திங்கள், 7 மார்ச், 2011

கோபி சட்டமன்றத் தொகுதியில் செங்கோட்டையனை எதிர்த்து போட்டியிட 50 பேர் மனு


கோபிசெட்டிபாளையம் :

          கோபி சட்டசபை தொகுதியில் சீட் கேட்டு, 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கட்சி தலைமையிடம் விருப்ப மனு கொடுத்துள்ளனர். தி.மு.க.,வினரிடையே ஏற்பட்ட திடீர் எழுச்சியால், அ.தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

               ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்திலேயே மிகவும் முக்கியமான தொகுதியாக இருப்பது கோபி சட்டசபை தொகுதி. அ.தி.மு.க., முன்னணி தலைவர்களில் ஒருவரும், தலைமை நிலைய செயலருமான செங்கோட்டையன், ஐந்து முறை கோபி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 1957 முதல் 2006 வரை நடந்த 12 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஏழு முறையும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க., தலா இரண்டு முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

                எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு அ.தி.மு.க., இரண்டு அணியாக போட்டியிட்ட போது, அ.தி.மு.க., (ஜெ.,) சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையனே வெற்றி பெற்றார். இதனால், கோபி தொகுதியை "அ.தி.மு.க.,வின் கோட்டை' என, அக்கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர். 2006 தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட 20க்கும் குறைவான தி.மு.க.,வினர்தான் விருப்ப மனு அளித்தனர். கோபியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன், தி.மு.க., வேட்பாளர் மணிமாறனை விட 4,019 ஓட்டுக்கள் அதிகம் பெற்று மயிரிழையில் வெற்றி பெற்றார். 

                2009 லோக்சபா தேர்தலில், திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வெற்றி பெற்றார். ஆனால், கோபி சட்டசபை தொகுதியில் அவருக்கு 1,288 ஓட்டுக்கள் குறைவாகவே கிடைத்தன. ஒன்பதரை ஆண்டுகளாக அ.தி.மு.க., பொறுப்பில் உள்ள கோபி நகராட்சி பகுதியிலும், அ.தி.மு.க.,வுக்கு, 1,800 ஓட்டுக்கள் குறைவாகத்தான் விழுந்தன. இதனால், செங்கோட்டையன் உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தி.மு.க.,வினர் அப்போதே கோபி தொகுதி மீது கண் வைக்கத் துவங்கினர்.

                   தொகுதிகள் மறுசீரமைப்பில் சத்தி தொகுதி கலைக்கப்பட்டது; பவானிசாகர் தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. பவானிசாகர், சத்தி தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சுப்பிரமணியம், தர்மலிங்கம் ஆகியோரும் கோபி தொகுதியில் "சீட்' கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளனர். கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், பவானிசாகர் மற்றும் சத்தி பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், கோபி சட்டசபை தொகுதியில் "சீட்' கேட்டுள்ளனர். செங்கோட்டையனின் சொந்த ஊரான குள்ளம்பாளையம் பகுதி தி.மு.க., கிளை தலைவர் விஸ்வநாதனும், "சீட்' கேட்டுள்ளார்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP