அக்கட்சியினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக